திங்கள், 16 மார்ச், 2020

சில்லுன்னு இருக்க சிம்லா பயணிப்போம்



சில்லுன்னு இருக்க சிம்லா பயணிப்போம்
கோடைக்கேற்ற சுற்றுலா தலம் என்றால் அனைவரும் போக விரும்புவது சிம்லா. ஒவ்வொரு கோடை சீசனிலும் சிம்லாவிற்கு சென்று வருகிறவர்கள் உள்ளனர். சிம்லா கோடை வாசஸ்தலத்தில் சிறப்பிடம் பெற்று விளங்க காரணமாய் அமைவது பனி சிகரங்களும், அடிக்கடி நிகழும் வெண்பனி பொழிவுகளும்தான்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக சிம்லா இருந்துள்ளது. தன் வாழ்நாள் கனவாக சிம்லா சென்று வரவேண்டும் என நினைக்கும் பலர் உள்ளனர். இன்னும் சிலர் சிம்லா ஏதோ அந்நிய தேசத்து அற்புத நகரம் என்று கூட வியப்பில் ஆழ்வர். எப்படியோ சுற்றுலா செல்ல நினைத்தாலே முதலில் வந்து நிற்பது சிம்லாவின் எழில் கொஞ்சும் இனிமை தேசங்கள்தான்.
இமாசல பிரதேச மாநிலத்தின் தலைநகராக விளங்கும் சிம்லாவில் இயற்கை எழிலும், பனிபடலும் மலை சிகரங்களும் சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்களாக திகழ்கின்றன. பழமையின் நினைவு சின்னமாய் பல கட்டிடங்களை கொண்ட பிரதேசமாகவும் சிம்லா திகழ்கிறது.
சிம்லாவில் ரசிக்க வேண்டிய இடங்கள்:
இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான பனிச்சூழ்ந்த சிம்லா முழுவதுமே பார்க்க வேண்டிய இடம்தான். ஆயினும் அதில் முக்கியமான இடங்கள் பார்க்க வேண்டியவையாகும். மிக பழமையான தேவாலயமான கிறிஸ்ட் தேவாலயம், ஜகூ அனுமார் ஆலயம், சிம்லா ரிட்ஜ், சிம்லா அரசு அருங்காட்சியகம், பனிசறுக்கு விளையாட்டு கூடம் என பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.
சிம்லா நகர வீதிகளில் அழகிய பயணம்:
சிம்லாவில் முக்கிய வணிகத்தெருக்களான மால் ரோடு, லக்கர் பஜார், லோயர் பஜார் போன்றவை மிக அழகாகவும், அங்கு கிடைக்கும் வித்தியாச பொருட்களின் கடை வீதியாகவும் திகழ்ந்தன. நகரத்தின் மையப்பகுதியில் உள்ள வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா மாநில அரசு அருங்காட்சியகம் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள்.

கோவில்கள் பல நிறைந்த சிம்லாவில் ஜக்கு ஆஞ்சநேயர் கோயில், தாராதேவி கோயில், வைஷ்ணவி தேவி கோவில் மிக பிரசித்தி பெற்றவை தாராதேவி ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 1,851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சிம்லாவை சுற்றியுள்ள சிறப்புமிக்க நகரங்கள்:
சிம்லாவை சுற்றியுள்ள சில புகழ்பெற்ற நகரங்களான ஓம்மர் ஹில், நலிடேஹ்ரா, நர்கண்டா, சைல், மஷோப்ராகாடுகள், ஃபாடு, குஃப்ரி போன்றவை புகழ்பெற்ற பனிமலைகள் நிறைந்த சுற்றுலா தலங்கள் ஆகும்.
இதில் சம்மர் ஷில்-யில் தான் இமாச்சல பிரதேச பல்கலைகழகம் உள்ளது.
சைலில் தான் உலகிலேயே அதிக உயரத்தில் உள்ள கிரிக்கெட் ஆடுகளம் உள்ளது.
நலிடேஹ்ராவில்  கோல்ட் கிளப் உள்ளது. இங்கு ஜூன் மாதம் ஆண்டு தோறும் சிப்பி திருவிழா நடைபெறும்.
பனிசாகச விளையாட்டு தலங்கள் நிறைந்த குஃப்ரி:
சிம்லாவில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ல குஃப்ரி நகரில் தான் பன்னாட்டு பனிச்சறுக்கு விளையாட்டு திருவிழா நடைபெறும். இங்குள்ள ஹிமாலயன் இயற்கை பூங்கா மிக அழகிய விலங்குகள் சரணாலயமாகும். பனிபிரதேச விலங்குகளான போலார் பியர், பனிச்சிறுத்தை போன்ற அரிய வகை விலங்குகளை காணமுடியும்.
பச்சை பள்ளதாக்கு, ஆப்பிள் தோட்டங்கள், கோல்ப் மைதானங்கள், பனி மலையில் குதிரை மேல் சவாரி செய்து கொண்டே மற்ற பனிமலைகளை கானும் வாய்ப்பு என சிம்லா சிலிர்க்க வைக்கிறது.
சிம்லாவில் உள்ள கின்னஸ் சாதனை ரயில் பாதை:
சிம்லாவிற்கு ரயில் பாதையின் மூலம் செல்ல வேண்டும் என்றால் மிகக்குறுகிய ரயில் பாதை மூலமே பயணிக்க முடியும். கலிகா எனும் ரயில் நிலையத்தில் இருந்து செங்குத்தான சிம்லா நகரை நோக்கி ரயில் பயணம் தொடங்கும். 96 கி.மீ தூரத்திற்கு செல்ல இந்த பரவச பயணம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மலை ரயில் போல் சிம்லா பனி மலை ரயில் பாதை குளுகுளு அனுபவத்தை கூடுதல் பிரவசத்துடன் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக