வியாழன், 31 மே, 2018

குழந்தைகளிடம் மதிப்பைக் கூட்ட பெற்றோருக்கு 5 வழிகள்!

குழந்தைகளிடம் மதிப்பைக் கூட்ட பெற்றோருக்கு 5 வழிகள்!

நம் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீது மதிப்பு மிகுந்தால்தான் நம்மையும், நாம் சொல்வதையும் அவர்கள் மதிப்பார்கள். இதற்கான எளிதான 5 வழிகள் இதோ... 

எதிர்மறையான பேச்சுகளைத் தவிர்த்தல் 

"இதை செய்யாதே", "இது நடக்காது" என்று எதிர்மறையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, குழந்தைகளுக்கு நல்லதையும், நன்மையானதை குறித்தும் அதிகம் பேச வேண்டும். மேலும், எப்படி ஒரு செயலை சரியாய் செய்ய முடியும் என்று அவர்கள் உடன் இருந்து வழிநடத்தலாம் அல்லது உதவலாம். இதனால் நம் குழந்தைகள் செய்யும் எல்லாமே தவறு என்று நாம் கோபப்படாமல், எதுவரை அவர்களுக்கு புரிந்து இருக்கிறது, எதில் தவறுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். 

உதாரணமாக, நம் குழந்தைக்கு கணக்கு என்றாலே வராது, தப்பாகத் தான் செய்வார்கள் என்று திட்டுவதை தவிர்த்து விட்டு, எந்த இடத்தில் கணக்கு புரியவில்லை; எந்த இடத்தில தவற விடுகிறார்கள் என்பது தெரிந்து, அவர்களுக்கு அதை கற்றுத்தரும்போது நிச்சயம் பலன் கிட்டும்.
பாராட்டுகளும் பரிசுகளும் 

குழந்தைகள் தப்பு செய்யும்போது அவர்களைத் திட்டும் நாம், அவர்கள் செய்யும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைப் பாராட்ட தவறி விடுகிறோம். குழந்தைகள் செய்யும் சின்ன நல்ல விஷயங்களை பாராட்டும்போதோ அல்லது ஏதேனும் பரிசு கொடுத்து அங்கீகரிக்கும்போதோ அந்தக் குழந்தை தானாகவே நல்ல விஷயங்களை அதிகம் செய்ய ஆர்வம்கொள்வர். நாளடைவில் அது அவர்களுக்குள் பழக்கமாகவே மாறிவிடும். 

உதாரணமாக, குழந்தைகள் தங்கள் புத்தக அலமாரியை சுத்தமாக வைத்து இருந்தால், "அடடா உன்னோட ஷெல்ப் சூப்பரா இருக்கே!" "இதை நீயே எப்படி இவ்வளவு அழகா சுத்தம் செய்தாய்!" "உன் ஷெல்பை நீ சுத்தம் செய்ததால் உனக்கு பிடித்த உணவை அம்மா இன்று சமைத்து தருகிறேன்" என்று பாராட்டலாம். வீட்டிற்கு வரும் விருந்தினரிடமும் என் பிள்ளை சுத்தப்படுத்தியது என்று கட்டலாம்.
விளைவுகளை உணர்த்துங்கள் 

குழந்தைகள் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் செய்யும் சின்னத் தவறுகளை அவர்களே சரிசெய்ய வைக்க வேண்டும். 

உதாரணமாக, குழந்தைகள் கொட்டும் தண்ணீரை அவர்களையே துடைக்க வைக்க வேண்டும். அவர்கள் தொலைக்கும் பொருள் எங்கு இருக்கும் என்று தெரிந்தால், அதை எடுத்து கொடுக்காமல் அவர்களை அந்த இடத்தில தானாகவே தேடிக் கண்டுபிடிக்க வைக்க வேண்டும்.
விவாதங்களை தவிர்த்திடுங்கள் 

குழந்தைகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அவர்கள் தரப்பு வாதங்களை காது கொடுத்து கேளுங்கள். தங்கள் தரப்பு நியாங்களை பிள்ளைகள் முன்வைக்கும்போது அவர்கள் நிச்சயமாக மரியாதையாய் அதை செய்ய அறிவுறுத்துங்கள். பழைய தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் விவாதத்தை பெரிதாக்குவதை தவிர்த்திடுங்கள். 

உதாரணமாக, பள்ளியில் இருத்து தாமதமாக வீட்டிற்கு வந்தால், "எனக்கு தெரியும், நீ ஒரு நாள் கூட வீட்டிற்கு நேரத்திற்கு வர மாட்டாய். நீ இங்க, அங்க போய் இருப்பாய்" என்று கத்தாமல். ஏன் இன்று தாமதமாய் வந்தார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை காது கொடுத்து கேளுங்கள்.
நல்ல முன்மாதிரி 

குழந்தைகள் உங்களைப் பார்த்துதான் வளர்க்கின்றனர். பிள்ளைகள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதற்கு நீங்களே சிறந்த எடுத்துக்காட்டாய் அவர்கள் முன் திகழ்ந்திடுங்கள். சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று இருக்கும் பெற்றோரை நிச்சயம் குழந்தைகள் மதிக்க மாட்டார்கள். 

உதாரணமாக, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் நாமே அதை மீறும்போது பிள்ளைகள் எப்படி நாம் சொல்வதை கேட்டு நடப்பார்கள்? 

எல்லாம் நூறு சதவிகிதம் சரியாக நடக்க வேண்டும், மற்ற குழந்தைகள் போல நம் குழந்தைகள் இல்லை. எந்த தவறு செய்தாலும் நிச்சயம் என் பிள்ளை மேல் இருக்கும் அன்பு எனக்கு குறையாது போன்ற தெளிவோடு பெற்றோர்கள் இருந்தால் நிச்சயம் வீட்டில் சத்தத்தை உயர்த்தி குழந்தைகள் சீர்செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 

கே.ஏ.பத்மஜா , கட்டுரையாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக