சனி, 8 பிப்ரவரி, 2020

அண்டார்டிகா


அண்டார்டிகா

சூழலியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு தாயகம். நாசாவின் பல்வேறு விஞ்ஞானிகள் இங்கேயே தங்கள் வீடுகள் இருப்பது போல் பாவித்து வருடத்தில் பாதி நாட்களை கழிக்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்தை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அண்டார்டிகாவை தான் படிக்க வேண்டும் என்று பல நாசா விஞ்ஞானிகள் வற்புறுத்துகிறார்கள். இதற்கு காரணம், உயிர்காற்றான ஆக்சிஜன் தவிர்த்து செவ்வாயின் சூழலும், அண்டார்டிகாவின் சூழலும் ஒன்றுதான். இப்படி பூமியின் மற்ற இடங்களோடு ஒத்துப்போகாமல் இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு நாள் என்பது எப்படி இருக்கிறது?


☄ஆறு மாதம் வெளிச்சம், ஆறு மாதம் இருள்☄
பூமியின் மற்ற பகுதிகளில் ஒரு நாள் என்பது இரவு, பகல் சேர்ந்ததுதான். ஆனால், அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான். கோடை காலம், குளிர் காலம் என அங்கே இரண்டே இரண்டு பருவ நிலைகள்தான். இதற்குக் காரணம், பூமி தன் அச்சிலிருந்து 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாகும். இதனால் அண்டார்டிகாவின் பெரும் பகுதி வருடத்தில் பாதி நாட்கள் சூரிய வெளிச்சத்தைப் பெற்று விடும். வெயில் காலங்களில், நடு இரவில் கூட சூரியன் அசராது தன் கடமையை ஆற்றிக் கொண்டிருக்கும். ஆனால், குளிர்காலத்தில் சூரியனை நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை பார்க்கவே முடியாது. அப்போது அண்டார்டிகாவின் வெப்ப நிலை பாதாளத்திற்கு சென்று விடும். சராசரியாக மைனஸ் 34.4 டிகிரி செல்சியஸ் இருக்கும். குறைந்தபட்சமாக ஒரு முறை மைனஸ் 89.4 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை வெறும் 15 டிகிரி செல்சியஸ் மட்டுமே.

☄அண்டார்டிகா ஒரு பாலைவனம்☄
ஆச்சரியமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அண்டார்டிகா ஒரு பாலைவனம் போலத்தான். பனியால் மூடப்பட்டிருந்தாலும் அங்கே மழைப்பொழிவு என்பதே அரிதான ஒன்று. பனிப்பொழிவு கூட எப்போதாவதுதான். நிலப்பரப்பு பனிப்பாறைகள், பனிப் பொழிவுகள் ஆகியவற்றால் ஆனது. எவ்வித மரங்களோ, செடிகளோ கிடையாது. கடுமையான குளிரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய தாவரங்களான மரப்பாசிகள் மற்றும் பாசிகள் மட்டுமே வாழ்கின்றன. அங்குப் பெரிய அளவில் நடக்கக்கூடிய ஆராய்ச்சிகளில் ஒன்று எரிகற்கள் குறித்த ஆராய்ச்சி. பூமியின் மற்ற பகுதிகளில் விழும் எரிநட்சத்திரங் களைவிட இங்கு அதிக அளவில் அவை காணப்படும். இதற்குக் காரணம், மக்கள் நடமாட்டம் குறைவு மற்றும் பனி நிலம் போன்ற சூழல்கள் அந்த கற்களை அழியாமல் பார்த்து கொள்கிறது.


☄அண்டார்டிகாவில் ஒரு நாள்☄
அண்டார்டிகாவில் நியூசிலாந்து நாட்டிற்குச் சொந்தமான இடத்தில் இருக்கிறது புகழ்பெற்ற அமெரிக்காவின் மெக்முர்டோ நிலையம் (McMurdo Station). அங்கு இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களிலே இதுதான் பெரியது. தற்போது அங்கே 1258 பேர் வசிக்கிறார்கள். எந்தப் பொருட்கள், மனிதர்கள் அண்டார்டிகா வந்தாலும், அந்த நிலையத்தைக் கடக்காமல் செல்ல முடியாது. அங்கு ஒரு நாள் எப்படி இருக்கும் என விளக்குகிறார் அங்கு பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் டேவிட் நோல்ட்.


☄ஆராய்ச்சிப் பயணம்☄
“அண்டார்டிகா நிச்சயம் ஆபத்தான இடம்தான். பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நிதிப் பற்றாக் குறையால் தங்கள் ஆராய்ச்சிகளை போதிய பாதுகாப்பில்லாமல் செய்ய துணிவார்கள். அது ஆபத்தை ஏற் படுத்தும். அனுபவமில்லாத பலர் இங்கே தவறு செய்து பேராபத்தில் சிக்கி இருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இரண்டு ஆராய்ச்சியாளர்கள், கூடத்தை விட்டு வெளியே சென்றிருந்தனர். புயல் எச்சரிக்கை வரவே, சீக்கிரம் கூடத்திற்கு திரும்ப வேண்டுமெனப் பாதுகாப்பான வழியை விடுத்து குறுக்குப் பாதையில் நடந்தனர். அப்போது பிளவுபட்ட பனித்தகடுகளில் காலை வைத்து மாட்டிக் கொண்டனர். நீங்கள் தண்ணீரில் இறங்க வேண்டும் என்றில்லை, பனித்தகடுகளின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாலே போதும், ஓர்கா இன திமிங்கலங்கள் உங்களை கொண்டு சென்று விடும். ஒரு சீசனிற்கு சராசரியாக நூறு விபத்துகள் வரை ஏற்படும். பத்து வருடங்களுக்கு முன்னால் இறப்பு கூட நிகழ்ந்துள்ளது.

அண்டார்டிகாவின் குளிர்காலம், அதாவது பிப்ரவரி முதல் ஆகஸ்டு வரை முழுவதும் இருட்டு என்பதால் விமான போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்படும். நீங்கள் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இங்கே வந்தால், குறைந்தது ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி விட வேண்டிய நிலை ஏற்படும். வெளியுலகத்தில் இருந்து எந்த உதவியும் வராது. ஆனால், தினமும் இண்டர்நெட் சேவை இருக்கும், செய்திகளை அறிந்து கொள்ளலாம். சராசரியாக இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் பத்து மணி நேரங்கள் வேலை செய்வார்கள். அதன் பின்னர் கொண்டாட்டம்தான். பார் வசதி உள்ளது, ஸ்னோ பவுலிங் விளையாடுவார்கள். கொஞ்சம் பழைய இடம்தான் என்றாலும், உற்சாகத்திற்கு குறைவிருக்காது.

வாக்கிங், ட்ரெக்கிங் செல்ல வரையறுக்கப்பட்ட எல்லைகள் இருக்கும். எப்போது சென்றாலும், ஒரு துணையில்லாமல் செல்லக் கூடாது. அதுவும் கையில் ரேடியோ இல்லாமல் எங்கும் போகக்கூடாது. முறையாக அனுமதி பெறாமல் செல்லக் கூடாது எனப் பல விதிமுறைகள் உண்டு. அனைத்தையும் பின்பற்றினால், எந்த பிரச்சினையும் இல்லை. சுத்தமான காற்று, மாசில்லா பூமி, இதைவிட சொர்க்கம் எங்கு இருக்க முடியும்?” என்கிறார்.

யோசிக்க வைப்பதாகத்தான் இருக்கிறது டேவிட் பேச்சு. மிகுந்த சிரமத்திற்கு இடையே இங்கே ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்வது நம் பூமிக்காகவும், அதில் நம் வாழ்க்கைக்காகவும் என்பதை மறுக்க முடியாது. அது சரி, நீங்கள் அண்டார்டிகா போக வேண்டுமென்றால் என்னவெல்லாம் நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிய வேண்டுமா?

☄அத்தியாவசிய பொருட்கள்☄
21 முறை அண்டார்டிகா சென்று வந்த ராஸ் விர்ஜினியா என்ற சூழலியாளரின் அறிவுரைப்படி, சுற்றுலாப் பயணிகள் அண்டார்டிகாவிற்கு வெப்ப காலத்தில் மட்டுமே செல்ல வேண்டும். அங்கு போகும் போது நிச்சயம் எடுத்துச் செல்லும் பொருட்கள் குறித்து அவர் விளக்குகிறார்.

“கூலிங் கிளாஸ் மிகவும் அவசியம். நடு இரவில் கூட சூரியன் இருப்பதால், அதை நேரடியாகப் பார்க்கும்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, யூ.வி.(UV)யில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் எடுத்துச் செல்வேன். இசை எனக்கு உற்றத்துணையாக இருக்கும். பிடித்த பாடல்களை ஐ-பாட் அல்லது எம்.பி.3 பிளேயர்களில் சேமித்துக் கொண்டு எடுத்துச் செல்வேன். சில ஆபத்தான நேரங்களில் வெளியே வரக்கூடாது என்று கூறிவிடுவார்கள். சில சமயம், அந்த உத்தரவு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை கூட நீடிக்கும். அப்போது என் இசை நிச்சயம் கை கொடுக்கும். உறங்கும் போது பயன்படுத்த ஐ- மாஸ்க் (eye mask) வேண்டும். சூரிய வெளிச்சம் என்னைத் தூங்க விடாமல் செய்யலாம். அதற்காக இது. குளிரைச் சமாளிக்க மதுபான பாட்டில் எடுத்துக் கொள்வேன். இதெல்லாம் இல்லாமல், ஒரு நாள் கூட என்னால் அங்கு தாக்குப் பிடிக்க முடியாது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக