இவை இருந்தால் நீங்கள் மன அழுத்தத்தில் பாதிப்படைந்து இருக்கிறீர்கள்
மருத்துவம்:இன்றைய அவசர உலகில் அனைவரிடமும் எது இருக்கிறதோ? இல்லையோ? இந்த மன அழுத்தம் மட்டும் அதிகமாகவே இருக்கிறது. வேலைப்பளு, குடும்ப சூழல், சமுதாயப் பிரச்சனைகள் என ஒவ்வொருவரிடமும் தங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்த என பிரத்யேக காரணங்கள் இருக்கின்றன.
இன்றைய உலகம் செல்லும் வேகம் அப்படி. அந்த வேகத்தில் பலருக்கு தங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பது கூட தெரிவதில்லை. கீழ்க்காணும் ஐந்து அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் நீங்கள் மன அழுத்தத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எரிச்சலடைவது
இதற்குத்தான் என ஒரு வரைமுறை இல்லாம தொட்டதெற்கெல்லாம் எரிச்சல் படுவது. அதுவும் அளவுக்கதிகமாக எரிச்சலடைவது. நாம் நினைத்தது போலவே எல்லாம் நடக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான ஆசை தான். ஆனால் எல்லாம் அப்படியே நடக்கவேண்டும் என்று இல்லை. அதனால் கொஞ்சம் விலகி இருந்து பார்த்தால் தெரியும். எதையும் நினைத்து நாம் எரிச்சலடைய தேவை இல்லை என்பது. நாம் எரிச்சலடைவதால் எதையும் மாற்ற முடியாது என்பதும்.
தூக்கமின்மை
அதிக அளவிலான மன அழுத்தம் இருக்கும் போது நிம்மதியான உறக்கம் வராது. முன்பெல்லாம் வயதானவர்கள் தான் இந்த பிரச்சனை தங்களுக்கு இருப்பதாக புலம்புவார்கள். இன்றைய இன்டர்னெட் யுகத்தில் இளைஞர்கள் கூட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள்.
ஏதோ ஒரு விஷயம் அல்லது பல விஷயங்கள் நம் மனதில் இருந்து போராடிக்கொண்டிருக்கும் போது, நிம்மதியான உறக்கம் என்பது சாத்தியம் இல்லை தான். ஆனால் இவற்றை எல்லாம் வருந்தி இருந்தால் அடுத்த நாள் வரப்போகும் அந்த பிரச்சனைகளை சந்திக்கும் எனர்ஜியை மூளை எங்கிருந்து எடுத்துக்கொள்ளும்?
பொறுமை இன்மை
சாதாரணமாக சிலருக்கு பொறுமை என்பது சுத்தமாக இருக்காது. எனக்கெல்லாம் பொறுமை மிக அதிகம் என்பவர்களை கொண்டு போய் ஒரு நீண்ட க்யூவில் நிறுத்தினால் போதும், அவர்களின் பொறுமையின் உச்சம் என்ன? என தெரிந்துவிடும். ஒரு செயல் நாம் நினைத்த நேரத்துக்குள் நடந்து தீர வேண்டும். மனம் செல்லும் வேகத்தில் சுற்றி நடக்கும் செயல்களும் இருக்க வேண்டும். என நாம் நினைக்கும் போது தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மனித மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க உலகில் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தால் போதும் கொஞ்சம் பொறுமை வரும்.
சோகமாக இருப்பது
சோகமாக இருப்பது மன அழுத்தத்தின் ஒரு உச்சகட்ட அறிகுறிதான். ஒன்று யாராவது வந்து நம்மிடம் பேசி, நம் சோகத்திற்கான காரணம் அறிந்து, அதற்கு ஒரு ஆறுதல் கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இன்னொன்று அந்த சோகத்தை எப்படி போக்குவது என தெரியாமல் சோகமாக இருப்பது. மனதில் அந்த சோகத்தின் நீளம் குறையும் வரை சோகமாக இருந்துவிட்டு ஒரு புள்ளியில் அதை மறந்துவிட்டால் நல்லது. அதை இன்னும் நீளமாக்கி அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றால் அது ஆபத்து
தனிமைப்படுவது
சாதாரணமாக கலகலப்பாக இருக்கும் ஒருவர் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உட்படும்போது தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள தொடங்குவார்.
தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனையை விட்டு தானே வெளிவர எடுக்கும் முயற்சி தான் அந்த தனிமைப்படுத்துதல் என்றாலும், அந்த முயற்சியில் தோற்றுவிட்டால் அது தற்கொலை வரை கொண்டு செல்லக்கூட வாய்ப்பிருக்கிறது.
இந்த ஐந்து அறிகுறிகளும் உங்களிடம் இருப்பதாக தொன்றினால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லம் ஒன்று தான் ரிலாக்ஸ் ப்ளீஸ். இந்த உலகத்தில் மன அழுத்தமாக இருக்க நமக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
அதே போல நிம்மதியாக இருக்கவும் பல காரணங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. எதுவும் சரிப்பட்டு வரலையா? பயணங்கள் செய்யலாம். சிறிது தூரம் நாம் செய்யும் பயணங்கள், வாழ்வில் இன்னும் அதிக தூரம் பயணிப்பதற்கான எனர்ஜியை நமக்கு கண்டிப்பாகத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக