மகளதிகாரம்...
மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்
மகளதிகாரம் 1
***
பிறந்ததும்
ஒரு வெள்ளைத் துணி
ஏந்திக் கொடுத்தார்கள்
என் இளஞ்சிவப்புத் தேவதையை…
அதன் மூடிய இமைகளுக்குள்
இரு விழிகள்
அசைவது போலத்தான் இருந்தது
அதுவரையில் என் இதயம்…!
***
மகள் கோலம் வரைகையில்
அது முடியும் மட்டும்
நம்பிக்கையோடு
காத்திருக்கின்றன
சில தெய்வங்கள்...
கோலத்திலேயே வாழ்ந்துவிட!
***
அள்ளிக் கொடுத்தாலும்
ஆறாத மனம்
மகள் கிள்ளிக் கொடுத்ததில்
அடங்கிவிடுகிறது..
***
மகள் சாதம் பறிமாறியபோது
தட்டில் கொஞ்சம் சோறும்
நிரம்பி வழியும் சந்தோசமும்
இருந்தது.
***
ஒவ்வொரு இரவும்
தூங்கும் மகளின்
முகம் பார்த்துக் கொண்டிருப்பேன்
அது தவிர
தியானம் என்று
தனியாக எதுவும்
செய்வதில்லை நான்…!
***
மகளதிகாரம் 2
***
பொட்டு வைத்துப் போனாள்
பின்
அதற்கு நேராக
என் புருவங்களை
நகர்த்திக் கொண்டேன்…
***
மகள் பிறந்ததும்
முதலில்,
சுண்டு விரல்தான்
பிடித்துப் பார்த்தேன்.
அதன் நினைவாய்,
எங்கும், என்
சுண்டுவிரல் பிடித்தே வருகிறாள்
***
மகளின்
பாதங்களால்
நிறைகிறது
என் வீடு
***
மகள் முத்தமிட்ட எச்சில்
ஈர நினைவாகி விடுகிறது.
***
குவளை நீர் மொத்தமும்
சிந்திவிட்டாலும்
மகள் கொண்டு வந்ததில்
என் தாகம் தீர்ந்தது…
***
நெஞ்சில் தான் படுத்திருப்பாள்
அவள் இல்லாத நேரத்தில்
பதிலுக்கு தலையணை
கொடுத்துப் போனாள்…
மூச்சுத் திணறியது.
***
மகளதிகாரம் 3
***
நான் அழும்போது
மகள் தன் பிஞ்சுக் கைகளால்
என் கண்ணீர் குளத்தின்
மொத்தத் தண்ணீரையும்
வாரி இறைத்து
வற்ற வைத்துவிடுகிறாள்…
***
கோபித்துக்கொள்ளும் மகளிடம்
மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பேன்…
தெய்வங்கள் போலில்லை
உடனே மன்னித்துவிடுகிறாள் மகள்…!
***
மகள் வரைந்ததும்..வரைந்ததும்
இந்த பறவைகள் பறந்து விட்டால்
எப்போது முடிப்பது ஓவியத்தை!?
***
மகள் கோபத்தில்
இருக்கும் போது
மிக அருகில்
அமர்ந்து விடுவேன்
சமாதானத்திற்கு
தலை நிமிரும் போது
ஆளில்லை என்றால்
பாவம் வாடிவிடும்…
***
மகளதிகாரம் 4
***
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்த மகள்
நடுவிலேயே தூங்கிவிட்டாள்.
நான் எவ்வளவு சொல்லியும்
இரவு முழுவதும் காத்திருந்தன
நட்சத்திரங்கள்
அவள் எப்படியும் எழுந்துவிடுவாள் என.
***
பூந்தொட்டித் தண்ணீரில்
நிலா தவறி விழுந்துவிட்டதென
காப்பாற்றச் சொல்லி நிற்கிறாள் மகள்
இப்போது அவளுள் தவறி விழுந்த என்னை
அந்த நிலா தான் காப்பாற்றியாக வேண்டும்…
***
அப்பா
அம்மா
அண்ணா
தனக்கு
என ,
நட்சத்திரங்களுக்குப்
பெயர் வைத்துக் கொண்டிருந்த மகளுக்கு
நான்கு நட்சத்திரங்களே போதுமானதாயிருக்கிறது.
….ஆண்டன் பெனி
" கவிஞர் ஆன்டன் பெனியின் கவிதைகள்"
மகளை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக