யோகா & யோகா சிகிச்சை ஓர் அறிமுகம்
யோகா பற்றி இன்று தொலைக்காட்சி, பத்திரிக்கை, விளம்பரங்கள் மற்றும் புத்தகங்கள் வழியே பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிறைய பேர் அது பற்றி பேசுவதும், விளக்கம் அளிப்பதும் நடக்கிறது. ஆனால் அவை முழுமையானவையா என்றால் 'இல்லை'.
அரை-குறையாகத் தெரிந்ததை புரிந்ததை வைத்துக் கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள்பாட்டில் பேசுகிறார்கள், யோகக் கலையை அணுகுகிறார்கள். மக்களுக்குக் குழப்பங்கள் அதிகமாகின்றன. அதனால் எங்கு போவது, யார் சரியான யோகா ஆசிரியர் என்று தெரியாமல் இருக்கிறார்கள். காரணம் ஒரே பெயரில் இத்தனை குழப்பஙகள் நடக்கின்றன. நம் உடல், மூச்சு மற்றும் மனம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்யக்கூடிய ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்றவற்றை யோகிகள், நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். நாம் இதை அறியவில்லை, அருமையை சரியாய் உணரவில்லை.
யோகா வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி அவர்கள் மதிக்கத் தொடங்கிய பின்பு தான் நாம் கவனிக்கத் தொடங்கினோம். பலரும் இந்தியாவில் யோகாவை முறையாகப் பயிலத் தொடங்கினர்.
நாம் வெறும்வாயில் யோகா பற்றி கதைப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெளிநாட்டினர் ஆராய்ச்சி மூலம் யோகாவை நன்கு அறிந்து, மதிப்பீடு செய்து, அதன் சக்தியை உணர்ந்தனர். அதன் உபயோகம் எத்தகையது என்பதை புரிந்து கொண்டார்கள். அதனால் தற்போது அங்கு லட்சக்கணக்கானவர்கள் யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நம்மிடம் யோகா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை. யோகா சரியான வழியில் பரவலாக போய்ச் சேரவில்லை. காரணம் இதை மதம் சார்ந்து பார்ப்பதும் ஒரு காரணம். உடல், மனம், பற்றிய விழிப்புணர்வு இல்லை. உடலுக்கு ஏதாவது வந்தால் தான் அது பற்றி யோசிக்கிறார்கள் பெரும்பாலோர். ஆனால் உடல், மனம், ஆரோக்கியத்திற்கு மதம் தேவையில்லை. அதேபோல் யோகாவிற்கும் அவை தேவையில்லை. நம் எல்லோருக்காகவும் தான் நம் யோகிகள் சித்தர்கள் பாடுபட்டு யோசித்து யோகா முறையை உருவாக்கி உள்ளனர்.
ஆசனங்களை உருவாக்கியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ- மதத்திற்கோ அல்ல. யோகாப் பயிற்சியில் மதம் பற்றி பேசுவதில்லை. உடலில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் உடல் பற்றியும் தான் பேசுகிறோம்.
யோகா என்பது ஆசனங்கள் மட்டும் கொண்டதல்ல. யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், மற்றும் சமாதி ஆகிய எட்டு அங்கங்க்ள கொண்டதாக கூறுகிறார் பதஞ்சலி முனிவர்.
பொதுவான யோகா என்றால் நோய்- நொடி இல்லாதவர்கள் தனித்தோ, குழுவாகவோ செய்வதாகும். இதில் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கும். உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் தினசரி வாழ்க்கையில் நன்றாக வேலைகள் செய்யவும் இந்த பொது யோகா அமையும். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியை அறிமுகப்படுத்தவும் முடியும் செய்யாத ஆசனங்களை புதிது புதிதாக செய்யவும் இடமுண்டு.
இதனால் தினமும் நாம் செய்கின்ற வேலையில் முழு ஈடுபாட்டுடன் செய்ய நம்மை தயார் செய்கிறது யோகாப் பயிற்சி.
யோக சிகிச்சை என்பது யோகத்திலிருந்து வந்தது தான். ஆனால் இதன் அணுகுமுறை வேறு. இதில் ஒருவருடைய உடல், உடல் அமைப்பு, நோய் செய்யும் வேலை, குடும்ப நோய் வரலாறு, அவருடைய தேவை, அவருடைய யோகா செய்யக்கூடிய சக்தி, செய்யும் நேரம் போன்றவற்றை அறிந்து தனிப்பட்ட முறையில் தரும் பயிற்சியாகும்.
உதாரணத்திற்கு ஓற்றைத் தலைவலியுடன் ஒருவர் வந்தால், அதன் வேர்க்காரணங்களை அறிவோம். கழுத்து, தோள்பட்டையில் இறுக்கம் ஏற்பட்டுள்ளதா என்று பார்ப்போம். அவ்வாறு இருந்தால் அந்த இறுக்கத்தை சிறு சிறு அசைவுகள் மூலம் (மூச்சுடன்) தளர்த்தி சரி செய்வோம்.
நாள்பட்ட பல பிரச்சனைகளைக் கூட யோக சிகிச்சையில் வியக்கத்தக்க அளவில் சரி செய்ய முடிகிறது. பல அறுவை சிகிச்சைகளை தவிர்த்து யோகா மூலம் சரி செய்து வருகிறோம்.
முதுகுவலி, சைனஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பெண்களுக்கான உபாதைகள் உள்ளவர்கள் யோக சிகிச்சைக்கு வருகிறார்கள். ஒரே நோய் பிரச்சனை உள்ள இருவர் வந்தாலும் பயிற்சி வேறு வேறாகத்தான் இருக்கும். காரணம் ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல் அமைப்பு - இயல்பு – வயது.
பிற அம்சங்கள்- யோக சிகிச்சையை சில நேரம் மருந்து உதவியுடன் சரி செய்கிறோம். நாளடைவில் மருந்தின் அளவைக் குறைத்து பின்பு மருந்தை முழுதாக நிறுத்தும் நிலைக்கு கொண்டு வருகிறோம். சிலருக்கு மருந்தே இல்லாமலும் யோக முறையில் மட்டுமே முழுதாய் சரி செய்கிறோம்.
- யோகா சிகிச்சைக்கு முதலில் தேவை, நம்பிக்கையாகும். இரண்டாவது பயிற்சிக்கு எடுக்கும் முயற்சி. யோகத்தில் ஈடுபடுவோர் தாங்கள் எடுக்கும் முயற்சி – பயிற்சி முக்கியம்.
- யோகப் பயிற்சிகள் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை வராமல் தடுக்கலாம். இருக்கிற நோயின் வீரியத்தைக் குறைக்கலாம். சில நோய்களை முழுமையாக தீர்க்க முடியும். இதை சரியான யோகா ஆசிரியர்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.
- யோகா உலகம் பல அடுக்குகளை கொண்டது. அதில் உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்யும். திறந்த மனதோடு அணுகுங்கள். உங்களுக்கு புதிய வாழ்வு கூட சாத்தியப்படலாம். இன்று பல மருத்துவர்கள் யோகாவை தங்கள் சிகிச்சையின் அங்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக