வியாழன், 14 ஜூன், 2018

தனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்! அதிர்ச்சி தகவல்..

தனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்! அதிர்ச்சி தகவல்..

தனிமையை வரம் என ஒரு சிலரும், சாபம் என வெகுஜனமும் சொல்வதுண்டு. அதுவும் இந்தக் காலக் கட்டத்தில் தனிமை என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது. கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற பின் தனியே இருக்கும் மனைவி, வெளிநாட்டில் கணவனும் வீட்டில் தனிமையுமாக இருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கு திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர்கள், காதல் தோல்வியால் தனக்குத் தானே தனிமையை தண்டனையாகக் கொடுத்துக் கொள்பவர்கள் இங்கு அதிகம். 
தனிமை ஒன்று தான் பிரச்னைகளில் இருந்து விடுபட சிறந்த வழி என பலர் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். நீங்கள் பெரும் பிரச்னையில் இருக்கும் போது தனியாக இருந்ததுண்டா? தேவையில்லாமல் எதை எதையோ மனம் யோசிக்கும். செத்து மண்ணோடு மண்ணாகப் போன விஷயங்கள் கூட நமது நினைவுகளில் மீண்டெழுந்து, நம்மை பயமுறுத்தும். இதனால் இன்னும் மன அழுத்தத்திற்கும் மன சிதைவுக்கும் ஆளாகுவோம். இதனால் பிரச்னைகளின் போது தனிமையில் இருப்பது மிகத் தவறான ஒன்று. குடும்பத்தினர், நண்பர்கள் என நம்மைச் சுற்றி அன்பானவர்கள் இருப்பது இந்த சமயத்தில் அவசியம். 

ஆனால் இதற்கு எதிர்மறையாக காதல் வயப்பட்டவர்களுக்கு இந்த தனிமையை வரம் என்றே சொல்ல முடியும். ஃபோனில் மணி கணக்காகப் பேசுவதோ, தூக்கம் தொலைத்த குறுஞ்செய்திகளோ நிச்சயம் காதலை வளர்க்காது. காரணம் அது ஓர் உணர்வு, அதனால் அதனை முழுமையாக அனுபவித்தால் மட்டும் காதலை உணர முடியும். குறிப்பாக இந்த சமயத்தில் தான் மூளையின் உட்பகுதியில் ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் இணை மீதான பிணைப்பை அதிகரிக்கும். இதனை உணர நிச்சயம் தனிமை தேவை.
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். டென்மார்க்கிலுள்ள கோபென்ஹஜென் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி, ஆன்னே வின்கார்டு கிறிஸ்டென்சன் ஓர் ஆய்வை மேற் கொண்டார்.  அதில் தனிமையில் இருக்கும் இதய நோயாளிகள் மற்றும் டிப்ரஷனில் இருப்பவர்களின் இறப்பு காலம் சராசரியை விட இரண்டு மடங்கு விரைவுப்படுவது தெரிய வந்துள்ளது. இதற்காக 13,463 பேரிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளார் ஆன்னே. 
இனி உங்களைச் சுற்றி இருப்பவர்களை தனிமையில் விடாமல், தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது அவர்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள்! யாருக்குத் தெரியும் நம்மால் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கப்படலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக