புதன், 28 செப்டம்பர், 2016

அறம் செய்ய விரும்பு

""அறம் செய்ய விரும்பு'', ""ஆறுவது சினம்'' என்பது ஒளவையின் வாக்கு. குழந்தைகள் சிறு வயதிலிருந்தே மேற்கண்ட இரண்டு குணங்களுக்கும் உட்பட்டவர்களாக வளர்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு எதிர்காலத்தில் நோய், வறுமை வராது என்பது தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறிவாக உள்ளது. எப்படி? மனிதர்களின் உடலில் உள்ள சுரப்பிகள் அவர்களது மனநிலைக்குத்தக்கவாறே (சுகமோ-துக்கமோ) சுரக்கின்றன. ஒருவர், இல்லாதவர்களை நினைத்து அவருக்காக மனம் வருந்தும்போது, அவரது உடலில் உள்ள நாளங்களின் வழியாக சுரப்பிகள் நீரை வெளிப்படுத்துகிறது. அந்த நாளநீர் வெளியில் வந்து அவரது உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கிறது.

"ஆறுவது சினம்' - அதிகமாகக் கோபப்படுபவர்களுக்கு இரக்ககுணம் இருக்காது. மனிதர்களின் மனம் இரக்கப்படாமல் கோபமாக மாறும்போது சுரப்பிகள் அடைக்கப்பட்டு நோய்க் கிருமிகளை அழிப்பதற்கான நீர் சுரக்காமல் நின்றுவிடுகிறது. அப்பொழுது மனிதர்களின் உடலில் உள்ள நோய்க்கான கிருமிகள் வளர்ந்து, அது சர்க்கரை நோய், புற்று நோய், கல்லடைப்பு, மன அழுத்தம் முதலிய பல்வேறு நோய்கள் அவரவர் எண்ணத்தின் அளவுக்குத் தக்கவாறு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.

""இரப்பவர்க்கு ஈய வைத்தார்

ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாம் கடும்

நரகங்கள் வைத்தார்''

என்பது திருநாவுக்கரசர் தேவாரம். யாரொருவர் தமக்குக் கிடைத்த கல்வியையும் செல்வத்தையும்

இல்லாதவர்களுக்கு இரக்கப்பட்டுக் கொடுத்து உதவவில்லையோ அவர்களுக்கே நோய், வறுமை போன்ற துன்பங்கள் வருகின்றன. இதைத்தான் திருமூலர்,

""உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினைகெட

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

கள்ள மனமுடையக் கல்வி இலாரே''

என்றார். எனவே, கோயிலில் கொடுக்கும் புனித நீரான தீர்த்தமும், குளங்களில், ஆறுகளில், கடலில் நீராடுவதும், தீர்த்தம் என்றாலும், மனிதனின் உடலில் உற்பத்தியாகும் "நாளநீரே' உண்மையான தீர்த்தமாகத் திகழ்கிறது.

- குச்சனூர்கிழார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக