பெண்கள் சொத்து சேர்க்கும் சூத்திரங்கள்!
மல்லிகா டீச்சருக்கு 43 வயது. போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்டில் தன் குடும்பத்தினர் நான்கு பேர் பேரிலும் மாதம் தலா ரூ.1,000 கட்டி வருகிறார். அதாவது, மாதம் ரூ.4,000. அப்படி இப்படி என்று மூன்று வருடங்கள் கட்டியாயிற்று. இன்னும் இரண்டு வருடங்கள் தாண்டிவிட்டால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.74,453 வரும். சுளையாக 3 லட்சம் ரூபாய்! அம்மாடி! இத்தனை நாள் பொறுமை காத்ததற்குக் கைமேல் பலன். ரொம்ப நாளாக ஆசைப்பட்ட வைர நகை வாங்கலாம். அல்லது வீட்டுக் கடனில் கொஞ்சம் அடைக்கலாம். பலவாறாகக் கற்பனையில் பறந்தது மனது.
நாம் எல்லாருமே பல நேரங்களில் மல்லிகா டீச்சர் போலத்தான் இருக்கிறோம். பணம் இருந்தால் நகை வாங்கலாம், கார் வாங்கலாம், கடன் அடைக்கலாம் என்று திரும்பத் திரும்ப ஒரு வட்டத்துக்குள்ளேயேதான் சுற்றி வருகிறோம். ஆனால், இதையெல்லாம் தாண்டியும் சில அணுகுமுறைகளும் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் 'அசெட் கிரியேஷன்’. அதாவது, சொத்து உருவாக்கம்.
சொத்து என்றால் என்ன என்று உங்களுக்கே தெரியும். நீண்டகாலத்துக்குப் பயனளிக்கும்; மதிப்புக் கூடிக்கொண்டே வரும் பொருள்தான் சொத்து. நம்முடைய சேமிப்பு திட்டமிடல், பொருள் வாங்குவதற்கும், கடன் அடைப்பதையும் விடுத்து, சொத்து உருவாக்குவதை நோக்கி இருக்குமானால் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும்.
எப்படி என்கிறீர்களா? மேலே சொன்ன உதாரணத்தைப் பாருங்கள். 3 லட்சம் ரூபாயைக் கொண்டு, உடனடியாகக் கடனை அடைப்பதைவிடவும், சொந்த கிராமத்திலோ அல்லது விலை குறைந்த பகுதியிலோ ஒரு இடம் வாங்கிப்போட்டால் ஐந்தாறு வருடங்களில் அதன் மதிப்பு பல மடங்கு பெருகிவிடுமே? காலம் போகப்போக அதன் மதிப்பு கூடித்தான் போகுமேயழிய, குறையாது. கடனை அடைப்பதன் மூலம் சில லட்சங்களை மிச்சம் பிடிக்கலாம். ஆனால், சொத்து சேர்த்து வைத்தால் பல லட்சங்களாகக் குட்டி போடுமே! பிள்ளைகளின் கல்யாண சமயத்தில் அது பெரிய அளவில் கைகொடுக்குமே!
சொத்து வாங்குவது, விற்பது எல்லாமே வீட்டு ஆண்கள்தானே செய்வார்கள், பெண்கள் என்ன செய்ய முடியும் என்ற நினைப்புதான் நம் பெண்களுக்கு இருக்கிறது. இந்த நினைப்பை இன்றைக்கே விடுத்து, சொத்து சேர்க்கத் தயாராகுங்கள்!
21 வயது முதல் 30 வரை (கல்யாணத்துக்குமுன்):
புதிதாக வேலைக்குச் செல்பவரா நீங்கள்? சமத்துப்பெண்ணாகச் சம்பளத்தை வீட்டில் கொடுத்துவிட்டுப் பாக்கெட் மணி வாங்கிச் செல்கிறீர்களா? 'படிக்கிற காலம் முடிஞ்சாச்சு, வேலையும் கிடைச்சிடுச்சு, கையில் காசு வருது. இனி என்ன ஜாலிதான்'.
வீட்டில் கல்யாணம் முடிவு செய்கிற வரை ஃப்ரெண்ட்ஸுடன் ஷாப்பிங், லேட்டஸ்ட் ஃபேஷன் உடைகள், சினிமா, பார்ட்டி ஜாலிதான் என்று கணக்குப் போடுகிறீர்களா?
எல்லோரையும் போலச் சின்னதாக யோசிக்காமல், கொஞ்சம் பெரியதாகச் சிந்தியுங்கள். இதே சந்தோஷம் வாழ்நாளெல்லாம் நீடிக்க வேண்டுமல்லவா? அப்பா, அம்மாவிடம் கலந்துப்பேசி பாக்கெட் மணியை வெறும் ஆயிரத்தில் இருந்து 4,000-மாக ஏற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ளச் சொத்து உருவாக்கத் திட்டமிடுங்கள். சொத்து உருவாக்குவது அல்லது வாங்குவதற்கு அடிப்படையில் ஒருதொகை தேவை. உங்கள் கையில் இருக்கும் இந்தத் தொகைதான் விதை. இதை வைத்து எப்படி ஒரு 'அசெட்’ உருவாக்க முடியும் என்று யோசியுங்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது ரெக்கரிங் டெபாசிட்டில் போடுவதோடு நிற்காமல், ஸ்டாக் மார்க்கெட் பற்றித் தெரிந்து கொண்டு நல்ல கம்பெனி பங்குகளை வாங்கிப்போடுங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் போடுங்கள். இந்த எல்லா வழிகளுமே கையில் மாதாமாதம் கிடைக்கும் சிறு தொகையைச் சீக்கிரமே பெரிய தொகையாக மாற்றுவதற்குத்தான். எல்லா வழிகளும் பாதைகளுமே 'அசெட்’ என்கிற ஊர் போய்ச் சேரத்தான்.
பங்குச் சந்தை ஒன்றும் புரியாத புதிரில்லை. உங்களைப் போன்ற ஸ்மார்ட் இளம்பெண்கள் ஈஸியாகக் கற்றுக்கொள்ளலாம். ஏராளமான புத்தகங்கள், தகவல்கள் கிடைக்கின்றன. வங்கிகள், நிறுவனங்கள் உதவி செய்கின்றன. தவிர, இப்போது எல்லாமே ஆன்லைனிலேயே செய்யலாம். அதைக் கற்றுக்கொள்ள, தகவல் சேகரிக்க அங்கே இங்கே அலையவேண்டாம்.
மூன்று வருடங்களில் ரூ.2-3 லட்சம் தேத்திவிட்டீர்களானால்,வீ) கிராமத்தில் ஓர் இடம் வாங்கிப் போடலாம். முப்பது வருடங்களில் அதாவது, நீங்கள் ரிட்டையர் ஆகும்போது என்ன விலை போகும் என்று யோசித்துப் பாருங்கள். இப்போது கோடிகளில் விலை சொல்லும் இடங்கள்கூட 10-15 வருடங்களுக்கு முன்பு வெறும் லட்சங் களில், ஆயிரங்களில் கிடைத்தது. (லட்சமோ, ஆயிரமோ அந்தக் காலத்தில் அது பெரிய காசுதான் என்றாலும், இப்போதுபோல நினைத்து பார்க்கமுடியாத அளவுக்குப் பெரிய காசு இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சரியான ஆலோசனை சொல்ல ஆள் இல்லை).
வீவீ) அப்பா, அம்மா ஆலோசனை யுடன் இந்தப் பணத்தை டவுண் பேமென்டாகக் கொடுத்து ஹவுஸிங் லோன் போட்டு நீங்கள் வசிக்கும் ஊரிலேயே ஒரு ஃப்ளாட் வாங்குங்கள். சின்ன வயதிலேயே லோன் ஆரம்பித்தால், இ.எம்.ஐ கம்மி. திருமணத்தை 27-28 வயதுக்குப்பின் என்று தள்ளிப்போடும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு சொத்து மிகப் பெரிய துணையாகப் பெண்களுக்கு அமையும்.
கல்யாணமாகாத பெண்கள் ஃப்ளாட் வாங்குவது பெங்களூரூ, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், ஃபேஷன் டெக்னாலஜி, என்டர்டெயின்மென்ட் இண்டஸ்ட்ரி (விளம்பரம், சினிமா, டிவி, ரேடியோ), ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற தொழில்களில் கலக்குவதால் பெண்கள் ஃப்ளாட் வாங்குவது அதிகரித்திருக்கிறது.
நல்ல வேலை, கைநிறையச் சம்பளம், புரமோஷன் வாய்ப்புகள் வருவதால் பெண்கள் திருமணத்தைத் தள்ளிவைப்பது அதிகரித்திருக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத பெங்களூரு டெவலப்பர் ஒருவர் இப்படிச் சொன்னார். 'விவாகரத்துகள் அதிகரிப்பதாலும், தங்கள் நட்பு வட்டத்தில் மணமுறிவுக்குப்பின் பணப் பிரச்னைகளைப் பார்ப்பதாலும் தனியாகச் சொந்தமாக ஃப்ளாட் வாங்குவதன் மூலமும் 'அசெட்’ கிரியேஷன் பண்ணுவது அதிகரித் திருக்கிறது'.
நேஷனல் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் கவுன்சிலைச் சேர்ந்த நவீன் எம்.ரஹேஜா இப்படிச் சொன்னார். 'ஐந்து வருடங்களுக்குமுன் இப்படி ஒரு கஸ்டமர் கேட்டகிரியே இல்லை. இப்போது எங்கள் மொத்த சேல்ஸில் 3% கல்யாணமாகாத சிங்கிள் பெண்கள்தான்'. இப்போது மணமாகாத பெண்களுக்கு பேங்க் லோனும் கிடைக்கிறது.
30 - 40 வயது வரை (கல்யாணத்துக்குப்பின்):
பொதுவாக, குழந்தை பிறந்தபின் செலவுகள் கூடுமேயழிய குறையாது. கல்யாணத்துக்குமுன், கவலைகள் பொறுப்புகள் இல்லாத காலத்தில் சேமித்ததைப்போல வாழ்நாளில் பின் எப்போதுமே சேமிக்க முடியாது என்பதே உண்மை. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். இந்தக் காலத்தில் எப்படி 'அசெட்’ உருவாக்குவது?
கடையில் பார்ப்பதை எல்லாம் உங்கள் செல்லக்குட்டிக்கு வாங்கித்தர மனசு பரபரக்கும் காலமிது. நீண்டகாலத் திட்டமிடல் இல்லாவிட்டால், உறுதியான மனம் இல்லாவிட்டால், உடனடி அல்ப சந்தோஷங்களுக்கு இடம் கொடுப்பவராக இருந்தால் கையிலுள்ள பணம் 'தண்ணியா’ செலவழிந்துவிடும். வீட்டுக் கடன், கார் கடன் ஆகியவை பட்ஜெட்டில் 50 சதவிகிதத்தை விழுங்கிவிடும். எனவே, சேமிப்பு உங்கள் முதல் செலவாக இருக்கட்டும்.
குழந்தைக்கு விளையாட்டு சாமான், சாக்லேட், ஐஸ்க்ரீம் என்று அநாவசிய செலவுகளைக் குறையுங்கள். 'இந்த டிரெஸ் வெறும் ரூ.200தான்’ என்று நினைத்தே ஒன்றுக்கு பத்து உடுப்புகளை வாங்குவதைத் தவிருங்கள். அத்தனை உடுப்புகளையும் போடுவதற்குள் குழந்தை வளர்ந்து உடை சின்னதாகிவிடும். அதிகம் போடாத புது டிரெஸ் பீரோவின் இடத்தைத்தான் அடைக்கும். அதில் போட்ட பணமும் வீண்தான்.
பொதுவாக, இந்தக் காலத்தில் பெண்கள் ஏலச் சீட்டில் சேருவார்கள். இதை 'அசெட்’ என்று கொள்ளமுடியாது. இந்தத் தொகை அவசரத் தேவைக்கு உதவும், பொருள் வாங்க அல்லது கடன் அடைக்க உதவும், அவ்வளவுதான். அதிலும் முதலிலேயே தொகையை எடுத்துவிட்டால், அதன்பின் வெறும் கடன் போலத்தான் இதுவும். வட்டிக் கணக்குப்போட்டுப் பார்த்தால் எங்கேயோ எகிறிவிடும்.
தங்கம் வாங்கலாம். பல முன்னணி நகைக் கடைகள் கிராம் கிராமாகச் சேர்ப்பதற்குத் திட்டங்கள் வைத்திருக்கின்றன. தங்கம் விலை ஏறிக்கொண்டுதான் போகிறது. நிலம் வாங்கினால் வரும் லாபத்தைவிடக் கம்மிதான் என்றாலும், இதுவும் ஒரு வகையில் 'அசெட்’தான்.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டில் போடலாம். புளூசிப் கம்பெனி பங்குகள் வாங்கினால், இரண்டு வருடங்களில் ஏறும் சாத்தியம் உண்டு. ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டில் போடலாம்.
40 வயதுக்கு மேல்:
பிள்ளைகளின் கல்விச் செலவுகள், டியூஷன்கள், கம்ப்யூட்டர் வாங்குவது என்று செலவு அதிகரிக்கும். 40 வயதுக்குமேல் மருத்துவச் செலவுகள்வேறு கூடிக்கொண்டே போகும்.
உங்கள் பெற்றோர் வழிச் சொத்துகள் இந்தக் காலத்தில் உங்களுக்கு வந்து சேரலாம். உங்கள் சகோதர, சகோதரி களுடன் உடன்பட்டு பணமாகவோ, நகையாகவோ, வீடு அல்லது மனையாகவோ உங்களுக்கு வரலாம். உங்கள் மூதாதையர் சொத்து விற்கப்பட்டு ரூ.4-6 லட்சங்கள் உங்கள் பங்காக வருகிறதென்றால் என்ன செய்யலாம்?
மொத்தப் பணத்தையும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டால் வட்டி வரும் என்று எண்ணாதீர்கள். கிடைக்கும் வட்டி இன்றைய பணவீக்கத்தில் நினைத்துப் பார்த்தால், முதலுக்கே மோசமாகத்தான் இருக்கும். ஃபிக்ஸட் டெபாசிட் டேர்ம் முடிந்து கிடைக்கும் தொகையில் இன்றைக்கு வாங்கும் அளவுக்குகூட நாளைக்கு வாங்க முடியாது. பணவீக்கம் அந்த அளவு மோசமாகிக்கொண்டு வருகிறது.
அதனால், பணத்தைப் பணமாகவே வைத்திருக்காமல் பூமியில் போடுங்கள். ஏற்கெனவே வீட்டு லோன், கார் லோன், வட்டியில்லாத கடன்கள் வேறு இருக்கிறது அல்லவா? வீடு, மனை என்று வாங்க முடியவில்லை என்றால் எட்டுக்கு எட்டு அடியில் கடை வாங்க முடியுமா என்று பாருங்கள். தனி வீடாக இருந்தால், மேலே வீடு கட்டி அல்லது விரிவுபடுத்தி வாடகைக்கு விடுங்கள்! வீட்டின் மதிப்பும் கூடும், வாடகையும் வரும்.
இப்படி கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் எல்லாமே ஈஸிதான். செல்போன் இருக்கவே இருக்கிறது. தேவை கொஞ்சமே கொஞ்சம் நெட்வொர்க்கிங்! அது பெண்களுக்குத் தாராளமாகவே வரும். வெறும் வீடு, ஆபீஸ், குழந்தைகள் படிப்பு, கணவர், கடன்களை அடைப்பது என்று யோசிப்பதிலிருந்து சற்று முன்னோக்கி நகருங்கள்.
பண விஷயத்தில் நீங்கள் கில்லியாக இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருப்பீர்கள். பெண் முன்னேறினால் வீடு மட்டுமல்ல, நாடே முன்னேறும்.
பெண் என்றால் அன்பு, அளவு கடந்த பாசம், கடின உழைப்பு, தியாகம் என்பது மட்டுமில்லாமல் மதிநுட்பம், நீண்டக்காலத் திட்டமிடல், பணநிர்வாகத்தில் கெட்டி என்று பெயரெடுங்கள் மங்கையரே! நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக