தினமும் 10 நிமிஷம் அழுதா உடம்புல இருக்கிற இந்த வியாதியெல்லாம் சரியாயிடுமாம்!
உங்கள் வீட்டுப் பெண்கள், டீவி சீரியல் பார்த்திட்டு பிழியப்பிழிய அழுகிறார்களா? திட்டாதீர்கள், அழட்டும்! கண்ணீர் நல்லது! நிறைய வீடுகளில், மாலைநேரங்களில் கேட்கும், பிள்ளைகளின் ஆட்டம் பாட்டம், உற்சாகமான கூக்குரல் யாவும் மறைந்துவிட்டன. தற்கால வீடுகளை புலம்பல், அழுகை, கண்ணீர் மயமாக ஆக்கிவிட்டது, பெண்களைக் குறிவைத்து, போட்டிபோட்டுக்கொண்டு, அழுகாச்சி சீரியல்கள் தயாரிக்கும் தொலைக்காட்சி கம்பெனிகள்.
மாலை வேளைகளில், வாசலில் விளக்கேற்றி, பிள்ளைகளை பாடம் படிக்கச்சொல்லியும் அவர்களுக்குப் பிடித்த சிற்றுண்டிகள் செய்துவைத்தும், பிள்ளைகளின் ஆர்வத்தில், ஏற்பட்ட மனப் பூரிப்பில் மெய்மறந்த அன்னையரையெல்லாம், இக்காலம் மறந்துவிட்டது.
Third party image reference
மாலை ஆனாலே ஆறு மணிக்கு, இந்த சீரியல், பாவிப்பய தொரத்துரச்சே, நேத்து பயந்து ஓடினாளே, பாவம், கீழே விழுந்திருப்பாளோ, அடிபடாமே காப்பாத்துடா பகவானே, அவனை பகவான் கொல்லணும், படுபாவிப்பய, என்று சீரியலின் கதையை மனதில் வைத்துக்கொண்டே, மாலைவேளையை அணுகும் இன்றைய சில அம்மாமார்களுக்கு, பிள்ளைகளுக்கு மாலை சிற்றுண்டி செய்துதருவது என்பது, நொடியில் சமைக்கும் நூடுல்ஸ் ஆக மாறி, பல ஆண்டுகள் ஓடிவிட்டன.
இருப்பினும், கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பது போலத்தான், சீரியல்களில் மூழ்கும் பெண்களுக்கும் ஒரு நன்மை இருக்கிறது.
பெண்களால் ஏறும் தங்கள் சீரியலின் ரேட்டிங்கால், கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், தம்மையறியாமல், அந்தப் பெண்களுக்குத் தரும் ஒரு வினோத நன்மையும் உண்டு. அதுதான் அவர்களின் கண்ணீர். அது தரும் நன்மைகள் பலப்பல.
கண்ணீரில் என்ன நன்மை?! பெண்களின் கண்ணீரைக் கண்டாலே தெறித்து ஓடும் ஆண்களைவிட, கண்ணீரில் கரைந்துவிடும் ஆண்கள் அதிகமுள்ள நாடு இது. பெண்களின் கண்ணீரே, அவர்களின் கடைசி ஆயுதம், தாங்கள் நினைத்ததை சாதித்து கொள்ள.
அப்படிப்பட்ட கண்ணீர், வேறு என்ன நன்மைகள் செய்துவிடும் என்கிறீர்களா? இருக்கிறது. அதற்குமுன், கண்ணீரின் கதையை சற்றே, நாம் அறிந்துகொள்வோம், வாருங்கள்.
ஆண்கள் பெண்கள் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் அவர்களின் நிலைக்கேற்ப தினமும், வெளியில் சென்றுவர வேண்டிய நிலைகளில் இருக்கிறார்கள். நடந்தோ, சைக்கிளிலோ, பைக்கிலோ சாலையில் செல்லும்போது, பிற வண்டிகளின் டீசல், பெட்ரோல் புகை, குப்பையைக் கொளுத்தும் புகை, அதன் தூசுக்கள் கண்ணில் படும்போது, கண்கள் பாதிக்கின்றன. இதைத்தடுக்க கண்கள், கண்ணீரை சுரக்கின்றன. அவை கண்களைக்கழுவி, அழுக்குகள், தூசுக்கள் கண்களை பாதிக்கவிடாமல் தடுக்கின்றன.
நாம் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென பூச்சியோ அல்லது வண்டோ கண் இமைகளில் அல்லது கண்களில் வேகமாக அடித்துச்செல்லும்போது, ஒருவினாடி பார்வை இழந்து, அடிபட்ட சுரீர் வலியில், தடுமாறிப் போவோம்தானே!
வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, வலியைத்தரும் கண்களை கண்ணாடியில் பார்த்து, உடனே சிவந்த கண்ணில் ஏதாவது இருக்கிறதா, என்று இமைகளை விரித்து பார்க்கும்போது, கண்ணீர் தானாக அருவி போல, பார்வையை மறைக்குமளவு வெளியேறும். என்ன காரணம்?
கண்களில் என்ன பாதிப்பு வந்தாலும், உடனே, கண்களைக்காக்கவே, கண்ணீர். அதன்பிறகு, மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலும், முதலுதவி, கண்ணீர்தான்! அதிலுள்ள சத்துக்கள் கண்களைக்காத்து, நம்மையும் காக்கும்.
கண்ணீரின் வலிமை.
பெண்களின் கண்ணீரின் வலிமை எங்களுக்குத் தெரியும், அது பட்டுப் புடவையாகவோ, தங்கச் சங்கிலியாகவோ மாறும்போது, அதன் வலி எனக்குத்தான் தெரியுமய்யா, என்று முணுமுணுப்பார்கள் சில வீடுகளின் தலைவர்கள். என்ன செய்வது?, சில விஷயங்களை வாய்விட்டு பேசினால், வாயிற்கும் வயிற்றுக்கும் ஒன்றும் கிடைக்காமல் போய்விடுமே! நாம் சொல்ல வந்தது, இந்த வலிமையை அல்ல! அது உடலுக்கும், கண்களுக்கும், நன்மைகள் செய்யவல்ல, கண்ணீர் தரும் வலிமையை!
இயற்கைப் படைப்பின் அதிசயம் மனிதன் என்றால், உடலின் அதிசயம், கண்ணீர். தினமும் சுரக்கும் கண்ணீரே, கண்களுக்குள் நச்சுக்கிருமிகள் புகுவதைத் தடுத்து, கண்களை அலசி, காக்கின்றன.
கண்களின் கிருமிநாசினி என்று கண்ணீரைச் சொல்லலாம், கண்ணீரில் உள்ள கிருமிநாசினிகளே, கண்களைக் காக்கும் சக்தியாக இருக்கின்றன.
கண்ணீரில், லைசோசைம், மூசின் மற்றும் லிப்போகாலின் உள்ளிட்ட வேதித்தாதுக்கள் நிறைந்துள்ளன.
டாக்டர்.வில்லியம் ஃபிரே எனும் அமெரிக்க கண்ணீர் நிபுணர், கண்களில் வழியும் இருவகைக் கண்ணீரின் தன்மைகளைக் கூறும்போது,
சாதாரணமாக, கண்களில் தூசி விழும்போது வடியும் கண்ணீரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீரும், பத்து சதவீத தாதுக்களும் மிகுந்து, கண்களைக் காக்கின்றன என்கிறார்.
உணர்ச்சிப் பெருக்கால் அழுவது மறுவகை., அதுதான் நாம் மேலே சொன்ன, சீரியல் அழுகை. அதில் அதிக நன்மைகள் இருக்கிறதாம். உணர்ச்சி வயப்பட்ட அழுகையில், கண்ணீருடன், மனஅழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களும், கண்ணீரின் வழியே வெளியேறி விடுகிறதாம். இதன் காரணமாக, பெண்களின் மன அழுத்தம் குறைந்து, அவர்களின் உடல் நலம் வலுவாகிறதாம்.
பெண்களுக்கு என்ன மன அழுத்தம் என்று யாராவது கேட்க முடியுமா? சில பெண்களுக்கு அவர்களின் கணவர்களைப்பார்த்தாலே, மன அழுத்தம் எகிறிவிடுவதை, சமையலறையில் பாத்திரங்கள் படும் அடி உதையிலிருந்தே, உணரலாமே!
வெளியில் வாய்ச்சவடால் விடுபவர்களெல்லாம், வீடுகளில் பூனைபோலப் பதுங்கி, சமயங்களில் யாரும் அறியாமல் கண்ணீர்விட்டாலும், அதுவும் நன்மையே! என்பதை, நாம் இப்போது உணரமுடியுமல்லவா!
அழுகையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கப் பெண்கள்.
நெதர்லாந்தின் டில்பர்க் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அழுகை தொடர்பான ஆய்வு முடிவுகள், சுவாரஸ்யமான பல தகவல்களை நமக்குத் தருகின்றன.
உலகில் அதிகம் அழுவது பெண்கள்தான் என்பதை அந்த ஆய்வு உறுதி செய்தாலும், அது இந்தியப்பெண்களில்லை என்பதுதான் சுவாரஸ்யமான செய்தி.
அமெரிக்கப் பெண்கள் ஒரு மாதத்தில் சராசரியாக மூன்று அல்லது நான்கு முறை அழுகிறார்கள் என்றால், அமெரிக்க ஆண்கள் மாதத்திற்கு சராசரியாக, இரண்டு முறை அழுகின்றனராம். உலகிலேயே குறைந்த அளவு அழுவது சீனப்பெண்கள்தானாம், மாதத்திற்கு சராசரியாக இரண்டுமுறை அல்லது அதில் பாதிதான். கொடுத்துவைத்த சீனப்பெண்கள் என்ற, நம்மூர் அம்மணிகளின் பெருமூச்சு கேட்கிறது!.
உலகில் மிகக்குறைந்த அளவு அழும் ஆண்கள் பல்கேரியர்களாம். மாதத்திற்கு ஒருமுறைக்கு கீழாகவே, அவர்களின் சராசரி அளவு இருக்கிறது. அழுகை சீரியல்கள், குடும்பப் பூசல்கள் இவற்றில் இந்தியப்பெண்கள் அடிக்கடி கண்ணீர் வடித்தாலும், அதிலும் ஒரு நன்மை இருக்கிறது என்பதை நாம் அறிந்தோம்.
ஆயினும், ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும், உணர்ச்சிவயப்பட்ட நிலைகளில், கோபத்தில், உடல்நல பாதிப்பில் அழுவது ஒருவகையாக இருந்தாலும், அளவு கடந்த சந்தோசத்தில், உற்சாகத்தில் வரும் அழுகையும் உண்டு என்பதையும் நாம் உணரணும். டிவி சீரியல்கள் பார்த்து அழுதால்தான் நமக்கு நன்மை அல்லது கணவரிடம் சண்டை போட்டு கண்ணீர்விட்டால்தான், நன்மை என்று எண்ண வேண்டாம்.
உற்சாகமான மனநிலைகளில், சுட்டிக் குழந்தைகள் வீடுகளில் செய்யும் குறும்புகளில், நல்ல நகைச்சுவை காட்சிகளை காணுகையில் மனம் விட்டு சிரிக்கும்போது, நம்மையறியாமலே, கண்ணீர் வரும். அந்த ஆனந்தக் கண்ணீரில், உடலை, மனதை வருத்தும் மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்கள் தானாகவே, வெளியேறிடும்.
அழுகையை அடக்காமல் கண்ணீரை வெளியேற்றவேண்டும், அடக்கினால், மண் அழுத்தம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். வாய்ப்பு கிடைக்கும்போது, மனம்விட்டு கண்ணீர்வர சிரியுங்கள்! உடல் சமநிலையடைந்து, மனதில் அமைதியும், செயல்களில் தெளிவும் ஏற்பட்டால், மனைவியின் கோபமும் மறைந்திடும்! வாழ்க்கையும் இன்பமாகிடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக