வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது எப்படி?
'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் பெரும்பாலான ஊழியர்களை, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா பீதியால் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலையில், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே கருதப்படுகின்றனர்.
அதேநேரத்தில், 'டிவி' பார்க்காமல், குழந்தைகளுடன் விளையாடாமல், வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது சாத்தியமா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, எளிதான ஆறு வழிகள் உள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா...
நேரம் முக்கியம்!
1.
வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவதற்கான நேரம் எது என்பதை, முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள்.
'டிவி' பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, உணவு சாப்பிடு வது ஆகியவற்றுக்கான நேரம் எது என்பதை, முன் கூட்டியே முடிவு செய்து, வேலை நேரத்தை சரியாக திட்டமிட்டு, அந்த குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்ற முயற்சிக்கலாம்.
உங்களின் வழக்கமான வீட்டு வேலைகளால், அலுவலகத்துக்காக பணியாற்றும் நேரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நண்பருடன் இணைந்து வீட்டில் தங்கியிருப்பவர் என்றால், அவர் பணியாற்றும் நேரம் எது, நீங்கள் பணியாற்றும் நேரம் எது என்பதை, இருவரும் முன் கூட்டியே பேசி முடிவெடுப்பது நல்லது.
2.
வீட்டில், நீங்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற இடத்தை, சரியாக திட்டமிட்டு தேர்வு செய்யுங்கள்.
முதுகு, கழுத்து வலி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கு ஏற்ற நாற்காலி அல்லது இருக்கையை வாங்குவது நல்லது.
நீங்கள் பணியாற்றும் இடத்தில் விளக்கு வெளிச்சம் எப்படி இருக்கிறது என்பதும் மிக முக்கியமான விஷயம்.
உங்களுக்கு முன் புறம் அல்லது உங்களுக்கு அருகில் மிகவும் பிரகாசமான வெளிச்சம் தரக் கூடிய விளக்குகள் இல்லாமல் இருப்புது நல்லது.
வீட்டிலிருந்து பணியாற்றும்போது, உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறதா என்பதை, யாரும் கவனிக்கப் போவது இல்லை.
3.
'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பது, நம் முன்னோர்கள் கூறியுள்ள பழமொழி.
'வீட்டில் இருந்தபடி தானே பணியாற்றுகிறோம்;
அதனால், நைட்டி, அழுக்கு பைஜாமா, பனியன் போன்றவற்றை அணியலாம்' என, நீங்கள் நினைப்பது தவறு.
அது, உங்களுக்கு கடமை உணர்வு அல்லது பணியாற்றும் திருப்தியை தராமல் போகலாம்.
எனவே, உடலின் மேல் பகுதியில் அணியும் உடை, நாகரிகமான முறையில் இருப்பது நல்லது.
'வெப் கேமரா' மூலமாக, உங்கள் உயர் அதிகாரி பார்த்தாலும், உங்களின் மேல் புறத்தை மட்டுமே பார்க்க முடியும்.
4 .
வீட்டிலிருந்து பணியாற்றும் போது, கவனச் சிதறல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
பக்கத்து அறையிலிருந்து கேட்கும், 'டிவி' சத்தத்தால், பணியிலிருந்து உங்களின் கவனம் திசை மாறாலாம்.
எனவே, வெளியிலிருந்து வரும் சத்தங்கள், உங்கள் கவனத்தை திசை திருப்பாதபடி, 'ஹெட்போன்' அணிவது நல்லது.
அந்த ஹெட்போனுக்கு, இணைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம்.
5.
குழந்தைகள், மனைவி அல்லது கணவர், செல்லப் பிராணிகளால், உங்கள் பணிக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ளவர்களிடம், 'எனக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, தெளிவாகவும், உறுதியாகவும் முன் கூட்டியே கூறி விடுங்கள்.
உங்களை அணுகுவதற்கு, குடும்பத்தினருக்கான வரையறை அல்லது எல்லை எது என்பதை, தெளிவாக கூறி விடுங்கள்.
'எங்கள் நிறுவனம், என்னிடமிருந்து இன்று, இந்த பணியை எதிர்பார்க்கிறது. அதை செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பு வேண்டும்' என, கூறி விடுங்கள்.
6.
வீட்டிலிருந்து பணியாற்றுவதால், ஓட்டல், பார் ஆகியவற்றுக்கு செல்ல முடியாது என்பது உண்மை தான்.
அதற்காக, தனிமையாக இருப்பதாக கருதக் கூடாது. நண்பர்கள், உறவினர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, 'வீடியோ கால்' மூலமாக, அரட்டை அடிக்கலாம்.
இதற்காக, பிரத்யேகமாக சில, 'ஆப்'களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக