செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆடித்தள்ளுபடியில் ஆடை வாங்க போறீங்களா??? இத கொஞ்சம் படிச்சு பாருங்க ஆடி போவீங்க ஆடி ...

ஆடித்தள்ளுபடியில் ஆடை வாங்க போறீங்களா??? இத கொஞ்சம் படிச்சு பாருங்க ஆடி போவீங்க ஆடி ...

ஆடி மாதம் பிறந்தா போதும், உடனே துணிக்கடைகளின் விளம்பரங்கள் டிவியிலும், நாளிதழ்களிலும் திரும்ப திரும்ப போட்டு, நம்மை துணிக்கடைக்கு கிளப்பிவிட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். நமக்கும், வருடம் முழுதும் துணி வாங்கினாலும், ஆடித்தள்ளுபடியில் வாங்கி உடுத்தினால்தான் ஒரு திருப்தி.
இந்த ஒரு விஷயத்தை மனதில் நிறுத்தி, சாதாரண துணிக்கடை முதல் பெரிய பிராண்டட் ஆடை நிறுவனங்கள் மற்றும் கார்பொரேட் ஆடை நிறுவனங்கள் கூட ஆடித்தள்ளுபடி விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன. அவ்வளவு ஏன், நம் பக்கத்து மாநில மக்கள் கூட, ஆடித்தள்ளுபடியில் ஆடைகள் வாங்க தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் காலம் இது. மிகக்குறைவான விலை, நிறைய ரகங்கள், தரமான துணிகள் என்பதில் ஆடித்தள்ளுபடி மக்களை திருப்திப்படுத்தி விடுகிறது.
ஆடித்தீபாவளி
ஆடி மாதத்தில் அம்மன் கோவில் விசேஷங்களையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, ஆடித்தள்ளுபடி முன்னால் நிற்கிறது. இதில் சிறிய ஊர், பெரிய ஊர், சிறிய கடை, பெரிய கடை என்றெல்லாம் பாகுபாடே கிடையாது. ஜவுளி நிறுவனங்களுக்கு இது ஆடித்தீபாவளி.
ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம், 50%-60% தள்ளுபடி, இந்த வாசகங்களை, எல்லா துணிக்கடை வாசலிலும் விளம்பரங்களிலும் காணலாம். இதில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், செல்போன் கடைகள், ஹோட்டல்கள், ஏன் கார் கூட இந்த ஆடிக்காற்றில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. ஆனாலும், ஆடித்தள்ளுபடியில் ஆடைகள் வாங்குவதுதான் நம் மக்களுக்கு ஸ்பெஷல்.
ஆடித்தள்ளுபடியில் துணிகளை வாங்கலாமா?
இந்த தள்ளுபடி விளம்பரங்களைப் பார்த்து கடைகளுக்குப் படையெடுக்கும் மக்கள் மனதில் இந்த கேள்விகள் எல்லாம் எழும். மற்ற நாட்களில் இல்லாமல் இப்போது எப்படி இவ்வளவு குறைவான விலை? இது உண்மைதானா? எந்த அளவு லாபகரமானது? இந்த கேள்விக்கெல்லாம் விடை தெரிய மேலே படியுங்கள்.
விற்க முடியாமல் கிடக்கும் பழைய துணிகளை விற்பனை செய்ய கொண்டுவரப்பட்டதுதான் ஆடித்தள்ளுபடி. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. இக்காலத்தில் பல ஜவுளிக்கடைகள் ஆடித்தள்ளுபடிக்காகவே மில்களுக்குச் சென்று குறைந்த விலையில், அதிக அளவில் துணிகளை வாங்கி தள்ளுபடியில் விற்கிறார்கள்.அது எப்படி புதிய ரகங்களுக்கு இவ்வளவு குறைந்த விலை? இங்குதான் இருக்கிறது விஷயம்.
கொள்முதல் செய்த புதிய ரகங்களோடு, விற்காமல் கிடக்கும் பழைய ரகங்களை கலந்துவிடுவார்கள்.இவற்றை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, கடையினுள் ஆரவார விளம்பரங்கள், கூட்ட நெரிசல் ஆகியவை இருக்கும். அதுமட்டும் இல்லாமல், யார் அதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள்? நேரமும் கிடையாது. நீங்கள் பார்த்துப்பார்த்து வாங்குவதற்குள் அந்த ரகமே காலியாகிவிடும். இதுதான் துணிக்கடைகளின் ஆடித்தள்ளுபடி டெக்னிக் .
இப்படி பழைய துணிகளையும் சேர்த்து காலி செய்தால்தான், ஆடி மாதத்திற்கு பிறகு வரும் பண்டிகை நாட்களுக்கு, புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்த முடியும். மேலும் விற்பனை, மற்ற நாட்களைவிட இரு மடங்காக இருப்பதால் ,இவர்கள் துணிகள் வாங்கும் மில்களிலும், ஆடை தயாரிப்பு நிறுவனங்களிலும், இவர்களுக்கு அதிகமான தள்ளுபடியில் துணிகள் கிடைக்கின்றன. இவ்வகையிலும் துணிக்கடைகள் லாபத்தை ஈட்டுகின்றன.
கையில் காசு வாயில் தோசை என்பதைப்போல், கடனுக்கு வாங்காமல் மொத்தமாக காசை கொடுத்து, துணிகளை வாங்கி, அதில் கிடைக்கும் விலை தள்ளுபடியாலும் லாபத்தை ஈட்டுகின்றன துணிக்கடைகள் .மொத்தத்தில் அதிக விற்பனை ,குறைந்த லாபம், பழைய ஸ்டாக் கிளியர் செய்வது, இவைதான் ஆடித்தள்ளுபடி வியாபார உத்தி.

நம்மை ஏமாற்றுகிறார்களா?



தள்ளுபடி விலை என்பது வாடிக்கையாளர்களை கவர்வதற்கே. இதில் 10% முதல் 20% வரை தள்ளுபடி தரும் கடைகள் ஓரளவு நியாயமாக செயல்படுகின்றனர். ஆனால், 50% முதல் 60% வரை தள்ளுபடி என்பது, ஏமாற்றுவேலை. இதை நம்பி கடை உள்ளே சென்றீர்கள் என்றால், கடையின் மூலையில் ஒரே ஒரு கவுண்ட்டர் மட்டும் போட்டு 50%-60% தள்ளுபடி என்று அறிவித்திருப்பார்கள். மற்ற ரகங்களுக்கு எல்லாம் 10%-20% தள்ளுபடிதான். இது ஒருவகை ஏமாற்று வேலை.
மற்றொன்று, ஆடைகள் மீது ஒட்டப்படும் விலை ஸ்டிக்கர். அந்த ஆடையின் விலை 600 ருபாய் என்றால், இவர்கள் 1000 ருபாய் என ஸ்டிக்கர் ஒட்டி, தள்ளுபடி கழித்து 600 ரூபாய்க்கு விற்பார்கள். இதில் எங்கே வந்தது ஆடித்தள்ளுபடி? வருடம் முழுதும் வாங்கினாலும் இதே விலைதான்.
மற்றொரு வித்தியாசமான டெக்னிக் , ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். இதை இவர்களே செட் செட் ஆக பிரித்து வைத்திருப்பார்கள். அதாவது மூன்றில் ஒரு ஆடை மட்டுமே புதிதாகவும், எல்லோரும் வாங்கும்படியும் இருக்கும். மற்ற இரண்டும்.... சொல்லவே வேண்டாம், நீங்களே யூகித்து இருப்பீர்கள். அதேபோல் விலையில் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு நல்ல ஆடை 500 ருபாய் இரண்டு பழைய ஸ்டாக் ஆடைகள் 250 + 250 ருபாய் மொத்தம் சேர்த்து 999 என்று விலையை பார்த்து 1000க்கு மூன்று துணியா என்று வாயடைத்து போவதுதான் ஆடித்தள்ளுபடி...
பிறகு எப்படித்தான் ஆடைகளை வாங்குவது?
இந்த ஆடித்தள்ளுபடிக்கு துணிகள் வாங்க போகும்போது, குறைந்த தள்ளுபடி உள்ள ஆடைகளையே தேர்ந்தெடுங்கள். அதிக தள்ளுபடிக்கு ஆசைப்பட்டீர்கள் என்றால், பழைய விற்பனை ஆகாத ஆடைகளை உங்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.
ஆடைகளை வாங்கும்போது, பிரித்துப்பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் அதில் ஏதாவது டேமேஜ் இருந்தால் தெரியும். அங்கு இருக்கும் கூட்டத்தில் இது சாத்தியமில்லைதான் .ஆனால் அதற்கும் ஒரு வழி உண்டு. மதிய நேரங்களில் மற்றும் வார நாட்களில் கடைகளில் கூட்டம் குறைவாக இருக்கும். சில கடைகளில் "லேட் நைட் சேல்" என்று இரவு 10 மணிக்கு பிறகும், நீங்கள் ஷாப்பிங் செய்யலாம். இவற்றை பயன்படுத்துங்கள்.
அதேபோல், மொத்தமாக பிளாஸ்டிக் கூடைகளில் கொட்டியிருப்பதை அள்ளிக்கொண்டு வராதீர்கள். அவற்றில்தான் பழைய ஸ்டாக் மற்றும் டேமேஜ் ஆடைகள் அதிகம் இருக்கும். மேலும் துணிகளில் எதாவது பிரச்னை இருந்தால், மாற்றி தருவார்களா என விசாரித்துவிட்டு பிறகு வாங்கவும். பொதுவாகவே தள்ளுபடி விலையில் வாங்கிய துணிகளை மாற்றி தர மறுப்பார்கள். எனவே முதலில் இதை விசாரித்துவிட்டு வாங்குவது நல்லது.
இதையெல்லாம் படிச்சிட்டிங்க இல்லையா? இனிமேல் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. ஆடித்தள்ளுபடி பர்ச்சேஸ் ல் புகுந்து விளையாடுங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக