வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா...!
வீட்டுல பெருசுங்க யாராச்சும் இருந்தா... பசங்க எதைச் செஞ்சாலும் தொணதொணத்துக்கிட்டே இருப்பாங்க. 'டேய்... நாதாங்கியை (தாழ்ப்பாள்) ஆட்டாதே... சண்டை வரும்'னு மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு மண்டையைக் காய வெப்பாங்க. ஆனா, சொல்ல வந்த விஷயம் வேறயா இருக்கும்... அதோட உட்பொருள் அதி முக்கியமானதாவும் இருக்கும்! இதை நேரடியாவே சொல்லியிருக்கலாம்தான். ஆனா, இப்படிச் சொன்னாத்தானே சின்னஞ்சிறுசுக கிராஸ் கேள்வி கேக்காம அதை ஏத்துக்கும்!
1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'
அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.
2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'
வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'
நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.
4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'
கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.
5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'
வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.
6. 'வீட்டுத் தோட்டத்தில் ஆமணக்கு வளர்த்தால், அதன் காய்கள் வெடித்து விதைகள் சிதறுவதுபோல் குடும்பம் சிதறிடும்.'
ஆமணக்கு காய் முற்றியவுடன், அதன் விதைகள் கீழே சிதறிக்கிடக்கும். தெரியாமல் சிறுபிள்ளைகள் சாப்பிட்டால் தொண்டையில் சிக்கிக் கொண்டு விபரீதமாகிவிடும். அதனால்தான் அதை வீட்டுக்கு அருகில் வளர்க்கக் கூடாது.
7. 'பஞ்சு பறந்தா... பணம் பறக்கும்.'
வீட்டில் தலையணைக்காக இலவம் பஞ்சு வாங்கி வந்து அடைப்போம். அப்போது, அதைக் கண்டபடி பறக்கவிட்டு விளையாடுவார்கள் குழந்தைகள். அப்படி பறந்தால்... விலை உயர்ந்த பொருளான இலவம் பஞ்சு வீணாகி பணத்துக்குதான் வேட்டு. அதேபோல, சுவாசத்தின் மூலம் உடலுக்குள் போய் வைத்திய செலவை வேறு இழுத்து வைக்கும்.
8. 'வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'
புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
9. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'
கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
10. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'
புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
11. 'முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'
மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்.
12. 'தோட்டத்தில் முதல் வெள்ளாமையாக தென்னை வைக்கக் கூடாது.'அது காய்ப்புக்கு வந்து பலன் கொடுக்க ஆண்டுக் கணக்கில் ஆகும். அதற்குள் 'அடச்சே' என்று வெறுத்துவிடும். எனவே, சீக்கிரமாக பலன் கொடுக்கும் பயிர்களை ஆரம்பத்தில் பயிர் செய்வது நல்லது.
புரியும் புதிர்கள்!
கிராமப்புறங்களில் எல்லாவற்றுக்குமே ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்கள். பல சமயங்களில் அது நம்ப முடியாததாகக்கூட தோன்றும். ஆனால், உண்மையை அலசி ஆராய்ந்து பார்த்தால்... அத்தனையும் சொக்கத் தங்கம் என்பீர்கள்!
13. 'தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'
சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!
14. 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'
பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
15. 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.
16. 'அதிகாலையில் முங்கிக் குளி.'
சூரியன் உதிக்காத, பனி விலகாத சமயத்தில்தான் நீர் நிலைகளின் மேற்பரப்பில் ஓசோன் படலம் இருக்கும். அதனால் முங்கிக் குளிக்க வேண்டும். அப்போது, அந்த ஓசோன் படலத்தை சுவாசிக்கும்போது, அது நம்முடைய மூச்சுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
17. 'ஏகாதசி விரதம் இருப்ப வர்கள், அதை முடிக்கும்போது அகத்திக்கீரை சாப்பிட வேண்டும்.'அகத்திக்கீரைச் சாப்பிட்டால், விரதத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறுவதோடு, வயிற்றிலுள்ள புழுக்களும் இறந்துபோகும்.
18. 'விசேஷங்களின்போது வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.'
மரம், செடிகளெல்லாம் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவைக் கொடுக்கும். விசேஷம் நடக்கிற இடங்களில் பலர் கூடும்போது வெளிப்படும் வியர்வை, மூச்சுக் காற்று போன்றவற்றை மாவிலை தோரணமும் வாழை மரங்களும் கிரகித்துவிடும்!
19. 'வெள்ளி, செவ்வாய் சாம்பிராணி போட வேண்டும்.'
வாரம் இரு தடவை இப்படிச் செய்வதன் மூலம்... சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவி... விஷ ஜந்துக்கள், கொசுக்கள் உள்ளிட்டவற்றை விரட்டி அடிக்கும்.
20. 'வாசலில் உள்ள நிலைப்படியில் மஞ்சள் தடவ மறக்கக் கூடாது.'
வெளியில் சென்று திரும்புபவர்களின் கால்களில் தப்பித் தவறி ஏதாவது விஷக் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைப்படியில் காலை வைத்தால்... அதிலிருக்கும் மஞ்சள் கிருமிநாசினியாகச் செயல்படும்.
21. 'அருகில் எங்காவது இடி இறங்கினால்... 'அர்ஜுனா, அர்ஜுனா' என்று சத்தமாகச் சொல்ல வேண்டும்.'
இடிச் சத்தத்தின் காரணமாக சிலருக்குக் காது அடைத்துக் கொள்ளும். அதைச் சரிசெய்ய, தாடையை சுருக்கி விரிக்க வேண்டும். 'அர்ஜுனா' என்று சொல்லும்போது அது எளிதாக நடந்தேறிவிடும். சொல்லித்தான் பாருங்களேன் - அர்ஜுனா!
22. 'ஊசி கொண்டு இரவில் துணி தைத்தால் தரித்திரம்.'
அந்தக் காலத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் இல்லை. அதனால், ஊசியானது கை மற்றும் நகக்கண்களில் ஏறிவிடும் வாய்ப்பு உண்டு. அத்தகைய வீணான விபத்தைத் தவிர்க்க, இதுதான் வழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக