சித்ரா பவுர்ணமி சிறப்பு பார்வை
தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவ
பெருமான் வேலைகளைப் பிரித்துக்
கொடுத்தார். மக்களின் பாவ,
புண்ணியங்களை கணக்கெடுக்கும்
பணியை யாருக்கும் தராதது
அவருக்கு நினைவுக்கு வந்தது.
இதற்காக புதிதாக ஒருவரை
படைக்கத் தீர்மானித்தார்
சிவ பெருமான். இப்படி அவர்
யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு
பலகையில் அழகான பையனின்
படத்தை வரைந்தார். அதைப் பார்த்து
மகிழ்ந்த பெருமான், அந்த
சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார்.
இப்படி சித்திரத்திலிருந்து
உருவானதால் அவர் சித்திரகுப்தன்
என பெயர் பெற்றார்.
உலக உயிர்களின் பாவ-
புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள்
இறப்புக்கு பின் அதற்கான பலன்களை
பெறுகின்றனர். அதன்படி உலக
உயிர்களின் பாவ- புண்ணியங்களை
கணக்கிடுவதற்காக சிவபெருமானால்
படைக்கப்பட்டவர்தான்
சித்திரபுத்திரன். இவர் எமதர்மனின்
கணக்காளராக இருந்து அனைவரது
பாவ- புண்ணியங்களையும்
கணக்கிட்டு வருகிறார்.
ஒரு நாள் சித்திரபுத்திரனை
அழைத்தார் சிவபெருமான்.
சித்திரபுத்திரா! உலகின் உன்னத
தேவைக்காகவே நீ
படைக்கப்பட்டுள்ளாய். மூவுலக
உயிர்களின் பாவ- புண்ணியங்களை
கணக்கிடவே உன்னை
உருவாக்கினேன். அதற்கான நேரம்
கனிந்து வருகிறது. தேவலோக
அதிபதியான தேவேந்திரன் பிள்ளை
வரம் வேண்டி, தனது மனைவியுடன்
என்னை நோக்கி கடும்தவம் இருந்து
வருகிறான்.
இந்திரனின் மாளிகையில் காராம் பசு
உருவத்தில் காமதேனு வாழ்ந்து
வருகிறது. நீ அதனுடைய வயிற்றில்
மூன்றே முக்கால் நாழிகை மட்டுமே
தங்கியிருந்து குழந்தையாகப் பிறந்து
வளர்ந்து வா!. பெரியவன் ஆனதும்
கையிலாயம் வந்து உலக உயிர்களின்
பாவ- புண்ணிய கணக்குகளை எழுதி
வா! என்று கூறினார்.
சிவபெருமானின் ஆணைப்படி
காமதேனுவின் வயிற்றில் மூன்றே
முக்கால் நாழிகை நேரம் மட்டுமே
தங்கியிருந்து பிறந்தார்
சித்திரபுத்திரன். அவர் பிறந்தபோது
கைகளில் ஏடும், எழுத்தாணியும்
வைத்திருந்தார். தேவேந்திரனும்,
அவன் மனைவி இந்திராணியும்
குழந்தையைக் கண்டு அகமகிழ்ந்தனர்.
சித்திரபுத்திரர் பிறந்த தினம்
சித்ராபவுர்ணமியாகும்.
பெரியவன் ஆனதும்
சித்திரபுத்திரனுக்கு, சிவபெருமானின்
உத்தரவு நினைவுக்கு வந்தது. அவர்
தன் படைப்புக்கான காரணத்தை
தேவேந்திரனிடமும்,
இந்திராணியிடமும் தெரிவித்து, பின்னர்
கயிலாயம் சென்று சிவபெருமானை
வணங்கி நின்றார்.
அதன் பிறகு, உலக உயிர்களின் பாவ-
புண்ணிய கணக்குகளை எழுதும்
பணியை தொடங்கினார். அன்று முதல்
தனது பணியை செவ்வனே செய்து
வரும் சித்திரபுத்திரர், எமதர்மனின்
கணக்கராக இருந்து வருகிறார்.
சித்திராபவுர்ணமி தினத்தில்
கடைபிடிக்க வேண்டிய விரதமுறை
சித்ரா பவுர்ணமி தினத்தில் காலையில்
எழுந்து நீராட வேண்டும். பின்னர்
பூஜை அறையில் கோலமிட்டு,
கும்பம் வைத்து வணங்க வேண்டும்.
அந்த கும்பத்தில் சித்திரபுத்திரர்
எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.
சித்திரபுத்திரரின் படம்
வைத்திருப்பவர்கள் அவரது படத்தை
வைத்து வணங்கலாம்.
சித்திரபுத்திரர் காராம் பசுவின்
வயிற்றில் பிறந்தார் என்பதால்,
அன்றைய தினம் பசுவில் இருந்து
கிடைக்கும் எந்த பொருட்களையும்
பயன்படுத்தக் கூடாது என்று
கூறப்படுகிறது. வழிபாட்டின் போது
வைக்கப்படும் நைவேத்தியப்
பொருட்களில் உப்பு சேர்க்கக்கூடாது.
அன்னம், இளநீர், கொழுக்கட்டை
போன்றவற்றை படைத்து வழிபடலாம்.
மேலும் வீட்டில் உள்ள பசுவை
குளிப்பாட்டி, மஞ்சள் தடவி, குங்குமம்
வைத்து தீபாராதனை காட்ட
வேண்டும். அத்துடன் பூஜையில்
வைத்த நைவேத்தியத்தையும்
பசுவிற்கு கொடுக்கலாம். தொடர்ந்து
கோவில்கள் அல்லது வீட்டில்
சித்திரபுத்திரரின் கதையை ஒருவர்
படிக்க, மற்றவர்கள் கேட்பது
நல்லபலனை கொடுக்கும்.
சித்ரா பவுர்ணமியானது சனி, ஞாயிறு,
வியாழன் ஆகிய தினங்களில் வருவது
மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி
ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சித்ரா
பவுர்ணமியில் சித்திர புத்திரரை
வணங்குவதால், தோஷ நிவர்த்தி,
மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள்
போன்றபலன்கள் கிடைக்கும்.
அதோடு சித்திர குப்தன் கதையை
நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும்
சொல்ல வேண்டும் ஏழைகளுக்கு
உணவுப் பொருட்களை தானமாகக்
கொடுப்பதும் விரதத்தின் ஒரு
பகுதியே!
இந்த சித்திர புத்திரனுக்கு ஒரு
கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில்
இருக்கும் இங்கு சித்ரா பவுர்ணமி
தினத்தன்று சித்திர குப்தனுக்கு
விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம்
நடக்கும்.
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம்
லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம்
ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை
தியானம் செய்து தீபம், தூபம் மற்றும்
பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம்
செய்த தவறுகளை மன்னிக்க மனதார
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
வாசனைப் பொருள் கலந்த சாதம்
நைவேத்தியம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த நாளில் உப்பு,
பசும்பால், தயிர் இவைகளை நீக்கி
நாம் விரதம் இருப்பதுடன் ஏழை
எளியவர்களுக்கு அன்னதானம் செய்து
இறைவனின் பரிபூரண அருளைப்
பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக