தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகளின் தொகுப்பையும், விபரங்களையும் விரிவாக பார்க்கலாம்.
1. ஒகேனக்கல் அருவி:
இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. தர்மபுரி இருந்து 47 கி.மீ., ஓசூரில் இருந்து 88 கி.மீ., சேலத்தில் இருந்து 85 கி.மீ., பெங்களூரில் இருந்து 146 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ., மைசூரில் இருந்து 180 கி.மீ., கோயம்புத்தூரிலிருந்து 217 கி.மீ, தூரத்தில் ஒகேனக்கல் அருவி அமைந்துள்ளது. இந்த ஒக்கேனக்கல் அருவிதான் 'இந்தியாவின் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அருவிகள் கொட்டுவதை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக விளங்குகிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பதால் மிகுந்த கவனம் தேவை. தமிழ்சினிமாவின் சில படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க புரியாகவும் இந்த ஒக்கேனக்கல் அருவி அமைந்துள்ளது. இப்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதியுண்டு.
2. கொடிவேரி அணைக்கட்டு:
பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைதான் கொடிவேரி அணைக்கட்டு. அணைக்கட்டு தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 75 கி.மீ, ஈரோட்டில் இருந்து 70 கி.மீ தொலைவில் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் (பண்ணாரி மாரியம்மன் கோவில் இருந்து 20 கி.மீ.) உள்ள அற்புதமான சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று. இந்த அணையானது 25,000 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தண்ணீரை பாசனத்திற்காக வழங்குகிறது. கொடிவேரி அணைக்கட்டில் குளித்துவிட்டு சாப்பிட அங்கு பிடித்த மீனை உணவு சமைத்துத் தருகிறார்கள், அந்தமீனுக்கென தனி கூட்டமே உண்டு. பல தமிழ் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. வெள்ளிவிழா திரைப்படமான சின்னத் தம்பியின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை சுற்றிலும் எமரால்டு விருந்தினர் விடுதி, பவள மலை கோவில் என சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி உண்டு. இப்போது தண்ணீர் வரத்து நன்றாக இருக்கிறது.
3. குரங்கு நீர்வீழ்ச்சி:
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மலைப்பகுதியில் பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் இடையில் ஆழியார் அணைக்கு அருகில் குரங்கு நீர்வீழ்ச்சி (monkey falls) அமைந்துள்ளது. குரங்கு அருவி பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதே அதிக சுகமாக இருக்கும். அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை, டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம். பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் 'சிறிய குரங்கு நீர்வீழ்ச்சி' இருக்கிறது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று விடுகின்றனர். ஆனால் மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு 'பெரிய குரங்கு நீர்வீழ்ச்சி' உள்ளது. அருவிக்கு செல்ல ஒரு நபருக்கு 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது. அனுமதிக்கப்படும் நேரம் காலை 9:௦௦ மணி முதல் மாலை 6:௦௦ மணி வரை. குரங்குகள் அதிகம் இருக்கும், கவனமாக இருக்கவும். மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் காலங்களில் குளிக்க தடை விதிக்கப்படும். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஏற்ற மாதங்கள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்கள் ஆகும்.
4. சிறுவாணி அருவி மற்றும் அணை:
உலகின் இரண்டாவது மிக சுவையான நீர், சிறுவாணி நீர். காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதான் சிறுவாணி ஆறு. இது பாலக்காடு வழியாக தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் 'சிறுவாணி அணை' கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மை காரணமாகவே சிறுவாணி நீர் சுவையாக இருப்பதாக சொல்கிறார்கள். சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அருவியும் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூரின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகவும், கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளை விருந்தளிப்பதாகவும் இருக்கிறது. இந்த சிறுவாணி அணை 'கோவை குற்றாலம்' எனவும் அழைக்கப்படுகிறது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஒரு அருவி மட்டுமே உள்ளதால் இங்கு எப்பொதும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். கோயம்புத்தூர் நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் சிறுவாணி அருவி அமைந்துள்ளது. சிறுவாணி அருவிக்கு காலை முதல் மாலை வரை போக்குவரத்து வசதி உள்ளது. அருவியை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சிறிது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும். அருவிக்கு தாண்டி மலையின் மீது அமைந்திருக்கும் சிறுவாணி அணையை பார்வையிட வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். சிறிது தூரத்தில் வெள்ளியங்கிரி மலையும், வன பத்ரகாளியம்மன் கோவிலும், தென் திருப்பதி கோவிலும் அமைந்துள்ளது.
5. பைக்காரா நீர்வீழ்ச்சி:
ஊட்டியிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் பைக்காரா அணையின் அருகில் பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் முக்கியமானதாக பைக்காரா நீர்வீழ்ச்சி விளங்குகிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் காட்சி மனதை மயக்குவதாகவும், கம்பீர தோரணையுடனும் இருக்கும். நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதி மோசமாக இருப்பதால் பெரும்பாலும் விபத்துகளை தவிர்க்க பருவ காலத்தில் மூடப்பட்டு இருக்கும். நீச்சல் அடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் கீழே பாறைகள் கூராகவும், ஆழம் குறைவாகவும் இருக்கும். எனவே நீந்துவோர் ஜாக்கிரதையாக குளிப்பது நல்லது. இந்த சுற்றுலாத்தலமும் மிக பிரபலமானது. பைக்காரா நீர்வீழ்ச்சியின் நுழைவுபகுதியில் வாகனங்களை நிறுத்தும் இடம் இருக்கும். காலை 8 மணிமுதல் மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். தற்போது தண்ணீர் வரத்து காணப்படுகிறது.
6. கும்பக்கரை அருவி:
தேனி மாவட்டத்தின் 'சின்னக்குற்றாலம்' என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குமலைத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவி. மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது. மருதமரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கை. இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த அருவியில் இரவு நேரங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க காலை 9.00 மணிக்குமேல் மாலை 5.00 மணிவரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெரியகுளத்தில் இருந்து வாங்கிச் செல்வது நல்லது. பேருந்து வசதி, ஆட்டோ வசதியும் உள்ளது.
7. சுருளி அருவி:
தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி நீர்வீழ்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தேனிக்கு வருபவர்கள் காண வேண்டிய முதன்மையான சுற்றுலாத்தலம் இந்த நீர்வீழ்ச்சிதான். மழைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகிறார்கள். தேனி மாவட்டத்தின் வனத்துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பாதுகாப்பாய் குளிப்பதற்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் குளித்து முடித்த பிறகு உடை மாற்றிக் கொள்வதற்கு நீர்வீழ்ச்சிக்கருகிலேயே தனித்தனி அறைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி தண்ணீர் வரத்து மிதமாகவே வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக