புதன், 13 ஜூன், 2018

குழந்தைகளின் வளமான வருங்காலத்துக்கு செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டங்கள்!


குழந்தைகளின் வளமான வருங்காலத்துக்கு செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டங்கள்!

வங்கிகள் விதிக்கும் விதிமுறைகளைப் பார்க்கும்போது அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு துவங்கிப் பராமரிக்கலாம்; நல்ல திட்டங்களில் சேர்த்து முதலீடு மேற்கொள்ளலாம் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படுகிறது. முதலீட்டைப் பொறுத்தவரை அஞ்சல் அலுவலகத்தில், `செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பாக குழந்தைகளின் மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்ட, அதிக வட்டி மற்றும் அதிக வருமானம் தரும் செல்வ மகள் மற்றும் பொன் மகன் சேமிப்பு திட்டங்கள் பெற்றோர்கள் மத்தியில் மிகப் பிரபலம். எனினும் ஒரு சிலருக்கு இந்தத் திட்டங்கள் பற்றித் தெரிவதில்லை. இது குறித்து இதுவரை தெரியாதவர்கள் இனிமேலாவது உங்கள் செல்ல மகளுக்குச் சீரான வருங்காலம் அமைய அல்லது உங்கள் அன்பு மகனுக்கு ஆனந்தமான வருங்காலம் அமையத் திட்டமிடலாமே.
செல்வமகள் சேமிப்பு கணக்கு!
பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் செல்வ மகள். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் மூலம் கணக்கு துவங்கலாம். செலுத்தும் தொகை, வட்டி, முதிர்வுத் தொகை என அனைத்துக்கும் வரி விலக்கு உண்டு. குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தை இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் தொடங்கலாம். பெண் குழந்தையின் மேற்படிப்புக்காக 50% தொகையை அவருடைய 10-ம் வகுப்பு முடித்த பின் அல்லது 18 வயது பூர்த்தியான பின் பெற்றுக் கொள்ளலாம். கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். திருமணத்துக்கு ஒரு மாதம் முன்னரே கணக்கை முடித்துக் கொள்ளலாம். திருமணம் முடிந்த பின்பும் கணக்கை எவ்வித வட்டி இழப்பும் இன்றி முடித்துக் கொள்ளலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இந்தக் கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் முடிந்தபின் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
பொன் மகன் பொது வைப்பு நிதி!
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் பொதுவைப்பு நிதி’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ்க் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்தபட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கைத் துவங்கலாம். கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச முதலீடாக ரூ.500 மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்கலாம். செலுத்தும் தொகை, வட்டி, முதிர்வுத் தொகை என அனைத்துக்கும் வரிவிலக்கு உண்டு. கணக்கு துவங்கியவுடன், மூன்றாவது நிதியாண்டில் இருந்து கடன் வசதி உண்டு. கணக்கு துவங்கியதும் ஏழாவது நிதியாண்டிலிருந்து 50 சதவிகித தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக் கொள்ளலாம். முதிர்வு காலத்துக்குப் பின்பும் கணக்கு முடிக்கும் வரை பிபிஎஃப் வட்டியே வழங்கப்படும். கணக்குத் துவங்கி 5 வருடங்கள் முடிந்த நிலையில் மேற்படிப்புக்காகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்காகவோ, கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.
ஆஹா... ஒஹோ அருமையான திட்டமாக இருக்கிறதே என்று அவசரப்படாதீர்கள். அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு அணுகும் முன்... கணவன், மனைவி இருவரும், மாதந்தோறும் எவ்வளவு பணம் முதலீடு செய்யலாம், குழந்தையின் பிறந்த நாள், உங்களின் திருமண நாள் என எப்பொழுது எல்லாம் முதலீடு செய்யலாம் என நன்கு ஆலோசித்து, அதன் பின் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் செல்ல மகள் `செல்வ மகளாக' மாறவும், உங்கள் அன்பு மகனின் வருங்காலம் ஆனந்தமாக அமைய ஆசிர்வதியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக