புதன், 8 ஏப்ரல், 2020

வீ மிஸ் யூ சுஜாதா....

வீ மிஸ் யூ சுஜாதா....

*எழுத்தாளர் திரு.சுஜாதாவை பற்றி சுவாரசியமான விசயங்கள்...*

ஒரு பெயர், அதற்குப் பின்னால் நிரந்தரமாக ஓர் ஆச்சர்யக்குறி - சுஜாதா. இவர், தனது சுவாரஸ்யமான
எழுத்துகள் வழியே இந்தத் தலைமுறை வாசகர்கள் பலரையும் தன்வசப்படுத்தியவர். சுவாரஸ்யமான நடை, ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இவைதாம் சுஜாதாவின் சாராம்சம். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட
சிறுகதைகள், 100 நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், மேடை நாடகங்கள் எனப் பல்வேறு
படைப்புகளைக் கொடுத்தவர். இலக்கியம் மட்டுமன்றி, தமிழ் சினிமாவின் பல்வேறு வெற்றிப்
படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு உண்டு.

சாதாரணமான ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு அதை தனது `அட' போடவைக்கும் எழுத்துநடையால்
அற்புதமான ஓர் அனுபவத்தை வாசகனுக்குக் கடத்துபவர். சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் மிகப் பிரபலம். வாசகர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் நிலையில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன.

அந்த அளவுக்கு அவரது எழுத்தின் மீது வாசகர்களுக்குத் தீராக்காதல் இருந்தது... இருக்கிறது. அவரது
கதைகளைப்போலவே சுஜாதாவும் சுவாரஸ்யமான மனிதர்தான். தனது எழுத்துகளை, குறிப்பிட்ட ஒரு வகைமைக்குள் வைத்துக்கொண்டதில்லை அவர். அறிவியல் புனைவு கதைகள், த்ரில்லர் கதைகள் என எல்லா ஜானர்களிலும் தனது டிரேட்மார்க்கைப் பதித்தவர்.

அவர் தனது கதைகளில்கூட தனது குறும்பான நடையைச் செய்திருக்கிறார். `நைலான் கயிறு' என்ற அவரது முதல் நாவலில் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார்.

மெதுவாக ஐந்தாவது மாடிக்கு

    ற
        ங்
            கி
               னா
                      ன்.

இதுபோன்ற சுவாரஸ்யம்தான் அவரது பிரதானம். அவரது மற்றொரு சிறுகதையில் ஒரு கதாபாத்திரத்தை இப்படி அறிமுகப்படுத்துவார். `அவர் மிகவும் அப்புராணி. எந்த அளவுக்கு என்றால்,
பத்திரிகையில் வரும் செய்திகளையெல்லாம் உண்மை என நம்பக்கூடிய அளவுக்கு' என்று எழுதியிருப்பார்.

சுஜாதா, அறிவியல் மீது  தீராக்காதல் கொண்டவர். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், இயற்பியல்
பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் பி.இ. (மின்னணுவியல்) பயின்றார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார் ஆய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அங்கு பொது மேலாளராக உயர்ந்தார். இவரும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் வகுப்புத் தோழர்கள்.

சுஜாதாவின் திரைப்படப் பங்களிப்பு, பல படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. `முதல்வன்'
படத்தில் பத்திரிகையாளரான அர்ஜுன், முதலமைச்சராக இருக்கும் ரகுவரனை நேர்காணல் செய்யும் அந்தக் காட்சி, சுஜாதாவின் மேதமைக்கு ஒரு சான்று. `ப்ரியா', `விக்ரம்', `ரோஜா', `இந்தியன்', `அந்நியன்', `கன்னத்தில் முத்தமிட்டால்', `எந்திரன்' எனப் பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம்
எழுதியுள்ளார்.

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `பாரதி' திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் சுஜாதாதான். `இந்தியன்' படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் மிகப் பிரபலம். ``மத்த நாட்டுலயெல்லாம் கடமைய மீறுறதுக்குத்தான் லஞ்சம் வாங்குறாங்க. நம்ம நாட்டுலதான் கடமைய செய்றதுக்கே லஞ்சம் வாங்குறீங்க!"

``ஒன்றின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது. நம்பிக்கை என்பது நங்கூரம்போல. நவீன விஞ்ஞானம், அதிகப்படியான கேள்விகள் கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது" சுஜாதா கூறிய வார்த்தைகள் இவை.

வெறுமனமே சுவாரஸ்யமான எழுத்துகளைத் தாண்டி, சுஜாதா எழுதிய மிக முக்கியமான சிறுகதை
`நகரம்'. மதுரைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து தன் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க
மதுரை அரசு மருத்துமனைக்கு வரும் ஏழைத்தாயின் கதை அது. அந்தக் கதையில் நுணுக்கமான பல
விஷயங்களைப் பதிவுசெய்திருப்பார் சுஜாதா. மருத்துவமனைக்கு எளியவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் வருகிறார்கள், நோய்மை குறித்து எந்த மாதிரியான பார்வை அவர்களுக்கு இருக்கிறது, உதவி செய்ய ஆள்கள் இருந்தும் அரசு மருத்துவமனையில் ஏற்படும் சிக்கல் என்ன... இப்படி அந்தக் கதையில் பல பரிமாணங்கள் விரியும்.

தனது 73-வது வயதில் 2008-ம் ஆண்டு சுஜாதா மறைந்தார். அப்போது நா.முத்துக்குமார் ஒரு கவிதை எழுதினார். `மரணம் என்ற கறுப்பு ஆடு, பல சமயங்களில் நமக்குப் பிடித்தமான ரோஜாக்களைத் தின்று விடுகிறது' என்று.

*வீ மிஸ் யூ சுஜாதா...!!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக