வியாழன், 12 ஏப்ரல், 2018

சித்திரை சிறப்புகள்


சித்திரை சிறப்புகள்

சித்திரை விஷு
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கேரளாவில் விஷுக்கணி காணல் என்று கொண்டாடுகிறார்கள். சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள் இரவு, வீட்டுப் பூஜையறையில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப வைத்துவிடுவார்கள்.
மறுநாள் அதிகாலை, வீட்டின் மூத்தவர் எழுந்து, சுவாமிக்கு அருகில் உள்ள பொருள்களைப் பார்த்த பிறகு, குளித்துவிட்டுக் குத்துவிளக்கு ஏற்றுவார். பிறகு வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூங்கி எழுந்தவுடன் பூஜை அறையில் வைத்துள்ள பொருள்களைக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதையே ‘விஷுக்கணி காணல்’ என்று அழைக்கிறார்கள். இந்த வழிபாட்டால், புது வருடம் முழுவதும் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


வேப்பம்பூ பச்சடி

சித்திரை முதல் நாளன்று, வேப்பம்பூ, உப்பு, மாங்காய், வெல்லம், புளி ஆகியவற்றைச் சேர்த்து வேப்பம்பூ பச்சடியைச் செய்து உண்பார்கள். பல மாறுபட்ட சுவைகளைக் கொண்ட வேப்பம்பூ பச்சடி, நமது வாழ்க்கையில் ஏற்படும் இன்ப-துன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மாறுபட்ட அனுபவங்களையும், பலதரப்பட்ட மனிதர்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.


பஞ்சாங்க படனம்

முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தற்போது, தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலா பலன்களைக் கேட்க வேண்டும். இதைப் `பஞ்சாங்க படனம்' என்பர். பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். தினமும் இதைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
யோகம்: ரோகங்களைப் போக்கும். திதி: நன்மையை அதிகரிக்கச் செய்யும். கரணம்: வெற்றியைத் தரும். வாரம்: ஆயுளை வளர்க்கும். நட்சத்திரம்: பாவத்தைப் போக்கும்.


சித்ரகுப்த விரதம்

சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்ரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று விரதம் இருந்து, அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் (முருகப்பெருமானுக்கு சிவனாரால் அருளப் பெற்ற) திருக்கதையைப் படிப்பது விசேஷம். இதனால் நம் பாவச்சுமைகள் குறையும் என்பது ஐதீகம்.



சித்ரா பெளர்ணமி

சித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள் இது. சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்துகொண்டாள்.


அட்சய திருதியை

சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதியை திதி நாளே, அட்சய திருதியைத் திருநாளாகும். ‘அட்சயம்’ என்றால் வளர்வது என்று பொருள். வனவாசத்தின்போது சூரியனின் அருளால் பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும், பாற்கடலில் அலைமகள் அவதரித்ததும் இந்நாளில்தான். அன்று, செய்யப்படும் நற்காரியங்கள் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பதால், அன்று, தானதர்மங்கள் செய்வதும் வழிபாடுகள் நடத்துவதாலும் புண்ணியங்கள் பெருகும். நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக