வியாழன், 17 மே, 2018

தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மையா ? முழுமையாக படியுங்கள்...

தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மையா ? முழுமையாக படியுங்கள்...

மருத்துவம்:கவர்ச்சிகரமான கண்டெய்னர்களில் விற்பனையாகும் பாடி லோஷன், கிரீம் போன்ற அழகுத் தயாரிப்புகளைப் பார்த்தால் எல்லோருக்கும்தான் வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற ஆசை வரும். இது போன்ற தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கவும் நாம் தயங்குவதில்லை. ஆனால், இவற்றில் எவ்வளவு வேதிப்பொருள்கள் இருக்கும் என்று யோசித்திருப்போமா?
கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் நாம் எளிதில் மயங்கி வாங்கிவிடுகிறோம், ஆனால் நம் வீட்டிலேயே கிடைக்கின்ற எளிய, சிறப்பான இயற்கையான பொருள்களை மறந்துவிடுகிறோம். ஆம்! எளிதில் கிடைக்கக்கூடிய, மலிவான தேங்காய் எண்ணெயைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
முற்றிய தேங்க்காய்களுக்குள் இருக்கும் கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. கொப்பரை எண்ணெய் என்றும் இதனை அழைக்கிறார்கள். இது உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய எண்ணெய், அதுமட்டுமின்றி உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது.

சருமத்திற்கு இவ்வளவு நன்மைகளை அளிக்கும் விதத்தில் தேங்காய் எண்ணெயில் அப்படி என்ன உள்ளது? பார்ப்போம்!
தேங்காய் எண்ணெயில் பலன் தரும் பல்வேறு பொருள்கள் ஒன்றாக சேர்ந்துள்ளதே அதன் தனிச்சிறப்பு. அவை:
நிறைவுற்ற கொழுப்புகள்: தேங்காய் எண்ணெயில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் பெரும்பாலும் நடுத்தர நீளமுள்ள சங்கிலி அமைப்பு கொண்ட கொழுப்பு அமிலங்களாகவே உள்ளன. இந்தக் கொழுப்புகள் சருமத்தை மென்மையாக்குவதுடன், சருமத்தில் ஈரப்பத்தத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன.
காப்ரிக் அமிலம் மற்றும் லாரிக் அமிலம்: இந்தக் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், தேங்காய் எண்ணெய் நுண்ணுயிர்களை எதிர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளது. இதனை சருமத்தில் தேய்த்துக்கொள்ளும்போது, தோல் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
வைட்டமின் E: வைட்டமின் E சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பண்பு கொண்டது. வைட்டமின் E சருமத்தின் வளர்ச்சிக்கும் குணமாக்குவதற்கும் மட்டுமின்றி, மென்மையாகவும் நெகிழ்தன்மை கொண்டதாகவும் வைக்கிறது.
இப்போது, நமது சருமத்திற்கு நன்மையளிக்கும் விதத்தில் தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்:
உதட்டுக்கான ஜெல் (லிப் ஜெல்): கடைக்குச் சென்றால் பல்வேறு நிறங்களிலும் சுவைகளிலும் நூற்றுக்கணக்கான லிப் ஜெல்கள் கிடைக்கின்றன. இந்த லிப் ஜெல்களில் என்னென்ன உட்பொருள்கள் உள்ளன என்று கவனித்துள்ளீர்களா? ஈரப்பதமூட்டும் வேதிப்பொருள்கள் இருக்கும், அவற்றுடன், பல்வேறு வேதிப்பொருள்களும் வண்ணத்தைக் கொடுப்பதற்கான வேதிப்பொருள்களும் இருக்கும். இந்த வேதிப்பொருள்களில் இருந்து எப்படி தப்பிப்பது?
தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருள்களில் இருந்து உங்கள் உதடுகளைப் பாதுகாக்க விரும்பினால், அவற்றுக்கு பதிலாகப் பயன்படுத்தக்கூடிய, மலிவான மாற்றுதான் தேங்காய் எண்ணெய். இது 100% இயற்கையானது, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் லிப் ஜெல்களை விட மிகவும் பாதுகாப்பானது மற்றும் அதிக பலனளிப்பது.
ஈரப்பதத்திற்கு: உடல் முழுதும் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக்கொள்ளும்போது, ஈரப்பதமளித்து மாய்ஸ்டுரைசராக சிறப்பாகச் செயல்படும், வியக்கத்தக்க பலன்களைக் கொடுக்கும். தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்கி, ஊட்டமளிப்பதுடன் தோலின் மீது ஒரு மெல்லிய படலமாக அமைந்து தோலுக்குள்ளேயே ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. இது மனதை மகிழச்செய்யும் மணமுடையது, சருமத்திற்கு ஊட்டமளித்து மென்மையாக்குகிறது. குளிக்கும் முன்பும் பயன்படுத்தலாம் அல்லது குளித்த பிறகும் பயன்படுத்தலாம்.
ஹேர் கண்டிஷனராக: நம் வீட்டில் தாயோ, நமது பாட்டியோ தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதைப் பார்க்காதவர்கள் யாரிருப்பார்கள்!பல காலமாகவே நம் முன்னோர்கள் பின்பற்றிவந்துள்ளார்கள் என்றால், ஏதோ முக்கியக் காரணம் இருக்க வேண்டும். தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது. இது மண்டைத் தோல் மற்றும் முடியின் வேர் முடிச்சுகளுக்குள் ஊடுருவிச்சென்று ஊட்டமளிக்கிறது. முடியை மென்மையாக்குகிறது, வலிமையடையச் செய்கிறது, ஆரோக்கியமாக்குகிறது. மென்மையான, பளபளக்கும் முடியைப் பெற, தலை குளிக்கும் முந்தைய நாள் இரவு தேங்காய் எண்ணெய் தெய்த்துக்கொள்ளவும்.
பாத வெடிப்பு: பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாகிறது. அதற்கு தேங்காய் எண்ணெயில் இருக்கும் குணப்படுத்தும் பண்பும் ஈரப்பதமூட்டும் குணமும் காரணமாகிறது. தினமும் தூங்கச் செல்லும் முன்பு, குதிகாலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டால், பாதங்கள் மிகவும் மென்மையாகும்.
தோலில் இறந்த செல்களை அகற்ற: சொரசொரப்பான உப்பு, சர்க்கரை போன்றவற்றுடன் சேர்த்து தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றப் பயன்படும். இப்படி அகற்றும்போது, தோலுக்கு எந்தவித சேதமோ எரிச்சலோ ஏற்படாது. தேங்காய் எண்ணெயின் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்பும், உப்பின் தோலை உரசி இறந்த செல்களைச் சுரண்டி அகற்றும் பண்பும் சருமத்தை சுத்தமாகவும் மென்மையாகவும் மாற்றும்.
மேக்கப்பை அகற்ற: தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி எப்போதாவது மேக்கப்பை அகற்ற முயற்சி செய்துள்ளீர்களா?இது உங்கள் முகம் மற்றும் கண்களில் இருந்து சிறப்பான முறையில் எல்லா விதமான மேக்கப்பையும் அகற்றும், அதுமட்டுமின்றி, சருமத்திற்கு இதமான, மென்மையான உணர்வையும் அளிக்கும். சிறிதளவு பஞ்சில் தேங்காய் எண்ணெயை சில துளிகள் தொட்டுக்கொண்டு, மேக்கப்பின் மீது மெதுவாகத் துடைத்தால் போதும், மேக்கப் கலைந்துவிடும்.
சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் நன்மையளிப்பது என்று தெரிந்துகொண்டோம். ஆனால், அதை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். அளவுக்கதிகமாக தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டால், சருமம் அதிக பளபளப்பாகவும் எண்ணெய் வழிந்தும் காணப்படும். ஆகவே மிகுந்த பலன்களைப் பெற, ஒரு சில நாட்கள் மிகச் சிறிய அளவில் பயன்படுத்தி எப்படி உள்ளது என்று பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்து அளவை மாற்றிக்கொள்ளவும். அதன் பிறகு, தினசரி பழக்கமாக அதனை மாற்றிக்கொள்ளலாம். இதனால் சருமத்திற்கு இயற்கையான ஊட்டமும் பொலிவும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக