பற்றுதல் கோளாறுகள் (Attachment Disorders)
மனசே... மனசே...
குழந்தை தன் தேவைகளை சரியாக புரிந்து யார் பத்திரமாகவும் / அன்பாகவும் பார்த்துக் கொள்கிறார்களோ, அவர்களிடத்தில் மிகவும் ஒட்டுதலுடனும் பாசமாகவும் இருக்கும். நிறைய சொந்தமிருந்தாலும், முக்கியமான ஒருவரிடத்தில் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது.
குழந்தை தன் தேவைகளை சரியாக புரிந்து யார் பத்திரமாகவும் / அன்பாகவும் பார்த்துக் கொள்கிறார்களோ, அவர்களிடத்தில் மிகவும் ஒட்டுதலுடனும் பாசமாகவும் இருக்கும். நிறைய சொந்தமிருந்தாலும், முக்கியமான ஒருவரிடத்தில் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது.
அந்த முக்கியமான ஒரு நபரிடமிருந்து பிரியும் போது பதற்றம் கொள்வது இயல்பு. இப்படி, ஆறேழு மாதத்திலிருந்து 5 வயது வரை ஏற்படும் தாய்-சேய் உறவு / பாசப் பிணைப்பு (Attachment) மிகவும் முக்கியமானது.
தாய் / குழந்தை பராமரிப்பாளர், குழந்தையின் தேவைகளான, பசி, தூக்கம், விளையாட்டு போன்றவற்றை சரியாக புரிந்து கொண்டு, சரியான நேரத்தில் அரவணைத்து உதவி செய்தால், இருவருக்குமிடையே உணர்வுரீதியான பந்தம் உருவாகக் கூடும். நல்ல மன ஆரோக்கியம், சமூக ஆரோக்கியம் பெற்று பிறரிடம் ஆரோக்கியமாக உறவு அமைத்துக் கொள்வதற்கும் இது ஏதுவாக அமைகிறது.
ஒருவேளை குழந்தை பராமரிப்பாளர் / தாய், குழந்தையின் தேவையைத் தொடர்ந்து புறக்கணித்தால், குழந்தைக்கு பாதுகாப்பற்ற பந்தம் (Insecure attachment) ஏற்படக் கூடும். இதன் மோசமான விளைவுகள், பெரியவர் ஆனபோதிலும் நீடிக்கக் கூடும். இவர்களால், ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. உணர்ச்சிகளை கையாளும் / வெளிப்படுத்தும் திறமையும் பாதிக்கப்படும். இப்படி ஏற்படும் பற்றுதல் பிரச்னைகளை (Attachment Issues) முதலிலேயே சரி செய்யவில்லையெனில், பெரியவர் ஆனாலும் (முக்கியமாக திருமண பந்தத்தில்) யாரையும் இவர்களால் முழுமையாக நம்ப முடியாது... அதோடு, ஆரோக்கியமான பாச உணர்வுகளையும் வெளிப்படுத்தவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது.
சிறு வயதில் தாய்-சேய் உறவில் ஏற்படும் கசப்பான அனுபவத்தினால், இவ்வுலகம் மிகவும் ஆபத்தான, பயமுறுத்தும் இடமென்றும், யாரையும் சார்ந்து வாழ முடியாது எனவும் தவறாக கற்றுக் கொள்வார்கள். தங்களைப் பற்றி தாழ்வாகவும் கருதுவார்கள். தாய்-சேய்க்கு இடையே ஏதேனும் காரணத்துக்காக பாசப்பிணைப்பு ஏற்படவில்லை என்றால், பற்றுதல் கோளாறு (Attachment Disorder) ஏற்படக்கூடும். இது குழந்தையின் வளர்ச்சியை, வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் பாதிக்கும். இது 9 மாதக் குழந்தையிலிருந்து 5 வயதுக் குழந்தைகள் வரை காணப்படுகிறது.இதில் இரு வகை உண்டு.
1.ரியாக்டிவ் பற்றுதல் கோளாறு (Reactive Attachment Disorder)
2.சமூகத் தடை/பயமற்ற பற்றுதல் கோளாறு (Disinhibited Social Engagement Disorder)
காரணிகள்?
1.குழந்தை பராமரிப்பாளர் (தாய்), குழந்தையின் உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்கு தேவையான ஆறுதல், பாசம், அரவணைப்பு, விளையாட்டு போன்ற குழந்தையின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பது அல்லது அதில் போதிய கவனம் செலுத்தாமல் இருத்தல். இதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். எ.டு: தாயின் ஆரோக்கியமற்ற மனநிலை, டீனேஜ் தாய், ஏழ்மை, குழந்தை/ தாயின் உடல்நலப் பிரச்னையால் மருத்துவமனையில் இருவரும் பிரிந்து இருக்க வேண்டிய சூழல்...
2.அடிக்கடி குழந்தைப் பராமரிப்பவரை மாற்றிக்கொண்டே இருப்பதால், நிலையான பந்தம் உருவாகும் சந்தர்ப்பம் குறைதல் (தத்து எடுப்பது, பெற்றோரின் மறைவு போன்ற காரணங்கள்).
3.காப்பகத்தில் வளர்க்கப்படும் போது, குழந்தைக்கு தனிப்பட்ட பாதுகாப்பு / கவனம் தரும் சந்தர்ப்பம் இல்லாததால் பந்தம் உருவாவதில் பிரச்னை.
அறிகுறிகள்?
ரியாக்டிவ் பற்றுதல் கோளாறு (Reactive Attachment Disorder) உள்ள குழந்தைகள் துன்பம் வரும் போது, மிகவும் அரிதாகவே ஆறுதல் தேடுவது வழக்கம். பராமரிப்பாளர் ஆறுதல் அளித்தாலும் அதைப் பெரும்பாலும் புறக்கணித்து விடவும் கூடும். மற்றவர்களிடம் தன்னுடைய எந்த உணர்ச்சிகளையும் வெளிப்
படையாக பகிர்ந்து கொள்ளாது. ஆனால், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருக்கும்.
1.மற்றவர்களின் கண் பார்ப்பதைத் தவிர்க்கும். 2. சிரிக்காது. 3. யாரையும் தூக்கிக் கொள்ள சொல்லி எத்தனிக்காது. 4. யாரிடமும் ஒட்டாமல் தனிமையாக இருக்கும். 5. குழந்தையை அரவணைக்க எந்த முயற்சி எடுத்தாலும், அதை தவிர்த்து விடும். 6. அழும்போது எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் அமைதியாகாது. 7. தனியாக விட்டுச் செல்லும் போதும், எங்கே போகிறோம் என கண்டுகொள்ளாது / திரும்பிப் பார்க்காது. 8. விளையாடுவதில் ஆர்வம் காட்டாது. 9. தொட்டாலோ / பாசம் காட்டினாலோ, அதை விரும்பாமல், அதற்கு மாறாக பயமே கொள்ளும். 10. சாதாரணமாக பழகும் போது கூட எரிச்சல், கவலை / பயம் கொள்ளும்.
இந்த அறிகுறிகள் ஏடி.எச்.டி / ஆட்டிஸம் உள்ள குழந்தையின் ஆரம்பகால அறிகுறிகள் போலவே இருக்கும். ஆகவே, இது பற்றுதல் கோளாறுதானா என்பதை உளவியல் நிபுணரோ / குழந்தை மனநல மருத்துவரோ கண்டறிந்த பின்புதான் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.சமூகத் தடை/பயமற்ற பற்றுதல் கோளாறு - அறிகுறிகள்ரியாக்டிவ் பற்றுதல் கோளாறு உருவாக காரணமாயிருந்த அதே விஷயங்கள்தான், சமூக தடை/பயமற்ற பற்றுதல் கோளாறையும் ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தத் தடையும் / பயமும் இல்லாமல் அஜாக்கிரதையாக முன்பின் தெரியாத ஆட்கள் யாருடனும், பேசவும் பழகவும் செய்வார்கள்.
விளைவுகள்?
இவ்விரு வகை பற்றுதல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சவாலான விஷயம். இவர்கள், பெற்றோர் / பராமரிப்பாளரின் பாசத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால், இவர்களின் எதிர்கால சமூக வாழ்க்கை / திருமண வாழ்க்கை மிகவும் பிரச்னைக்கு உள்ளாகும். இவர்களின் உணர்ச்சி / செயல்பாடு / உடல்/ அறநெறி வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படும். பின்வரும் பிரச்னைகள் தாக்கும் அபாயமும் அதிகம்.
1.மனச்சோர்வு (Depression),
2.ஆக்ரோஷம் / சீர்குலைக்கும் நடவடிக்கை .
3.கற்றலில் சிரமம் மற்றும் பள்ளியில் நடத்தைப் பிரச்னை.
4.அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாதது.
5.தாழ்வு மனப்பான்மை.
சிகிச்சை?
ஆதரவற்ற குழந்தைகளிடம் இக்கோளாறு அதிகம் காணப்படும். தாயின் மனநலப் பிரச்னையான மனச்சோர்வு / மன உளைச்சல் / மது / போதை அடிமை போன்ற விஷயங்களினால் ஏற்படும் பற்றுதல் பிரச்னைகளும், எதிர்காலத்தில் பல மனநலப் பிரச்னையைக் குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடும். பொதுவாக, போதிய பராமரிப்பற்ற / துன்புறுத்தப்படும் குழந்தைகளுக்கு பற்றுதல் கோளாறு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிகிச்சையின் முதல் கட்டமாக பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியம்.
சிகிச்சையின் இரண்டாம் குறிக்கோள், தாய் / பராமரிப்பாளருக்கும் குழந்தைக்கும் இடையே ஆரோக்கியமான உறவை ஏற்படுத்துவதுதான். பராமரிப்பாளருக்கு குழந்தை உடனான உறவை மேம்படுத்தும் திறன்கள் பயிற்றுவிக்கப்படும். குழந்தைக்கு ‘விளையாட்டு சிகிச்சை’ (Play therapy) அளிக்கப்படும். இந்த உத்தியின் மூலம் குழந்தை தன் எண்ணங்கள் / பயங்கள் / தேவைகளை, பாதுகாப்பான சூழலில் வெளிப்படுத்த முடியும்.
பெற்றோர் கவனத்துக்கு...பற்றுதல் கோளாறுள்ள குழந்தைகளின் மூலப் பிரச்னையே, ‘பாதுகாப்பு’தான். அவர்கள், பராமரிப்பாளரிடமிருந்து விலகுவதற்கும்,
நம்பிக்கையற்று போவதற்கும் காரணம், அவர்கள் உலகத்தை பாதுகாப்பற்றதாக உணர்வதுதான். அதற்காக, தங்களுக்கென்று அரண் எழுப்பி, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வதால், இவர்களால், பராமரிப்பாளரின் அன்பு / உதவியை ஏற்றுக் கொள்ள இயலாது. முதலில், குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம்.
1.பராமரிப்பாளர் / பெற்றோர், குழந்தையிடத்தில் தெளிவான எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது முக்கியம். எது சரியான செயல் / எது தவறான செயல்; எப்படி நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதைத் தெளிவாக உணர்த்தும் படி தொடர்ந்து ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். இப்படி நடந்தால், அது குழந்தைக்கு ஒருவித நம்பிக்கையையும், விஷயம் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற உணர்வையும் கொடுக்கும்.
2.குழந்தை தவறாக நடப்பதை வழிநடத்தும்போது பெற்றோருக்கு, தங்கள் உணர்ச்சியை சரிவர கையாளத் தெரிந்திருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு கண்டிக்கவோ / தண்டிக்கவோ கூடாது.
3.சண்டை முடிந்த உடனே, குழந்தையை சமாதானப்படுத்தி, ‘என்ன ஆனாலும் நான் உன்னுடன் இருப்பேன்’ என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
4.பொதுவாக இக்கோளாறுள்ள குழந்தைகள், தங்கள் வயதிற்கும் குறைவாக நடந்து கொள்வது வழக்கம்.
அவர்களை இன்னும் சிறு குழந்தைகள் போலவே பாவித்து, சமாதானப்படுத்த வேண்டும் (எ.டு: கட்டிப்பிடிப்பது, கையைப் பிடித்துக் கொள்வது). சிலருக்கு தொட்டால் பிடிக்காது என்பதால், மெல்ல மெல்ல, தொடர்ந்து அன்பு செலுத்தினால் காலப்போக்கில் புரிந்து கொள்வார்கள்.
5.இக்குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள இயலாததால், அதைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொண்டு வெளிக்காட்டவும் உதவி செய்யலாம்.
6.குழந்தைகளுக்கு என தனி நேரம் ஒதுக்கி, அவர்கள் சொல்வதை கவனித்து, பேசி, விளையாடுவது நல்லது.
7.சரியான உணவு, தூக்கம், விளையாட்டு (எ.டு. ஓடி விளையாடுவது / ஏதேனும் பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுவது) போன்ற ஆரோக்கிய பழக்க வழக்கங்கள் இக்குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்அடுத்த இதழில், குழந்தைகளுக்குஏற்படும் மனச்சோர்வு (Depression) குறித்து பார்ப்போம்.
சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால், இவர்களின் எதிர்கால சமூக வாழ்க்கை / திருமண வாழ்க்கை மிகவும் பிரச்னைக்கு உள்ளாகும்.
பற்றுதல் கோளாறுள்ள குழந்தைகளின் மூலப் பிரச்னையே, ‘பாதுகாப்பு’தான். அவர்கள், பராமரிப்பாளரிடமிருந்து விலகுவதற்கும், நம்பிக்கையற்று போவதற்கும்
காரணம், அவர்கள் உலகத்தைபாதுகாப்பற்றதாக உணர்வதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக