திங்கள் கிழமையை எதிர்கொள்ள 10 வழிகள்... மண்டே மார்னிங் ப்ளூவை வெல்வோம்!
'ஞாயிற்றுக்கிழமை தொடங்குவது சனி மாலையில்...' என்றோர் கவிதை வரி உண்டு. விடுமுறை நாள் என்றால் அதன் உற்சாகம் முதல் நாள் மாலையே மனதில் தொற்றிவிடுகிறது. ஞாயிற்றுக் கிழமைகள் நமக்கானவை. சினிமாவுக்கும், பூங்காவுக்கும், பீச்சுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் செல்லும் பாதைகள் திறந்து கொள்கின்றன. குழந்தைகளைப் போல் குதுகலிக்கிறது மனம். மறுநாள், திங்கட் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. தாமதமாகத் தூங்கி, திங்கள் காலையில் சோம்பலாய் எழுந்து, கிளம்ப மனம் இன்றிக் கிளம்பி, தாமதமாக அலுவலகம் வந்து, அரைகுறையாய் வேலைகளைச் சொதப்பி, அவர்களும் டென்ஷன் ஆகி உடன் பணி புரிபவர்களையும் டென்ஷன் ஆக்கி விடுகிறார்கள். வேறு சிலரோ, திங்கட் கிழமையை எதிர்கொள்ளத் தயங்கி, ஏதாவது ஒரு காரணம் சொல்லி (பாட்டி செத்துட்டாங்க, உடம்பு சரியில்லை என்பதைப் போன்ற கிளிஷேவான காரணங்கள்) அன்று வேலைக்கே செல்ல மாட்டார்கள். இந்தப் பிரச்னையை 'மண்டே மார்னிங் ப்ளூ' என்கிறார்கள். இது ஒரு உளவியல் பிரச்னை. மனஅழுத்தம், சோர்வு, நம்பிக்கையின்மை, வேலை, பணியிடச் சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், வேலைக்குச் செல்வதில் ஆர்வமின்மை போன்றவை 'மண்டே மார்னிங் ப்ளூ' பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள். முறையாகத் திட்டமிட்டு சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மண்டே மார்னிங் ப்ளூவை ஈஸியாய் வெல்லலாம்.
1. பிரச்னையைக் கண்டறியுங்கள்:
உங்கள் பணியில் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் கண்டறியுங்கள். தொடர்ந்து திங்கட்கிழமைகளில் பணிக்குச் செல்வதற்கு உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால், நிச்சயம் அது இயல்பான விஷயம் இல்லை. நீங்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதன் அறிகுறி இது. வேலையில் உங்களை ஆர்வம் இழக்கச் செய்யும் விஷயங்கள் என்னென்ன என்று ஒரு பட்டியல் இடுங்கள். அதற்கான குறுகிய கால, நீண்ட காலத் தீர்வுகள் என்னென்ன என்று கண்டறியுங்கள். நடைமுறை சாத்தியப்படி அதற்கான தீர்வுகளைச் செயல்படுத்துங்கள்.
2.திங்கட் கிழமையை முதல் நாளே எதிர்கொள்ளுங்கள்:
பொதுவாக, திங்கள் கிழமை பணியின் முதல் நாள் என்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கக்கூடும். திங்கள் காலையில் அவசர அவசரமாக வந்து, 'என்ன செய்வது?' எனக் கையைப் பிசைந்துகொண்டு இருக்காமல், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு செல்லும்போதே, திங்கட் கிழமைப் பணிகளுக்கான முன் தயாரிப்பைச் செய்துவிடுங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமர்ந்து, மறு நாளையும் அந்த வாரத்தையும் எப்படிச் சமாளிப்பது எனப் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொள்ளுங்கள்.
3.உற்சாகமாகப் பணிகளைத் தொடங்குங்கள்:
திங்கட் கிழமை தாமதமாக எழுந்து அரக்கப்பறக்க அலுவலகம் வராமல், நேரமே எழுந்து உடற்பயிற்சி, தியானப் பயிற்சி செய்து, குறித்த நேரத்தில் பணியிடத்துக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வேலையைத் தொடங்குவதே அதைப் பாதி வெற்றியாக முடித்தது போலத்தான். எனவே, திட்டமிட்டு பணிகளைத் தொடங்குங்கள். கடினமானப் பணிகளைக் காலையில் வந்ததும் செய்துவிடுங்கள். குறிப்பாக, உங்களுக்கு, நீங்கள் பணிசெய்யும் நிறுவனத்துக்கு உடனடியாகப் பணத்தை, நற்பெயரை ஈட்டித்தரும் வேலைகளைத் தாமதிக்காமல் செய்துவிடுங்கள். காலை நேரத்தில் மனம் மிகவும் சுறுசுறுப்பாக, விழிப்பாக இருக்கும் என்பதால், சிக்கலான வேலைகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. அந்த வாரம் முழுதும் செய்ய வேண்டிய பணிகளைத் தொகுத்துக் கொண்டு, அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று முதன்மைப்படுத்தித் திட்டமிடுங்கள்.
4.மகிழ்ச்சியூட்டும் பணிகளைத் திட்டமிடுங்கள்:
பொதுவாக, நமது வேலையை எண்ணும்போது அதில் உள்ள கடினமான விஷயங்களை மட்டுமே பெரும் பாலானவர்கள் கருதுவார்கள். ஞாயிறு மாலை அமர்ந்து, இந்த வாரம் செய்ய வேண்டிய பணிகளில் சுவாரஸ்யம் சேர்க்கும்படியாக என்ன செய்யலாம் என யோசியுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயம் ஒன்றை அந்த வாரத்துக்கான வேலைத் திட்டத்தில் சேருங்கள். அது, உடன் பணிபுரிபவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு கெட்டூகெதராக இருக்கலாம். ஒரு எளிய கொண்டாட்டமாக இருக்கலாம். புதிய அசைன்மென்ட்டாக இருக்கலாம். சுவரஸ்யமான, உற்சாகம் தரும் விஷயம் ஒன்றை வாரம் ஒருமுறை செய்தாலே போதும். வேலை மீதான ஆர்வம் பெருகும்.
5.வார இறுதியைக் குடும்பத்துக்குக் கொடுங்கள்:
வேலைக்கும் குடும்பத்துக்குமான எல்லைகளைக் கறாராகப் பின்பற்றுங்கள். வார இறுதி விடுமுறை என்றால் அது உங்களுக்கானது; உங்கள் குடும்பத்துக்கானது. எனவே, வேலை நேரத்தை வேலைக்குக் கொடுங்கள். ஓய்வு நாளைக் குடும்பத்துக்குக் கொடுங்கள். வீட்டில் அமர்ந்துகொண்டு அலுவலக மெயிலைச் செக்செய்வது, அலுவலகப் பணிகள் செய்வது போன்றவற்றை அவசரம் அல்லது அவசியம் என்றால் அன்றி செய்யாதீர்கள். அது உங்கள் விடுமுறையைப் பாதித்து உங்கள் மனதைச் சோர்வடையச் செய்யும். ஞாயிறு மாலை சிறிது நேரம் அமர்ந்து மறுநாள் பற்றி கொஞ்ச நேரம் சிந்தித்து, வரும் வாரப் பணிகளைத் திட்டமிடலாம் தவறு இல்லை. ஆனால், விடுமுறை என்பதே இல்லை என்று நினைக்கத்தோன்றும் அளவுக்குப் பணியில் மூழ்கிவிடாதீர்கள். அது உங்களுக்கும் நல்லது அல்ல; குடும்பத்துக்கும் நல்லது அல்ல.
6.உடைகள் தரும் உற்சாகம்:
திங்கட் கிழமைகளில் உங்களுக்குப் பிடித்த, உற்சாகம்கொள்ள வைக்கும் உடைகளை அணியலாம். இது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்மைப் பற்றிய பெருமிதமான உணர்வை உண்டாக்கும். நம்மை மற்றவர்கள் மதித்திடச் செய்யும். 'இது போன்ற எளிய விஷயங்கள் நிஜமாகவே நன்றாக வொர்க்அவுட் ஆகும்' என ஆய்வுகள் சொல்கின்றன.
7.நேர்மறை எண்ணங்கள் தேவை:
உங்கள் வேலையைப் பற்றி, உங்களைப் பற்றி, உங்கள் நிறுவனைத்தைப் பற்றி, உடன் பணிபுரிபவர்கள் பற்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வேலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அது நமக்கு மட்டும் அல்ல நாம் பணி செய்யும் சூழலுக்கே மிகச் சிறந்த உற்சாகத்தை வழங்கும்.
8.உறவுகளைப் பேணுங்கள்:
பணிபுரியும் சூழலில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். சிலரை நமக்குப் பிடிக்கும். சிலருக்கு நம்மைப் பிடிக்கும். இதை எல்லாம் கடந்து மனித உறவுகள் மிகவும் முக்கியம். எனவே, அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அனைவரிடமும் உற்சாகமாய் பழகுங்கள். விட்டுக்கொடுத்து டீம் ஸ்ப்ரிட் உடன் பணியாற்றுங்கள். தவறுகளுக்கு, தோல்விகளுக்கு நேர்மையாகப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். இதனால், உறவுகள் மேம்படும். நம் பணிச்சூழல் மீதான உணர்வுப்பூர்வமான பிடிப்பு உருவாகும்.
9.சிறிய, பெரிய இலக்குகளை உருவாக்குங்கள்:
உங்கள் பணியில் சிறிய, பெரிய இலக்குகளை உருவாக்குங்கள். இந்த வாரத்துக்குள் இந்த வேலையைச் செய்ய வேண்டும். இந்த மாதத்துக்குள் இவ்வளவு விஷயங்கள் செய்திருக்க வேண்டும். இந்த வருடத்துக்குள் இப்படியான நிலைக்குச் சென்றிருக்க வேண்டும் என்று இலக்குகளை நிர்மாணித்துக்கொள்ளுங்கள். இது, எந்தச் சூழலிலும் நம்மை உற்சாகம் குன்றாமல் வைத்திருக்கும். சிறு சிறு வெற்றிகளைச் சுவைப்பது ஒரு உற்சாக டானிக்.
10.இலக்கை நோக்கி முன்னேறுங்கள்:
ஒவ்வொரு நாளும் வாரமும் திட்டமிட்ட வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்கப் பழகுங்கள். சில வேலைகளுக்கு அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கும். மனம் தளராமல், உற்சாகம் குன்றாமல் உழைப்பைச் செலுத்துங்கள். உங்கள் இலக்கை நோக்கி நேர்மையான வழியில் நாள்தோறும் முன்னேறுங்கள்.
இப்படி, திட்டமிட்டு சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மண்டே மார்னிங் ப்ளூ என்ற பிரச்னையை ஈஸியாக வெல்வதோடு, நமது கரியரையும் சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும். என்ன ரெடியா? வாங்க ஒரு கை பார்க்கலாம். ஆல் த பெஸ்ட்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக