வியாழன், 31 மே, 2018

டீன் ஏஜ் சிக்கல்கள் 1 - உங்களை பிள்ளைகள் வெறுக்கிறார்களா?

டீன் ஏஜ் சிக்கல்கள் 1 - உங்களை பிள்ளைகள் வெறுக்கிறார்களா?

நம் அனைவருக்கும் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை நினைத்துப் பார்த்த்தால் மனதுக்குள் சந்தோஷம் கரைபுரண்டு ஓடும். டீன் ஏஜில் நண்பர்களுடன் சுற்றித் திரிந்தது, மனதுக்குப் பிடித்த ஆணையோ, பெண்ணையோ பார்த்தால் உடலெங்கும் மின்சாரம் ஓடியது, வீர தீரமிக்க பல செயல்களைச் செய்தது என பல நினைவுகள் கண் முன் வந்து ஆடும். 'அந்தப் பருவம் அப்படியே நீடித்து இருக்கக் கூடாதோ?' என இப்போதும் மனம் ஏங்கும்.
ஆனால், இப்போது வீட்டில் அதே டீன் ஏஜில் மகனோ, மகளோ இருந்தால், 'அய்யோ இவன் படுத்துற பாடு தாங்கல, என்னைய கொஞ்சம் கூட மதிக்கிறது இல்ல, நான் சொல்லுறதக் கேக்குறது இல்ல, எப்பப் பாரு செல்லும் கையுமா இருக்கான். இல்லாட்டா, கிரிக்கெட் பேட்டைத் தூக்கிட்டு ஃபிரண்ட்ஸ் கூட போறவன் எப்ப வரான் போறான்னு தெரியல' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வீசுகிறோம். 
ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையே வாழ்க்கை முறையில் பல நூறு விஷயங்கள் மாறுகிறது. ஆனால் டீன் ஏஜ் சிக்கல்கள் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.   
டீன் ஏஜ் பருவத்தில் குறிப்பாக ஐந்து பெரும் சிக்கல்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் வரும். குழந்தை ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் வரை பெற்றோர் எது சொன்னாலும் அதை சரி என்று நம்பி, அதை பின்பற்றியிருக்கும். 'இந்த பேன்ட் போடு, இந்த சர்ட் போடு... இதுதான் உனக்கு நல்லா இருக்கும்' என்று அம்மாவோ அப்பாவோ சொன்ன கணத்தில் உடனே மறுபேச்சின்றி அந்த ஆடையை போட்டுக்கொள்ளும். அப்போது, அம்மா - அப்பா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று குழந்தை பெற்றோரை முழுவதுமாக நம்பியது. அதனால் பெற்றோர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டது.
ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல், அதாவது 14 வயதுக்கு மேல் வந்த மகனிடமோ, மகளிடமோ போய் பெற்றோர் கருத்து சொன்னால், அதை உடனே ஏற்றுக்கொள்ள தயங்கும். காரணம், தற்போது டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்து ஒரு படி மேல போய்விட்டதால் தனக்கு என்று ஒரு ரசனை, கருத்து, சிந்தனை ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள முனைவார்கள். அப்போது அம்மா, அப்பா சொல்லும் எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும். 'எனக்கு என்ன வேணும்னு தெரியும் போம்மா' என்று அவர்கள் சர்வ சாதாரணமாகத்தான் சொல்வார்கள். ஆனால் அம்மாக்களோ, 'அய்யோ நேத்துவரைக்கும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவன்/ள் இப்ப எதிர்த்து எதிர்த்து பேசுறானே/ளே' என்று புலம்ப ஆரம்பிப்பார்கள்.
அது சில வீடுகளில் பூகம்பமாக வெடிக்கும். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் சண்டையாக வளரும். இதனால் அம்மாக்கள் நிம்மதியின்றி கவலையுடன் இருப்பார்கள். ஏன் அப்பாவிடம் பிள்ளைகளுக்கு இந்த சிக்கல் வராதா? என்ற கேள்வி வரலாம்.  பெரும்பாலான குடும்பங்களில் அப்பா அதிகாரத்தின் தலைவனாக இருப்பதால், பிள்ளைகள் அப்பாவிடம் அடக்கித்தான் வாசிப்பார்கள். அதுவும் ஆண்பிள்ளைகள். ஆனால் அதே ஆண்பிள்ளைகள் டீன் ஏஜின் அடுத்த படிக்கட்டில் கால் வைத்துவிட்டால் அதே அதிகார அப்பாவை முறைப்பார்கள். எதிர்ப்பார்கள். 
டீன் ஏஜ் என்றாலே பிள்ளைகள் இப்படித்தான் அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேசுவார்களா? இதற்குத் தீர்வே இல்லையா என்று பதற வேண்டாம். கண்டிப்பாக தீர்வு இருக்கிறது. 
ஒரு எல்லை வரை அம்மா, அப்பா பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்துப் பேசுகிற எல்லா விஷயங்களுக்கும் உடனே நாம் எதிர்வினை புரியாமல், அமைதியாக இருப்பதுதான் பிரச்னைகள் வெடிக்காமல் இருக்க ஒரே தீர்வு. ஆனால் எல்லா நேரத்திலும் அமைதியாக இருப்பதும் ஆபத்து. 
சில நேரத்தில் உங்கள் பிள்ளை எதிர்த்து பேசுவது உங்கள் நிம்மதியையும் மன நிலையையும் பாதித்து, அவருடைய நடத்தையையும் பாதிக்கக் கூடியதாக இருந்தால், நிச்சயம் இப்படி நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். இது, மிகவும் பழைய அணுகுமுறைதான் என்றாலும் இதுதான் இதற்கு சரியான தீர்வு. 
ஆம், 'மகளே, நீ இப்படியே பேசுவதா இருந்தா நிச்சயம் என்கிட்ட பேசாத' என்று கறாராகச் சொல்ல வேண்டும். அப்போதுதான், இதுவரை பெற்றோர் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பிள்ளையின் மண்டைக்குள் ஓடும்? 'ஏன், அம்மா இப்படி சொன்னார்?'  என்று அவர்கள் யோசிப்பதற்கு நேரம் கொடுப்பது அவசியம். இந்த அணுகுமுறை நிச்சயம் பிள்ளையின் மனதையையும் நடத்தையையும் மாற்றும். 
ஆனால், எந்த சூழ்நிலையிலும் பிள்ளையின் மனதில் 'நம் அப்பாவும் அம்மாவும் நமக்கு என்ன நடந்தாலும் நம்முடன்தான் இருப்பார்கள், நம்மை பாதுகாப்பார்கள்' என்கிற உணர்வை அவர்களுக்குத் தருவது மிக முக்கியம். அந்த நம்பிக்கைதான் அவர்களின் மனதுக்குள் தோன்றும் பல பிரச்னைகளில் இருந்து வெளியே வர உதவி புரியும். 
ஒகே, 'எப்பப் பார்த்தாலும் எம்புள்ள செல்லும் கையுமா இருக்கான்' என்று குற்றம்சாட்டும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால், அடுத்த பகுதி உங்களுக்கானதுதான். காத்திருங்கள்.
- நாச்சியாள் சுகந்தி, கட்டுரையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக