சம்மர் டூர் : பசுமை நிறைந்த சாத்தனூர் அணை
இயற்கை எழிலும் ஆன்மீகமும் இரண்டற கலந்த மாவட்டம் திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோயில், ஆசிரமங்கள், பொன்விழா கண்ட சாத்தனூர் அணை, பசுமை கொஞ்சும் ஜவ்வாதுமலை, பீமன் நீர்வீழ்ச்சி என மனதுக்கு இதமளிக்கும் சுற்றுலா தலங்கள் பல உள்ளன.
கோயில், ஆசிரமங்கள்
அண்ணாமலையார் கோயில் உலகப் புகழ் பெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையும் வரலாற்று பெருமையும் கொண்டது. இக்கோயிலின் ஆன்மிக சிறப்பும், கலை நயமும் காண்போரின் உள்ளத்தை கவர்ந்திழுக்கும். வானுயர்ந்து நிற்கும் கோபுரங்கள், கல்யாண மண்டபத்தில் காணப்படும் மூலிகை ஓவியங்கள், ஆயிரங்கால் மண்டபம் என வியப்பூட்டும் அம்சங்கள் ஏராளம். கார்த்திகை தீப விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். கிரிவலமும் பிரசித்தமானது. மாதந்தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் மலையை வலம் வருகின்றனர். மேலும் ரமண மகரிஷி ஆசிரமம், விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், மகான் சேஷாத்திரி ஆசிரமம் ஆகியவை அண்ணாமலையார் கோயிலுக்கு அருகே கிரிவலப்பாதையில் அமைந்துள்ளன. இங்கு வந்து தியானம் செய்வது மனதுக்கு இதமளிக்கும். இதற்காகவே பயணிகள் குவிகிறார்கள்.
சாத்தனூர் அணை
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை தொடர்ச்சியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது சாத்தனூர் அணை. திருவண்ணாமலையில் இருந்து 32 கி.மீ தூரம். அந்தக் காலத்து சினிமாவில் டூயட் பாட்டு என்றால், இந்த அணைதான் சிறந்த லொகேஷன். 500க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளது. 119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவும் கொண்ட பிரமாண்டமான அணையில், படகு சவாரி வசதியும் உள்ளது. பேட்டரி காரில் பயணம் செய்து அணையை சுற்றிப் பார்க்கலாம்.
50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த பூங்கா உள்ளது. அணையில் குளிக்க அனுமதியில்லை. அந்தக் குறையை போக்க அருகிலேயே நீச்சல் குளம். பலவகை முதலைகளை உள்ளடக்கிய மிகப்பெரிய முதலைப் பண்ணையும் இங்கு அமைந்துள்ளது. சுமார் 300 முதலைகள் பண்ணையில் உள்ளன. அணையை சுற்றிப் பார்க்கவும், முதலைப்பண்ணைக்கும் கட்டணம் உண்டு. இங்கு சுடச்சுட வறுத்து விற்கப்படும் மீனுக்கு ஏக கிராக்கி. சைவ, அசைவ உணவகங்கள், தங்குவதற்கு குறைவான கட்டணத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதி உள்ளது. திருவண்ணாமலை, செங்கம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சாத்தனூர் அணைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
ஜம்னாமரத்தூர்
ஜவ்வாதுமலையின் உச்சியில் அமைந்துள்ள ஜம்னாமரத்தூர் மலை கிராமத்தில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்கா, கோலப்பன் ஏரியில் படகு சவாரி என சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. இங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் சுகமே தனி என்பதாலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள்.
திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆலங்காயம், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து நேரடி பஸ் வசதி உண்டு. திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலை 80 கி.மீ தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள போளூரில் இருந்து மலை உச்சிக்கு செல்ல 42 கி.மீ பயணம் செய்ய வேண்டும்.
படைவீடு
சம்புவராய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இடம் படைவீடு. தி.மலை - வேலூர் சாலையில் சந்தவாசலில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் படைவீடு அமைந்திருக்கிறது. பிரசித்தி பெற்ற படைவீடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில், ஆன்மீக சுற்றுலா பயணிகளை கவரும். இதன் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகும்.
தென்னகத்து பூரி
வந்தவாசியில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் தென்னாங்கூர் கிராமம் உள்ளது. இங்கு பாண்டுரங்கன் - ரகுமாயி கோயில் அமைந்துள்ளது. இது தென்னகத்து பூரி ஜெகந்நாதர் ஆலயம் என பக்தர்களால் பெருமையாக அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது
செஞ்சிக் கோட்டை. பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.
பஸ்வசதி
சென்னையில் இருந்து 187 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 205 கி.மீ, வேலூரில் இருந்த 80 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 103 கி.மீ., விழுப்புரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலை உள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி பஸ் வசதி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக