திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..!
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வைணவ பக்தர்களுக்கு, குறிப்பாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு பாத யாத்திரை செல்வது, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து திருமலைக்கு மலையேறிச் சென்று மலையப்ப சுவாமியை தரிசிப்பதென உற்சாகப் பெருவெள்ளம்தான். திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்ல இரண்டுவிதமான பாதைகள் இருக்கின்றன. திருப்பதி பஸ்-ஸ்டாண்டில் இருந்து 5.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபிரி வழியாகச் செல்வது ஒரு வழி. மற்றொன்று சீனிவாச மங்காபுரத்துக்கு அருகில் உள்ள ஶ்ரீவாரிமெட்டு வழி. பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் அலிபிரி வழியைத்தான் தேர்வு செய்கிறார்கள்.
இந்தப் பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஶ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன்முதலில் அமைத்தவர். அலிபிரியிலிருந்து பெருமாள் குடிகொண்டிருக்கும் கோயில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 3,800 படிக்கட்டுகள் உள்ள இந்த வழியாக முதல் மலையில் இருந்து ஏழு மலைகளைக் கடந்து வர குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் ஆகும். இப்படியாக நடைபாதை வழியாக நடந்து வருபவர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகத்தால் அளிக்கப்படும் தரிசனம்தான் திவ்ய தரிசனம். நடைபாதையில் பாதி தூரத்தில் கோயில் ஊழியர்களால் வழிபாட்டுக்குச் செல்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இதை எடுத்துச்சென்று பக்தர்கள் சிறப்பு வழியில் சென்று வழிபடலாம்.
* மலையேறிச் சென்று மலையப்பசுவாமியை தரிசனம் செய்வதென முடிவு செய்துவிட்டால், முதல் நாளே கீழ்திருப்பதி வந்து, தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ‘சீனிவாசன் காம்ப்ளக்ஸிலோ’, ‘விஷ்ணு நிவாஸிலோ’ அறையெடுத்துத் தங்கி அலமேலுமங்காபுரம், கோவிந்தராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் தரிசனம் முடித்து இரவு ஓய்வெடுத்து மறுநாள் அதிகாலையில் மலையேறுவது மிகுந்த உற்சாகத்தைம் தரும்.
* பஸ்-ஸ்டாண்டிலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும் 5 நிமிடத்துக்கு ஒரு பஸ் என்கிற ரீதியில் பஸ்கள் செல்கின்றன. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தேவஸ்தான இலவசப் பேருந்துகளும் செல்கின்றன.
* அலிபிரியில் நம்முடைய லக்கேஜ்களை சிறிய பூட்டு போட்டு பூட்டி தேவஸ்தான அலுவலகத்தில் கொடுத்து விட்டால் போதும். அவர்கள் வழங்கும் ரசீதைக் காண்பித்து, அவற்றை நாம் மலையின் மீது சென்று பெற்றுக்கொள்ளலாம். லக்கேஜ் பைகளில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
* இந்த மலைப் பாதையில் 2,400 படிக்கட்டுகள் ஏறி முடித்ததும், ‘காலி கோபுரம்’ என்னும் இடம் வரும். இங்குதான் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அங்கேயே அன்னப்பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் பிறகு 1,400 படிக்கட்டுகள் கொண்ட 9 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும்.
* மலையேறி வந்ததும், திருமலை பஸ்-ஸ்டாண்டுக்கு எதிரில் உள்ள மாதவ நிலையத்தில் ரெஸ்ட்ரூம் செல்லவும், குளிப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்திக்கொண்டு நமது உடைமைகளை அங்குள்ள ஃப்ரீ லாக்கரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்லலாம்.
* மலைப்பாதை முழுவதும் 24 மணிநேரமும் பாதுகாப்பு வசதிகள், ஆம்புலென்ஸ் வேன் மற்றும் ரோந்துப் பணியாளர்கள் உண்டு. இரவிலும் பக்தர்கள் செல்லும்விதமாக விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிகாலை நேரத்தைத் தேவுசெய்வதே நல்லது.
* பாதி தூரம் வந்ததும் ஏறுவதற்கு உடல் நலம் முடியாமல் போனால் ஆங்காங்கே உட்கார்ந்து பொறுமையாக வரவேண்டும் அப்போதும் முடிய வில்லையென்றால் ஒரு சில இடங்களில் உள்ள இணைப்புச் சாலைகளின் வழியாக வந்து பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். ஆனால் திவய தரிசனத்துக்கான அனுமதி கேன்சலாகிவிடும். பிறகு நாம் சர்வதரிசனத்திலோ சிறப்பு தரிசனத்திலோ சாமி தரிசனம் செய்யலாம்.
* மலைப்பாதை முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் டாய்லெட் வசதிகள் உண்டு. அங்காங்கே சின்னச்சின்ன பெட்டிக்கடைகளும் உண்டு. பொதுவாக நாம் பழங்கள் மற்றும் கேரட் வெள்ளரி சாலட் வகைகள் எலுமிச்சைப்பழம் போன்றவற்றை உடன் எடுத்துச்செல்லாம்.
* நாராயண ஸ்தோத்திரம், ஹனுமன் சாலிசா, போன்ற பக்திப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்லலாம் அல்லது கோவிந்தனின் நாமத்தை உரக்க உச்சரித்துக்கொண்டும் செல்லலாம். பயணம் களைப்பில்லாமல் உத்வேகத்துடன் செல்லலாம்.
* ஏழுமலைகளும் எம்பெருமான் வாசம் செய்யும் புனித ஸ்தலமென்பதால் காலணிகள் அணியாமல், மது, சிகரெட், மாமிசங்களைப் புறக்கணித்து பயபக்தியுடன் சென்று இறைவனை வழிபடுவது நல்ல பலனை அளிக்கும்.
* வருடத்தின் எந்த மாதத்திலும் மலை யேறிச்சென்று வழிபடலாம் என்றாலும், ஏப்ரல், மே போன்ற கோடை கால மாதங்களையும் அக்டோபர், நவம்பர் போன்ற மழைக்கால மாதங்களையும் தவிர்ப்பது நல்லது.
* குடும்ப உறுப்பினர்கள், ஒருமித்த சிந்தனையுள்ள நண்பர்கள் இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டால், பயணமும் இனிமையாகும், சோர்வாகவும் இருக்காது. தனி நபராக இருந்தால் மக்களோடு மக்களாக பயணம் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக