ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

கருமுட்டை பிரச்னைகளைத் தீர்க்கும் முருங்கை!


கருமுட்டை பிரச்னைகளைத் தீர்க்கும் முருங்கை!

பெ ண்களுக்குத் தேவையான சத்துக்களை எல்லா வகைக் கீரைகளும் வழங்கினாலும், கீரைகளின் ராணியாக இருப்பது முருங்கையே. முருங்கை, இந்தியா முழுவதும் பரவலாகக் கிடைக்கும் கீரை மரம். மரக்கிளையின் சிறு பகுதியை நட்டு வைத்தாலே, விடுவிடுவென மரமாக வளர்ந்துவிடும். இலை,காய், பூ, பட்டை, பிசின், வேர் என இதன் அனைத்துப் பாகங்களும் பயன் தரக்கூடியவை. ஒவ்வொரு பாகத்திலும் என்னென்ன சத்துகள் இருக்கின்றன... மருத்துவ குணம் என்ன என்பதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறார், சித்த மருத்துவர் தி.வேணி.
முருங்கைக்காய்:
இது, நார்ச்சத்து அதிகம் உள்ள காய். மிகவும் ருசியானது. பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்கவல்லது. உடம்புக்கு அதிக சக்தியூட்டும்.
வாயகன்ற பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி, அதில் முருங்கைப் பிஞ்சை துண்டுகளாக வெட்டிப் போட்டு, வதக்கி, நீர் விட்டு, சிறிதளவு மிளகு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டி, தேவையான அளவு உப்புப் போட்டு, தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடல் வலுவாகும். செரிமான மண்டலத்தை நன்கு இயங்கச் செய்யும்.


முருங்கைப் பூ :
கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.
ஒரு டம்ளர் பாலுக்கு, 10-15 முருங்கைப் பூக்களைச் சுத்தம் செய்து போட்டு, நன்றாக வேகும் வரை கொதிக்கவைத்து, சிறிதளவு தேன் கலந்து பருகி வந்தால், கர்ப்பப் பை வலுவாகி கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும். மேலும் உயர் ரத்த அழுத்த நோயின் தீவிரத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயின் தன்மை குறையும்., மலச்சிக்கல் சீராகும். ஹீமோகுளோபின் கூடி, ரத்தச் சோகை நீங்கும். நரம்புகள் பலம் பெறும்.
முருங்கைக் கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும். முருங்கை இலையை அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போடலாம்.
சிறுநீர் சுலபமாகப் பிரிய, முருங்கைக்கீரையுடன் சீரகம் கால் ஸ்பூன், சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடித்தால் நீர்க்கட்டு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும். முருங்கை இலைகளை அரைத்துச் சாறு எடுத்து, சிறிது தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலும் வயிற்றுப் பூச்சிகள் அழியும். இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால், பொடுகுத் தொல்லை போகும்.

இலை:
முருங்கை இலையில் வைட்டமின் A, B, C, கால்சியம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தக் கீரையை தினமும் தொடர்ந்து 30 நாட்கள் உட்கொண்டு வந்தால், , ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் அளவு கூடும்.
முருங்கைக் கீரையை நிழலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பொடிசெய்து பாட்டிலில் சேர்த்து வைத்துக்கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிட்டால், கண்ணில் உள்ள பார்வை நரம்புகள் பலம் பெரும். வயற்றுப்புண் குணமாகும், உடல் சூட்டைக் குறைக்கும். பித்தம், இளநரையைப் போக்கும். தோல் மினுமினுப்பாகும். முருங்கை இலைச் சாற்றில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவிவந்தால், முகப்பரு சரியாகும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் முருங்கை இலைச் சாறு சிறிது சேர்த்து உட்கொள்ள, நெஞ்சுச் சளி சரியாகும்.
100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரிகள் உள்ளன.
ஈரப்பதம் - 75%
புரோட்டீன் - 6.7 மி.கி
கொழுப்பு - 1.7 மி.கி
கார்போஹைட்ரேட் - 13.4 மி.கி
நார்ச்சத்து - 0.9 மி.கி
கால்சியம் - 440 மி.கி
பாஸ்பரஸ் - 70 மி.கி
மெக்னீசியம் - 42 மி.கி
இரும்புச்சத்து - 7 மி.கி
மினரல்ஸ் - 2.3 மி.கி
ஆக்சாலிக் ஆசிட் - 101.0
வைட்டமின் ஏ கரோட்டின் - 6.8 மி.கி
வைட்டமின் பி கொலின் - 423.0 மி.கி
வைட்டமின் பி1 தயாமின் - 0.21 மி.கி
வைட்டமின் பி2 ரிபோஃப்ளேவின் - 0.05
வைட்டமின் சி அஸ்கார்பிக் ஆசிட் - 220 மி.கி
முருங்கைப்பட்டை :
முருங்கை மரப்பட்டையை நீரில் போட்டுக் காய்ச்சி அல்லது இடித்துச் சாறு எடுத்தும் பயன்படுத்தலாம். இது, சளி நீக்கியாகச் செயல்படுகிறது. ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்து. பிரசவ நேரத்தில் ஏற்படும். இடுப்புவலிக்கு முருங்கைப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடித்தால் வலி போகும். அதோடு, வயற்றில் உள்ள தேவை இல்லாத புழுக்களை அழிக்கும்.
முருங்கைப் பிசின் :
பாதாம் பிசின் போலவே, முருங்கைப் பிசினும் உடலுக்கு குளிர்ச்சி தரும். ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பதால், உடலுக்கு நல்ல புத்துணர்வைத் தரும். முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்துத் தூள்செய்த பொடியை, இரவுநேரத்தில் கொதிக்கும் நீரில் போட்டு, அப்படியே வைத்திருந்து அதிகாலையில் அந்த நீரை வடித்துக் குடிக்க, நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவையே நோய் தீர்க்கும் விதத்தில் அமைத்துகொள்வதே சிறந்தது.- கே.ஆர்.ராஜமாணிக்கம் விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக