திங்கள், 9 ஏப்ரல், 2018

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19-


சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19-

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men’s Day) 2010 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் சென்னை, டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
“ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும்?” என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. அதை சிலர் கேலி வேறு செய்கிறார்கள் – “ஆண்களுக்கென்ன கேடு, தனியாக ஒரு நாள் வேறு ஒன்று தேவையா?” – என்று!
ஏன் அப்படி? அனைத்து சிறப்புக்களும் பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம் அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!
இந்த ஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்களில் சில:
ஆண்கள் மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்த செயல்பாடு போன்றவற்றை வேண்டுவது, ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன் மதிரிகளை அடையாளம் காண்பது
அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்கு மத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின் சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக் கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான் ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிக முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறிய முன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன் கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்கு அவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும் அமைகின்றன! இத்தகைய தவறான போக்கை எதிர்த்து குரல் கொடுக்கும் நாளாக இந்த ஆண்கள் தினம் அமைகிறது
முக்கியமாக இன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும் சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும், பல ஆணெதிர் சட்டங்களின் செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்பு நிலையையும் எதிர்த்துப் போராடுவது.


நம் சமூகத்தில் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் சில:-
1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களின் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு (Heart attack) போன்ற நோய்களை ஆண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் உள்ளது. இதனால் ஆண்கள் மத்தியில் அநியாய மரணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
2. சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் கழிந்தும் ஆண்கள் நலனுக்காக என்று பிரத்தியேகமாக இந்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவழிக்க வில்லை என்பது வருத்தத்தக்க விஷயம்! எந்த வித நலத்திட்டமும் ஆண்களுக்காகவென்று செயல்படுத்தப்படவில்லை. நிதிநிலை அறிக்கைகளிலும் (Budget) யாதொரு வழங்கலும் செய்யப்படவில்லை.
3. ஆண்களின் பிரச்னைகளை அணுகி தீர்வு காணவென்று எவ்வித அரசு சார்ந்த நிறுவனங்களோ, ஆணயமோ (பெண்களுக்கு இருப்பதுபோல) அமைக்கப்படவில்லை
4. கற்பழிப்பு வழக்குகளில் ஒருதலைச் சார்பு சட்டங்களினால் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் போக்கு தீர்வின்றித் தொடர்கிறது.
5. குடும்ப வன்முறையில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நிவாரணம் பெற சட்டத்தில் எந்த வழியும் இல்லை. ஏனெனில் குடும்ப வன்முறை என்பதே ஆண்தான் செய்வான், பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக D.V. Act சட்டத்தில் கட்டமைக்கப்படுள்ளது
6. விவாகரத்து பெறும்போது சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் வாழ பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதே இல்லை. தந்தையும் பெற்றோரில் ஒருவர்தான், தந்தைக்கும் பாசமும் பொறுப்பும் உண்டு என்பதையே சமூகமும் நீதிமன்றங்களும் அங்கீகரிப்பதில்லை. இந்த பயங்கரமான போக்கு தொடருமானால் வருங்காலத்தில் தந்தை என்னும் உறவைப் பற்றியே அறியாத இளம் சமூகம் நம் நாட்டில் உருவாகும் அபாயம் உள்ளது!
7. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவது, பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதல் போன்ற பாரபட்சம் தொடர்கின்றது.
8. ஆண்களுக்கு உளரீதியாக உணர்வுக் கிளர்ச்சியூட்டி, அவர்களை தவறான வழியில் செல்லத் தூண்டும் பெண்களுக்கு சட்ட ரீதியான தண்டனை ஏதுமில்லாமலிருப்பதால், ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றது.
9. ஆண்களுக்கு எதிராக செய்யப்படும் பாலியல் கொடுமைகளை சமூகம் அங்கீகரித்து அதைத்தடுக்க யாதொரு முனைப்பும் இல்லாமை
10. ஆண்களின் தனிப்பட்ட பிரச்னைகளாக எதனையும் அடையாளங்கண்டு அவற்றிற்கு தீர்வுகள் தேடப்படுவதில் அக்கறை செலுத்தாமையும் புறக்கணிப்பும்.
11. காதல், டேட்டிங் என்ற போர்வைகளில் ஆண்களிடம் உள்ள சொத்து மற்றும் சுகத்தை பறித்துக் கொண்டு செல்லும் பெண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை. குழந்தைகளைக் காட்டி நிகழ்த்தப்படும் சொத்துப்பறித்தலை சட்டரீதியாக ஊக்குவித்தல்.
12. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்ற நிலை
13. ஆண்களுக்கு மன உழைச்சல் ஏற்படும் வகையில் செயற்படும் பெண்களுக்கு தண்டனையே இல்லாத நிலை
14. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளித்து ஆண்கள் புறக்கணிக்கப்படும் நிலை
15. விமானப்பணியாளர்கள், கால் செண்டர்கள், செவிலியர்கள் (நர்சுகள்) போன்ற பணிகளில் ஆண்களுக்கு வாய்ப்பேதும் இல்லாமல் முழுமையான புறக்கணிப்பு. ஆனால் கடுமையான உடலுழைப்பு, உயிரைப் பணையம் வைக்கும் ரிஸ்க் அதிகமான வேலைகள் – இவைகளுக்கு மட்டும் ஆண்கள் தேவையாக இருக்கிறது!
16. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.
17. கடினமான வேலைகளில் மட்டும் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல். ஆனால் அத்தகைய கடின உழைப்பால் நேரும் சுகக் கேடுகளுக்கு யாதொரு தீர்வையும் அளிக்காதிருத்தல்
18. இராணுவத்தில் ஆண்களை மட்டுமே சேர்த்து அவர்களை போருக்கு இரையாக்குதல்.
19. குடும்பங்களில் பெண்களால் ஆண்களின் பேச்சுரிமை, சுதந்திரமான செயலாற்றல் சுதந்திரம் போன்றவை பறிக்கப்படுவது குறித்து அக்கறை இல்லாதிருத்தல்
20. பெண்கள் அட்ஹிகம் சம்பாதித்தால் கூட, ஆண்களின் ஊதியத்தை பெண்களுக்கு பறித்துக் கொடுக்கும் பாரபட்ச சட்டங்கள்
21. போரின் போதும், பேரிடர்கள் நேரத்திலும் பெண்களை மற்றும் குழந்தைகளைக் காக்க இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் ஆண்களைக் காக்க இல்லாமை. Men are deemed to be a disposable commodity.
22. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்கண்டு ஆண்களுக்கு கிரமமான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி அதற்கான தீர்வுகளை செயலாக்க அரசு முன்வராத நிலை
23. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு, குழந்தை பெற்றபின் குழந்தையைப் பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.
மேலும் ஆணினத்திற்கு அடிப்படைக் கடமைகளை மட்டும் விதித்துவிட்டு, எந்தவித உரிமைகளையும் அவர்களுக்கு அளிக்காமல் இருக்கும் நிலைமையால் கீழ்க்காணும் கொடுமைகளுக்கும் ஆணினம் இந்நாட்டில் உட்படுத்தப்படுகிறது:
தன் பெற்றோர் உடன்பிறப்புக்கள் மற்றுமில்லாமல் தன் மனைவியின் உடன் பிறப்புக்களின் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்யும்படி எதிர்பார்க்கப்படும் நிலை
ஒருஆண் தன் வாழ்நாள் முழுதும் குடும்பத்தினருக்காக கடன்பட்டு நிற்கும் நிலையால் அவன் முடிவில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகிறான். வீட்டிற்காக லோன், குழந்தைகளின் கல்விக்கான கடன், மனையின் வைத்தியச் செலவுக்கான கடன் இப்படி பல விதங்களில் அவன் சுமைகளை ஏற்றிக்கொண்டு நிற்கிறான். ஆனால் பெண்கள் கல்வியிலும் சம்பாதிப்பிலும் மெலோங்கி இருப்பினும் ஆண்தான் பொருள் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்னும் விதியை அமுல் செய்யும் அதே நேரத்தில் அவனை பல வழிகளில் தாக்கி துன்புறுத்தும் போக்கும் தொடர்கிறது
இ.பி.கோ 498A, குடும்ப வன்முறைச் சட்டம் (D.V.Act) போன்ற கொடுங்கோன்மைச் சட்ங்களினால் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான கணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமை தொடந்து நிகழ்கிறது. அரசின் அனைத்து அங்கங்களும் இத்தகைய தவறான பயன்பாட்டினை உணர்ந்திருத்த போதும் சில பெண்ணியவாதிகள் மற்றும் தனி நபர் ஆதாயங்கள் பெறும் குழுவினரின் எதிர்ப்பால் யாதொரு மாற்றமும் செயல் படுத்தப்படாமல் தொடர்கிறது இந்த வன்முறை
கணவனுடன் வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு அந்த மனைவி படித்து பட்டங்கள் பெற்று பெருமளவில் சம்பாதித்தாலும், அவருக்கு கணவன் தான் பராமரிப்புத்துகை வழங்கவேண்டும் என்னும் அநியாயமான சட்ட்ங்கள் மற்றும் தீர்ப்புக்களினால் இந்நாட்டின் கணவன்மார்கள அனைவரும் இலவச ஏ.டி.எம் மெஷின்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். விவாகரத்து ஆன பிறகும் கூட அவர்கள் மாஜி மனைவிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை
இந்த நிலை தொடர்ந்தால் இந்நாட்டின் ஒட்டு மொத்த ஆண்களும் உளவியல் ரீதியாக சிதைக்கப்பட்டு
காயடிக்கப்பட்ட செக்கு மாடாக தரம் தாழ்த்தப்படும் அபாயம் ஏற்படும்.
ஆணினத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய கொடுமைகளைக் களைய பாடுபடுவதற்காக அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (All India Men’s Welfare Association) “ AIMWA ” என்னும் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில் நாடெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாட்களில் அனைத்து ஊடகங்களிலும், திரப்படங்களிலும் ஆணினம் எவ்வாறு தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் (Negative stereotyping) என்பதைக் காணுங்கள்:
1. முட்டள்கள், பொறுப்பற்றவர்கள், வன்முறையாளர்கள், மனைவியை அடிப்பவர்கள், குடிகாரர்கள், எப்போதும் செக்ஸ் தேடி அலைபவர்கள்
2. வரதட்சணைக் கொடுமை செய்பவர்கள், பாலியல் தொழிலில் தரகராக உள்ளவர்கள் (பெண் தரகர்கள் கிடையாதா?, ஏன் அவர்களை சித்தரிப்பதில்லை?), கொலைகாரர்கள், வன்புணர்வு செய்பவர்கள், மனைவியை எரிப்பவர்கள், கஞ்சா அபின் பாவிப்பவர்கள்
3. ஒழுங்கற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், மனரீதியாக முழு வளர்ச்சியடையாதவர்கள், எதற்கும் பெண்கள் துணையில்லாமல் செயலாற்ற லாயக்கற்றவர்கள்
4. ஆண்கள் மட்டுமே வன்முறையாளர்கள், பெண்கள் மட்டுமே பாதிக்கப்படும் அபலைகள்
இப்படி சமூகத்தின் எண்ணப்பாங்கு அமைந்திருப்பதால் ஆண் எக்கேடு கெட்டல் என்ன என்னும் நோக்கு இருக்கிறது. வெள்ளம், புயல், சுனாமி, நெருப்பு, குண்டு வெடிப்பு போன்று ஏதேனும் பெரும் இடர் வரும் நேரத்தில் பெண்களை மட்டும் காப்பாற்றும் நிலை இருக்கிறது. ஆண்களைக் கண்டு கொள்வோர் கிடையாது!
அதே போல் ஒரு நிகழ்வில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்று குறிப்பிடும்போதுகூட “பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர்” என்றுதான் சொல்வார்கள். ஏன்? ஆண்கள் ஒரு பொருட்டேயல்ல! இத்தகைய அணுகுமுறை மாற்றி அமைக்கப்பட்டு ஆண்களும் உயிரினம்தான் என்ற புரிதல் ஏற்பட வேண்டும்!
ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை:
ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியின் கையால் வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சி. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது.
அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆணால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது! இதுபோன்ற அநாகரிகமான சட்டங்கள் மாற்றப்படாவிட்டால் விபரிதமான விளைவுகள் ஏற்படும் என்பது திண்ணம்.
இத்தகைய முடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதாரணமாக பெண்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தவறான பொய்த் தோற்றம் மக்கள் மனத்தில் உள்ளது. ஆனால் அந்த மாயத்தோற்றம் உண்மையல்ல. ஆண்களின் தற்கொலை பெண்களுடையதை விட இரண்டு பங்கு என்பதே உண்மை!
அரசின் ஒரு அங்கமான தேசிய குற்றத் தரவுகள் மையம் (National crime Records Bureau -NCRB) வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி கடந்த 2005-2007 மூன்று ஆண்டுகளுக்கான தற்கொலைச் சாவு விவரம்:
1. 2005: 52583 married men committed suicide :: 28188 married women.
2. 2006: 55452 married men committed suicide :: 29869 married women.
3. 2007: 57593 married men committed suicide :: 30064 married women.
உலக ஆண்கள் தினத்தன்று அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கத்தின் கோரிக்கைகள்:-
இந்திய அரசியல் சட்டதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள்:-
1. ஓர வஞ்சனையுடன் ஒரு பாலருக்கு மட்டும் நன்மை செய்வித்து ஆண்களுக்கு எதிராக இயற்றப்பட்டிருக்கும் ஒரு பக்கச் சார்புச் சட்டங்கள் அனைத்தையும் இரு பாலருக்கும் பொருந்துபடியாக மாற்றியமைக்க வேண்டும்
2. “கணவன்”, “மனைவி” போன்ற சொற்களின் பயன்பாட்டைத் தவிர்த்து இருவருக்கும் பொருந்தும்படியாக “துணைவர்” (spouse) என்னும் சொல்லாட்சி வேண்டும்
3. பொது இடங்களில் ஆண்களின் தன்மானத்தைக் காப்பாற்றும் வகையில் (பெண்களுக்கு இருப்பது போல்) 51(E) பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும்
4. அதே போல் 15(E) பிரிவையும் திருத்தம் செய்து பெண்கள் குற்றம் செய்தால் அவர்களுக்கு தண்டனைகளிலிருந்து விலக்கும், குறைவாக தண்டனையும் அளிக்கும் சிறப்பு அணுகுமுறை அமைப்பை மாற்ற வேண்டும்
சட்டங்களில் மாற்றங்கள், திருத்தங்கள்:
1. இருபாலரும் ஒத்து செயல்படும் கலவைக்கு ஆணை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டங்களை மாற்றி (present laws that hold man alone guilty by converting consensual sex into rape) 15 வயத்திற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் மனமொத்து பாலியல் தொடர்பு கொள்வதை சட்ட பூர்வமாக்க வேண்டும்.
2. கற்பழிப்பு தொடர்பான சட்டத்தில் (IPC 376) ஆண்களை மட்டும் தண்டிக்கும் தற்போதைய அமைப்பை மாற்றி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றும் பெண்களுக்கும் தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டும்
3. ஆணின் விந்து வங்கி முறையை அறவே ஒழித்திடல் வேண்டும். இதனால் எதிர் காலத்தில் ஒரு சில “பொலிக் காளை” ஆண்களே இருந்தால் போதும் என்று முடிவெடுத்து ஏனைய ஆண்களைக் காயடித்து வண்டி மாடு போல் பொதி சுமக்கும் அடிமைகளாக மாற்றும் நிலை ஏற்படக்கூடும்!
குடும்ப நலச் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்:
1. தற்போது இயற்றப்பட்டுள்ள வரதட்சணை, ஜீவனாம்சம், குடும்ப வன்முறை போன்றவை சார்ந்த சட்டங்கள் திருமண முறையின் ஆணி வேரையே கெல்லி எடுத்து குடும்ப வாழ்வு முறையை சிதைத்து, ஆணாகப் பிறந்தவன் திருமணம் செய்து கொள்வதே ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றி விட்டன. இந்த நிலையை மாற்ற இச்சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
2. குற்றவியல் சட்ட அமைப்புக் கோட்பாடுகளை (CrPC) தக்க முறையில் மாற்றி IPC 498A சட்டப் பிரிவின் கீழ் புகார் கொடுத்தவுடன் கைது நடவடிக்கை மற்றும் பிணைத்தடுப்பு போன்ற கொடுங்கோன்மை தன்மையைக் களைய வேண்டும் (make sec 498A of IPC non-cognizable and bailable).
3. குடும்ப வன்முறைச் சட்டத்தின் (D.V.Act) 31(B) பிரிவை மாற்றி மனைவியின் சாட்சியத்தை மட்டும் கருத்தில் ஏற்று கணவனை தண்டிக்கும் முறையை ஒழிக்கவேண்டும்
4. இ.பி.கோ 304-B சட்டத்தில் அடிப்படையில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், கனவனே கொலை செய்திருப்பான் என்று சட்டபூர்வ அனுமானத்துடன் அணுகும்படி இற்றைப் படுத்தியிருப்பதை மாற்றி அத்தகைய அணுகுமுறை கணவன் 7 ஆண்டுகளுக்குள் இறந்தாலும் பொருந்தும்படியும், அதன் அடிப்படையில் மனைவியை குற்றவாளியாக ஏற்கும்படி இருவருக்கும் பொதுவாக அமைக்கப்பட வெண்டும்.
5. இ.பி.கோ 497 சட்டத்தில் கள்ளக்காதல் குற்றத்திற்கு அதில் ஈடுபடும் அடிப்படை குற்ரவாளியான மனைவிக்கு தண்டனையிலிருந்து முழுதுமாக விலக்களித்து ஆணை மட்டும் குறவாளியாக்கும் தற்போதைய அமைப்பை மாற்றி கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க வழி செய்ய வேண்டும்.
6. கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தாத மனைவிக்கும், விவாக ரத்து பெற்ற முன்னாள் மனைவிக்கும் அந்தக் கணவனிடமிருந்து பல வகை சட்டங்களின் அடிப்படையில் (CrPC 125, Divorce laws, DV Act, HAM Act etc.) பராமறிப்பு, ஜீவனம்சம் என்ற பல வகைகளில் காசு பிடுங்கி அளிக்கும் கொடுமையை அகற்ற வேண்டும்
7. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் மனைவிகளைக் காப்பாற்றும் பொறுப்பை அரசே ஏற்று “சுவதார்” போன்று அரசால் துவங்கப்பட்டிருக்கும் காப்பகத்தில் சேர்க்க வழியமைக்க வேண்டும்
8. கணவர்களும் பொறுப்பான பெற்றோர்தான் என்னும் உணமையை அங்கீகரித்து விவாகரத்து பெற்று பிரியும்போது குழந்தைகளின் முறையான வளர்ப்புக்கு தந்தை, தாய் இருவரின் பராமரிப்பும் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு கணவனுக்கும் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை சரிசமமாக பங்கிட்டு வழங்குதல் வேண்டும் (Shared parenting)
9. மனைவிகளுக்கு தங்கள் மாமியார், மாமனாரைக் காப்பாற்றும் கடமை உண்டு என்று வரையறுத்து முதியோர் காப்பகங்களை ஒழிக்க வேண்டும்.
சமூக நலன் சார்ந்தவை:
1. பெண்களுக்கு உள்ளதுபோல் “தேசிய ஆண்கள் வாரியம்” (National Commision for men) அமைக்கப்பட வேண்டும்.
2. ஒருதலைப் பட்சமான தன்மை கொண்டதும், கோர்ட்டால் கட்டமைக்கப்பட்டதுமான “விஷாகா” சட்டத்தை நீக்கிவிட்டு இரு பாலருக்கும் பொதுவாக வேலை பார்க்கும் இடத்தில் நேரும் வனமுறை சம்பந்தமான சட்டம் இயற்றப்பட வேண்டும்
3. ஆண்கள் நலனைப் பாதுகாக்க மத்தியில் ஆண்கள் நல அமைச்சகம் ஒன்று தேவை.
4. ஆண், பெண் இருவருக்கும் பொதுவான வரிச் சட்டங்கள் தேவை. இதில் பாகுபாடு கூடாது
5. நலத் திட்டங்கள் வகுக்கும் போது பெண்களுக்கென்று தனியாக கட்டமைக்காமல் அனைவருக்கும் பொதுவாக அவற்றின் பலன்கள் சென்றடைய வேண்டும்.
6. ஆண்களைத் தவறாக சித்தரிக்கும் போக்கை மாற்றிட ஒரு மேல்முறையீட்டு அமைப்பு வேண்டும்
7. ஆண்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க அனுமதித்து அவர்களை எப்பொதும் ஒரு சுமை தாங்கியாகக் கருதும் நிலை மாற வேண்டும்
8. ஆண்களைத் தாக்கும் புரோஸ்டிரேட் கான்சர், மாரடைப்பு போன்ற வியாதிகளைக் களைய தக்க நிவாரணங்களை அளிக்க சிறப்பு நலத் திட்டங்கள் தேவை
9. ஏழை மற்றும் தனித்து விடப்பட்ட ஆண்களுக்கும் காப்பிடங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
இப்படிக்கு
பிரான்ஸிஸ் அந்தோனி
(Ph:9962004649)
ஆசிஃப் அலீம்
<Ph:9840384114)
அமைப்பாளர்கள்,
அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற அமைப்பு (All India Men's Welfare Association – "AIMWA")
சென்னை கிளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக