புதன், 25 ஏப்ரல், 2018

சூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்... தர்பூசணி தரும் 10 நன்மைகள்! #Benefits Of Watermelon


சூடு தணிக்கும், சருமப் பிரச்னை போக்கும்... தர்பூசணி தரும் 10 நன்மைகள்! #Benefits Of Watermelon

கோடை வெப்பநிலை தினமும் செஞ்சுரி அடித்துக்கொண்டிருக்கும் நாள்கள் இவை. சீக்கிரமே அக்னி நட்சத்திரம் தொடங்கவிருப்பதால், இனிவரும் நாள்களில் வெயில் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்க்கலாம். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். வீட்டைவிட்டு வெளியே வந்து, வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள் வியர்வையில் குளித்துவிடுகிறோம். வியர்க்குரு, சருமப் பிரச்னை, வயிற்றுப் பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டி நிற்கின்றன. வழியெங்கும் தண்ணீர், நீர்மோர்ப் பந்தல்... இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டிக் கடைகள்... வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் விற்பனை செய்யும் சிறுசிறு கடைகள் என முளைத்திருக்கின்றன.

இவற்றில் கோடைக்கு ஏற்றது எது? அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் சீசனல் உணவுகள்தான் சிறந்தவை. உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், சில உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் இருப்பவை  இந்த வகை உணவுகளே! அந்த வகையில் கோடைக்காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி. கொழுப்புச்சத்தே இல்லாத, வைட்டமின் 'ஏ' மற்றும் 'இ' நிறைந்த தர்பூசணி குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் வாணி.

"இதில் 90 சதவிகிதம் நீர்ச்சத்தே நிரம்பியிருக்கிறது. கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுக்கும். தர்பூசணியிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகத்திலிருக்கும் நச்சுகளை நீக்க உதவும். சிறுநீரகப் பிரச்னை அல்லது டையூரெட்டிக் ( Diuretic) பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் சாப்பிட்டால், அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.


* தர்பூசணியிலிருக்கும் லைகோபீன் (Lycopene), சிட்ருல்லின் (Citrulline) சத்துகள், மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாகச் செயல்படுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்புகளைக் குறைக்க உதவும். இதிலிருக்கும் பொட்டாசியம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசை பிடிப்புப் பிரச்னையையும், லைகோபீன் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும் உதவும்.

* தர்பூசணியைச் சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும்.


* வெயில் காலத்தில் அனைவரையும் பாடாகப்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சருமப் பிரச்னை. தர்பூசணியிலிருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ( Beta-Carotene) இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்கும். இதிலுள்ள குளூட்டாதியோன் (Glutathione) சருமப் பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும். இது, வயதானால் உடலில் ஏற்படும் சுருக்கங்களைச் சரிசெய்ய உதவும்.

* தர்பூசணியிலுள்ள சத்துகள்...

வைட்டமின் ஏ, சி, டி

லைகோபீன் ( Lycopene), சிட்ருல்லின் ( Citrulline)

பொட்டாசியம் (112 மி.கிராம்).

இதிலுள்ள லைக்கோபீன், பீட்டா கரோட்டின் சத்துகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுபவை. கொழுப்புச்சத்தே இல்லாத தர்பூசணியில், கலோரியும் மிகக் குறைவு. இதில் 11 சதவிகிதம் வைட்டமின் ஏ, 13 சதவிகிதம் வைட்டமின் சி இருக்கின்றன. இந்த வைட்டமின் சத்துகள் மாரடைப்பைத் தடுக்க உதவுபவை.

* தர்பூசணியிலுள்ள வைட்டமின் சி, அன்றாடம் நாம் உட்கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தில், 25 சதவிகித சத்துகளை கொடுக்கும். இது, சருமத்தில் வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமலும் தடுக்க உதவும்.

* அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல், சருமம் கறுத்துப்போதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். தர்பூசணியிலிருக்கும் பொட்டாசியம், இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

* சருமத்தின் பொலிவைத் தீர்மானிப்பது மெலனின் (Melanin). தர்பூசணியின் குளூட்டாதியோன்  ஆன்டிஆக்ஸிடன்ட், மெலனின் உற்பத்தியை அதிகரித்து, சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.

* கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியை முடித்தவுடன் ஹைட்ரேஷனுக்காக ( Hydration) எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாக தர்பூசணி சாப்பிடலாம். பொதுவாக எந்தப் பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. காரணம், ஜூஸாக்கும்போது பழத்திலுள்ள நார்ச்சத்து குறைந்துவிடும்.

* `சர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம்’ என்று சிலர் கூறுவார்கள். ஆனால், அது தவறு.  GI எனப்படும்  Glyx index, ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.’’

தர்பூசணியைச் சின்னச் சின்னதாக நறுக்கி, கப்களில் வைத்து தள்ளுவண்டிகளில் வைத்தெல்லாம் விற்கிறார்கள். அடிக்கும் வெயிலுக்கு போகிற வழியில் ஒரு கப் தர்பூசணி வாங்கிச் சாப்பிடுவது ஆரோக்கியமே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக