வியாழன், 19 ஜூலை, 2018

நலமுடன் வாழ மருத்துவருடன் வெளிப்படையான உரையாடல்...

நலமுடன் வாழ மருத்துவருடன் வெளிப்படையான உரையாடல்...

மருத்துவரைப் பார்க்கப் போக வேண்டும் என்றாலே, நம்மில் பலருக்கும் இனம்புரியாத ஒரு பதற்றம் மனதில் தொற்றிக்கொள்ளும். ஆனால் இந்தப் பயம், பல்வேறு முக்கியமான விஷயங்களை மறக்கடித்து விடுகிறது. மருத்துவருடனான சந்திப்பைப் பயன் தருவதாக அமைத்துக்கொள்வதில், நமக்கும் முக்கியப் பங்கு உண்டு.
பொதுவாக இந்தக் காலத்தில் மருத்துவர்களுடன் நாம் செலவழிக்கும் நேரம் பெரும்பாலும் குறைவாகவே இருக்கிறது; இரு தரப்பினருக்கும் பல்வேறு அவசரங்கள் இருக்கலாம். எனவே, மருத்துவரைச் சந்திக்கும் முன் நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியம்.
மருத்துவர் பொறுப்பு என்ன?
மருத்துவரிடம் நம் முழு வாழ்க்கை வரலாற்றையும் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. அதைக் கேட்பதற்கு மருத்துவர்களுக்கு நேரமும் பொறுமையும் இருக்காது. வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட ஒரு பொது மருத்துவர் (General practitioner/ General physician), ஒரு நோயாளியைப் பார்ப்பதற்குப் பத்து நிமிடங்களே சராசரியாகச் செலவிடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நம் நாட்டில் ஐந்து நிமிடங்கள் கிடைப்பதே அரிது. சிறப்பு மருத்துவர்கள் சற்றுக் கூடுதல் நேரம் செலவிடலாம். ஆனால் மருத்துவ அறநெறிகளின்படி, உங்களுக்கான நோய் அறிகுறிகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளவும், உங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பற்றி விளக்கிக் கூறவேண்டிய பொறுப்பும் மருத்துவருக்கு உண்டு.
என்ன கேட்க வேண்டும்?
சரி, மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதற்கு முன் நாம் எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? சில முக்கிய அம்சங்கள்:
உங்களுக்கு உள்ள இரண்டு, மூன்று முக்கிய நோய் அறிகுறிகளை ஒரு தாளில் குறித்துச் செல்லுங்கள். அந்த அறிகுறிகள் எப்போது தொடங்கின அல்லது பார்த்தீர்கள், அவற்றின் தன்மை என்ன, எப்போது அதிகரிக்கின்றன, எப்போது குறைகின்றன என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு முன் செய்யப்பட்ட முக்கியப் பரிசோதனை முடிவுகள் எதுவும் இருந்தால், அதை மருத்துவரிடம் காட்டுவதற்குத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய ஃபைலை காட்டி அவரைத் திணறடிக்காதீர்கள்.
தேவைப்பட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் அல்லது நெருங்கிய நண்பர் ஒருவரை உடன் அழைத்துச் செல்லுங்கள். இரண்டு - மூன்று பேர் நிச்சயமாக வேண்டாம்.
மருத்துவரோடு பேசும்போது
மருத்துவர் கூறுவது புரியவில்லை என்றால் (மருத்துவர்களுக்கென்றே ஒரு மர்ம மொழி உண்டு), அதை விளக்கும்படி கேட்கத் தயங்க வேண்டியதில்லை.
உங்களுக்கு உள்ள நோயின் பெயர் என்ன என்று கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அதன் அடிப்படைத் தன்மைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
சில பரிசோதனைகள் தேவை என்று மருத்துவர் கூறலாம். அவை என்ன என்றும் அவற்றின் தேவை என்ன என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் என்னென்ன, அவற்றின் பக்க விளைவுகள் என்ன என்பதைக் கேட்டறியுங்கள். எவ்வளவு காலம் இந்த மருந்துகளை உட்கொள்ள / அருந்த வேண்டும் என்றும் மருந்தைத் தவிர்த்து வேறு சிகிச்சைகள் உண்டா என்றும் கேளுங்கள்.
இறுதியாக, இந்த நோயிலிருந்து குணமடைய நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மறக்காமல் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேற்கண்டவை அனைத்தும் நுகர்வோர் உரிமைகள்; மருத்துவரின் தயாளக் குணத்தால் நமக்குக் காட்டப்படும் சலுகைகள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். உங்கள் கேள்விகளைக் கண்டு மருத்துவர் கோபம் கொண்டால், அவர் உங்களுக்கு ஏற்ற மருத்துவர் இல்லை என்று அர்த்தம். அக்கறையான வேறொரு மருத்துவரை நாடுவதே சிறந்த வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக