வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பெண்களின் பேன்ட்டீஸ்


பெண்களின் பேன்ட்டீஸ்

"My friends told me my panty line was visible,
so I went without."
Helena Christensen, Danish Model
பேன்ட்டீஸ் என்பது இடுப்பின் கீழ்ப்பகுதியில் பெண்கள் அணியும் ஓர் உள்ளாடை. சுருக்கமாக, ‘பெண்களின் ஜட்டி’! பொதுவாக சமூக நாசூக்கு பேணும் நோக்கிற்காக, நாகரிக அடையாளமாக, சுகாதாரத்திற்காக பெண்கள் பேன்ட்டீஸ் அணிகிறார்கள்.
‘லிங்கரி’ என்ற சொல் ப்ரேஸியர், பேன்ட்டீஸ், ஸ்டாக்கிங் உள்ளிட்ட பெண்களின் உள்ளாடைகளைக் கூட்டாகக் குறிக்கிறது. ஸ்டாக்கிங் என்பது உடலை ஒட்டி தொடை முதல் பாதம் வரை நீளும் சாக்ஸ் உள்ளாடை (‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் ‘சந்திப்போமா’ பாடலில் த்ரிஷா ஸ்டாக்கிங் அணியும் காட்சி உண்டு).
ஆடை என்ன என்பதைப் பொறுத்தே உள்ளாடை தீர்மானிக்கப்படுகிறது. ஸ்கர்ட் என்றால் ஸ்டாக்கிங் உடன் பேன்ட்டீஸ்; புடவை, பாவாடை தாவணி, நைட்டிக்கு உள்பாவாடை சேர்த்து பேன்ட்டீஸ்; சுடிதார், லெக்கின்ஸ், ஜீன்ஸ் பேன்ட் எனில் பேன்ட்டீஸ் மட்டும். ஸ்டாக்கிங் மேற்கு நாடுகளில் சகஜம்; தற்போது இங்கேயும்.
பேன்ட்டீஸின் பல்வேறு வடிவங்களை ஆதிகாலம்தொட்டே பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பண்டைய எகிப்திய பெண்கள் ‘லாயின்க்ளாத்’ என்ற வஸ்துவை உள்ளாடையாக அணிந்தார்கள். ஒரு முக்கோண வடிவ லினன் துணி. முக்கோண அடிப்பாகம் மேலிருப்பது போல் இடுப்பின் பின்புறம் வைத்து, இரு முனைகளையும் முன்னால் கொண்டு வந்து சேர்த்துக் கட்டுவார்கள். மூன்றாவது முனையைக் கால்களிடை இழுத்து முன்பக்கத்துடன் சேர்த்து முடிச்சிடுவார்கள். நம்மூர் கோவணத்தின் ரிவர்ஸ் வெர்ஷன்!
கிபி 100ல் ரோமானியப் பெண்கள் ‘ஸப்லிகாகுளம்’ என்ற உள்ளாடை அணிந்தனர். கிபி 400ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பிரபல ரோமானிய மொஸைக்கில் இருக்கும் பெண்கள், பிகினி அல்லது ஜட்டி போன்ற உள்ளாடைகள் அணிந்திருக்கிறார்கள். 1474ல் பதிப்பிக்கப்பட்ட கியோவன்னி பொக்காஸியோ என்பவரின் ‘On Famous Women’ புத்தகத்தில் அஸ்ஸிரியர்களின் ராணி செமிராமிஸ், அண்டர்பேன்ட் உள்ளாடை அணிந்த சேடியர் இருவருடன் அமர்ந்திருக்கும் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது. 1591 முதல் 1595 வரை ஐரோப்பாவில் சுற்றித் திரிந்த ஆங்கிலேயரான ஃபைனஸ் மாரிஸன் இத்தாலியப் பெண்களைப் பற்றி இப்படி எழுதுகிறார்: ‘கன்னிப் பெண்கள், உயர்குடியினர் கவுனுக்குள் பட்டு, லினன் உள்ளாடைகள் அணிந்திருந்தனர்!’
1603ல் முதலாம் எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கின்போது வரையப்பட்ட ஓவியத்தில், ராணி உள்ளாடை அணிந்திருக்கிறார். ‘ராணியை ட்ராயருடன் ஓவியமாய் வரைய’ ஜான் கோல்ட்டுக்கு 10 பவுண்டு பணம் தரப்பட்டதாக அரசாங்கக் கணக்குகள் பதியப்படும் ‘ Accounts of the Great Wardrobe' சொல்கிறது .


17ம் நூற்றாண்டில் கம்பிச் சட்டகம், திமிங்கலப்பற்களில் செய்த ‘ஃபார்த்திங்கேல்’ என்ற உள்ளாடையை அணிந்தனர். இதன் மலிவுப் பதிப்பு, பம் ரோல். இவற்றை இடுப்பைச் சுற்றி அணிந்தனர். பணக்காரப் பெண்கள் பட்டு ஸ்டாக்கிங் அணிந்தனர். 18ம் நூற்றாண்டில் பிரான்ஸ் அரசி கேத்ரீன் டி மெடிஸி, காலைத் தூக்கிக் குதிரையேறும்போது கௌரவம் குலையாமல் இருக்க, பேன்ட்களால் ஆன உள்ளாடை அணிந்தார். அதுதான் முதல் நவீன பேன்ட்டீஸ் முயற்சி.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் நைட்டி கொஞ்சம் சிம்மீஸ் கலந்த மேல் உள்ளாடையுடன், டிராயர் என்ற கீழ் உள்ளாடையும் புழக்கத்தில் இருந்தது. பெண்கள் ஸ்கர்ட்டுக்குள் ஒரு ஜோடி தொளதொள பேன்ட்கள் முட்டியின் கீழ் வரை நீண்டிருக்கும். ஆச்சரியம் என்னவெனில், இரு பேன்ட்களும் தனித்தனியானவை; இணைப்பு எதுவும் கிடையாது. இரண்டையும் ஒவ்வொன்றாக அணிய வேண்டும். நல்ல காற்றோட்டமாய் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி விட்டிருந்தார்கள். இப்போதும் ஒற்றை உள்ளாடையை ‘பேன்ட்டீஸ்’ என்று பன்மையில் அழைக்க இதுதான் காரணம். அதாவது உள்ளாடை என்பது இரு பேன்ட்கள்!
19ம் நூற்றாண்டில் ஃப்ரில்ஸ் வைத்த நீண்ட உள்ளாடைகள் பயன்படுத்தினார்கள். அதன் பெயர் பேண்டலெட்ஸ். மெடிஸி பயன்படுத்திய உள்ளாடையின் நீட்சியே இது. பிரான்ஸில் அறிமுகமாகிப் பின் பிரிட்டன், அமெரிக்காவிலும் பரவியது. பேண்டலெட்ஸில் இரண்டு பேன்ட்களை பட்டன் அல்லது கயிறு கொண்டு இணைத்தார்கள். இளம் பெண்கள் இதைப் பயன்படுத்தினார்கள்.
எலிசபெத் மில்லர் பெண்களுக்கான லூஸான டிரவுஸர்களை உருவாக்கினார். 1849ல் மேலியா ப்ளூமர் என்பவர் இதைப் பிரபலப்படுத்தினார். பின்னர் இவை அவர் பெயரிலேயே ‘ப்ளூமர்ஸ்’ என அழைக்கப்படலாயிற்று. இக்கால பேகி பேன்ட்கள் போன்றவை இவை. நிக்கர் மற்றும் நிக்கர்பாக்கர் என்றும் இவற்றை அழைத்தனர். விக்டோரியன் காலத்தில் விளையாட்டு நிகழ்வுகளின்போது பெண்கள் இவற்றை அணிந்தனர். 1860களில் பெண்கள் பல வண்ண டிராயர்கள் அணிந்தனர். ஆனாலும் வெள்ளைதான் பிரபலம். இப்போதும் மிகப் பிரபலமான பேன்ட்டீஸ் நிறம் வெள்ளைதான். இரண்டாவது தந்த நிறம்.
19ம் நூற்றாண்டின் இறுதியில் டிராயர்களில் லேஸ், பேண்ட் எல்லாம் வைத்து அலங்காரங்கள் செய்தனர். குளிர் காலத்தில் கம்பளி நிக்கர் அணிந்தனர். 1900ல் சில ஏழைப்பெண்கள் மாவு வைக்கும் சாக்குகளை நிக்கர்களாகப் பயன்படுத்தினர். 1910ல் நிக்கர் முதன்முதலாக செயற்கைப் பட்டு என்றழைக்கப்படும் ரேயானில் செய்யப்பட்டது. 1912ல் அமெரிக்காவில் லிண்ட்ஸே போட்ரியாக்ஸ் என்ற பெண் ‘லேனியூ’ என்ற கம்பெனியைத் துவக்கினார். முதல் உள்ளாடை டிசைனர் இவர்!
பாரிஸில் கான்கன் என்ற நடனம் ஆடும் பெண்கள், தம் தொழில் நிமித்தம் (கால்களைத் தூக்கி ஆடுவதால்) டிராயர்களில் தனித்தனியாய் இருந்த இரண்டு பேன்ட்களையும் ஒன்றாக இணைத்துத் தைத்துப் பயன்படுத்தினர். அதோடு அவற்றின் நீளத்தையும் கணிசமாகக் குறைந்தனர். ஸ்கர்ட்கள் கணுக்காலிலிருந்து முட்டிக்கு உயர, பேன்ட்டீஸ் முட்டியிலிருந்து தொடைக்கு உயர்ந்தது. தரமும், பயன்பாடும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஃபேஷனும் சொகுசும் முக்கியத்துவம் பெற்றன. முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய வியாபாரமும் விளம்பரமும் உச்சத்தில் இருந்தது இதற்கு முக்கியக் காரணம்!
1930ல் ஆப்ரம் நாதனியல் ஸ்பேனல், ‘இண்டர்நேஷனல் டேலக்ஸ்’ கம்பெனியைத் (தற்போதைய ப்ளேடெக்ஸ்) துவக்கி, லேடக்ஸ் பேன்ட்டீஸ்களைத் தயாரித்து 5 டாலர்களுக்கு விற்றார். அப்போது பலருக்கு ஒரு நாள் சம்பாத்யமே அதுதான். 1939ல் முதன்முறையாக பேன்ட்டீஸ் விளம்பரம் நியூயார்க்கில் வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர்க்கால பொருளாதார நெருக்கடியால், இங்கிலாந்தில் உடைகளுக்கு கட்டுப்பாடு வந்தது. ஃபேஷனுக்கும் ரேஷனுக்குமான போட்டி அது!
1950களில் எலாஸ்டிக் பேன்ட்டீஸ் அறிமுகமானது. 1959ல் க்ளென் ரேவன் மில்ஸ் என்பவர் பேண்டிஹோஸை (டைட்ஸ்) அறிமுகப்படுத்தினார். நைலானால் ஆன மிக இறுக்கமான உள்ளாடையான இது, இடுப்பில் தொடங்கி பாதம் வரை நீண்டது. இதனை அமெரிக்காவில் ஸ்டாக்கிங்குக்கு மாற்றாகப் பயன்படுத்தினர். ஆடையாகவும் உள்ளாடையாகவும் இதை உடற்பயிற்சி செய்யும் பெண்கள் அணிந்தனர்.
1960களில் காட்டன் பேன்ட்டீஸ் இளம் பெண்கள் மத்தியில் பிரபலமானது. பென்சில் ஸ்கர்ட்களைத் தாண்டி ஜீன்ஸ் பேன்ட் அணியத் துவங்கிய, அம்மாக்கள் அணிந்த பழைய ரக பேன்ட்டீஸ்களை வெறுத்த தலைமுறை அது. பட்டு, ரேயான், நைலானில் ஏற்பட்ட தோல் பிரச்னைகள் காரணமாக, பருத்தி மறுபடி நுழைந்தது. இயற்கையோடு இயைந்து வாழ விரும்பிய ஹிப்பிகளும் பருத்தியை விரும்பினர். 1970களில் பேன்ட்டீஸ் இன்னும் சன்னமாக, இறுக்கமாக, செக்ஸியாக மாறியது. 1980களில் பெண்கள் ஜிம், ஏரோபிக்ஸ் என உடம்பைக் கச்சிதமாக வைத்துக் கொள்ள முயன்றனர். பேன்ட்டீஸ்கள் இன்னும் சிறிய அளவினதாயிற்று.
1939ல் நியூயார்க் நகர மேயர் ஃபியரெல்லோ லாகார்டியா, நடன நங்கைகள் முழு நிர்வாணம் கொள்வதற்கு தடைவிதித்தார். அவர்களுக்காக உருவானதுதான் தாங். முன்புறம் ஒரு சிறிய முக்கோணம்; பின்புறம் ஒரு கயிறு. அவ்வளவுதான் தாங். 1974ல் ரூடி கெர்ன்ரீச் நவீன தாங்கை உருவாக்கினார். 1990களில் ஐரோப்பிய நாடுகளில் தாங் பரவியது. விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனம் 2002ல் 2 கோடி தாங் உள்ளாடைகளை விற்றது. அமெரிக்க பள்ளிப்பெண்கள் மத்தியில் இன்னமும் செல்வாக்கான உள்ளாடை இதுதான். தாங்கின் ஒன்று விட்ட சகோதரன் ஜிஸ்ட்ரிங். சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவலில் ஜிஸ்ட்ரிங் குறித்து நாயகன் உதயா காதலி அஞ்சலியிடம் பேசுவதாய் வரும்.
மர்லின் மன்றோ போன்ற பிரபலங்களின் பேன்ட்டீஸ்கள், நற்காரியங்களுக்காக அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. 2012 பிப்ரவரியில் சியாட்டிலைச் சேர்ந்த ஜேனைன் கெப்லிஷ் என்ற பெண் ஒரே நேரத்தில் 252 பேன்ட்டீஸ்களை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து நின்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். சில வருடங்கள் முன் லண்டன் விமான நிலையத்தில் லக்கேஜ் கையாளும் வேலை செய்த 29 வயது ஆசாமி, பேன்ட்டீஸ் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அவன் வீட்டைச் சோதனையிட்டதில் 300 பேன்ட்டீஸ்கள் கைப்பற்றப்பட்டன. பேன்ட்டீஸ் திருடுவதில் வினோத திருப்தி போலும் அவனுக்கு. பெண்களின் மனதினைத் திருடி ஒளித்து வைத்திருப்பதென்னவோ பேன்ட்டீஸ்களே! றீ
Stats சவீதா
* விற்பனையாகும் ஒட்டுமொத்த உள்ளாடைகளில் 32% பேன்ட்டீஸ்கள்
* 65% பேன்ட்டீஸ்கள் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்கின்றன
* சராசரியாக 8 வயதில் பெண்கள் தம் முதல் பேன்ட்டீஸை அணிகிறார்கள்
* 7% பெண்கள் பேன்ட்டீஸ் உள்ளிட்ட எந்த உள்ளாடையும் அணிவதில்லை
* 82% பெண்கள் ஆண் ஜட்டிகளை அணிய விரும்புகிறார்கள்.
பேன்ட்டீஸ்
ஒற்றைக்காலூன்றி
ஒருதவமுனி போல்
கீழ் இடை சூடிடும் பூ
கால் இடை கவர்ந்து
நூல் சிறை காக்கும்
மகளிர் நிறை காப்பு.
நன்றி குங்குமம்   தோழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக