செவ்வாய், 31 மார்ச், 2020

குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்!

குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்!


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity Power) குறைவாக இருந்தால், அடிக்கடி இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என நோவுகள் ஏற்படும். மழைக்காலம் , குழந்தைகளுக்கு நோய்த்தாக்குதல் மேலும் அதிகரிக்கும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கிருமி, தொற்றுகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் ஆரோக்கிய மந்திரம்.
”இந்த ‘சூப்பர் பவர்’ உணவுகளை தினமும் குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலம்பெற்று, நோவுகள் அண்டாமல் தடுக்க உதவும்” என்று சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் தரும் ஃபுட் சார்ட் இதோ…
1. கீரை வகைகள்
வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.
2. காய்கறிகள்
உங்கள் குழந்தைகளின் தட்டில் காய்கறிகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். முக்கியமாக, பீட்ரூட், கத்தரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை. பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது. மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சூப் ஆகச் செய்து காலையில் அல்லது மாலையில் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க, ‘ரெசிஸ்டன்சி பவர்’ அதிகரிக்கும். அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன், எழும்பு சூப் நல்ல சாய்ஸ்.
3. தயிர்
தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும், இதனால் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ப்ளர் மோர் குடிக்கக் கொடுக்கலாம்.
4. பழ வகைகள்
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை என்றுதான் பொதுவாக பழங்கள் வாங்குகிறோம். அத்தோடு வைட்டமின் சி இருக்கும் பழங்களையும் அதிகளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பப்பாளி மற்றும் நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழவகைகளில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும், பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.
5. நட்ஸ்
பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர, நோய் எதிர்பு சக்தி சீராக வளரும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடித்து, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக