‘சர்வ மங்கள மாங்கல்யே...’ சொன்ன பெண் புரோகிதர்!
பெண்கள் இந்தத் துறைக்கு எப்போது வருவார்கள் என்ற பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, சென்னையில் நடந்த புதுமை திருமணம்!
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத இனிமையான நாள் அவர்களது திருமண நாள் தான். வெளியில் எவ்வளவோ திருமணத்தைப் பற்றி ஜோக் சொல்லிக் கொண்டாலும், ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தங்களது வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு திருமணம் மூலம் தான் அடியெடுத்து வைக்கின்றனர். அப்படிப்பட்ட திருமணங்களை வித்தியாசமாக நடத்த சமீபகாலமாக மணமக்களே புதுமை விரும்பிகளாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படித்தான் கடந்த வெள்ளியன்று நடந்த தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர் விக்னேஷ் ராகவன் - சுஷ்மா ஹரிணி ஜோடி. அப்படியென்ன வித்தியாசமாக செய்து விட்டார்கள் என கேட்கிறீர்களா? இருக்கிறது. இவர்களது திருமணத்தை இந்து மதத்திற்கான உரிய சடங்குகளுடன் நிறைவாக செய்து முடித்து வைத்தவர் ஒரு பெண் புரோகிதர். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர் சுஷ்மா ஹரிணி. இவரும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட விக்னேஷ் ராகவனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட அவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். எனவே, தங்களது திருமணத்தைப் புதுமையாக அதே சமயம் இனி வருபவர்களுக்கு முன்னுதாரணமாக செய்ய வேண்டும் என திட்டமிட்டனர் சுஷ்மாவும், விக்னேஷும். பட உதவி: தினமணி, தி ஹிந்து அதன்படி, வழக்கறிஞரான சுஷ்மா, தங்களது திருமணத்தை பெண் புரோகிதர் நடத்தி வைத்தால் நன்றாக இருக்கும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். சுஷ்மாவின் இந்த விருப்பத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டனர். ஆனால், இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு சமூக சடங்குகளையும் இணைத்து திருமணத்தை நல்லபடியாக நடத்தி வைக்கும் புரோகிதர், அதிலும் பெண் புரோகிதர் கிடைப்பது அவர்களுக்கு சவாலாக மாறியது. திருமணத்திற்கு மிகக் குறைவான நாட்களே இருந்தபோதும், பெண் புரோகிதரைத் தேடும் பணியை அவர்கள் முடுக்கி விட்டனர். அப்போது தான் ஆந்திராவைச் சேர்ந்த பெண் புரோகிதர் பிரமரம்ப மகேஸ்வரி பற்றி அவர்களுக்குத் தெரிய வந்தது. மைசூரைச் சேர்ந்தவரான பிரமரம்ப மகேஸ்வரி வேத மந்திரங்களை முறையாக பயின்று அதில் தேர்ச்சியும் பெற்றவர். எனவே, சுஷ்மா - விக்னேஷ் திருமணத்தை புரோகிதராக இருந்து நடத்தி வைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று சென்னை தக்ஷின் சித்ராவில் இந்தத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. புரோகிதராக மகேஸ்வரி தனது பணியைச் சிறப்பாகச் செய்ததாக திருமணத்திற்கு வந்தவர்கள் பாராட்டினார்கள். இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் சடங்குகளை அவர் சிறப்பாக நிகழ்த்தியதுடன், மணமக்களுக்கு ஒவ்வொரு தனி மந்திரத்தின் முக்கியத்துவத்தையும் ஆங்கிலத்தில் மகேஸ்வரி விளக்கியது இங்கே குறிப்பிடத்தக்கது. “எங்கள் மகளின் திருமணத்திற்கு பெண் ஒருவர் புரோகிதராக இருப்பதற்கு ஆரம்பத்தில், நாங்கள் தயக்கம் காட்டினோம். ஏனென்றால் இதற்கு முன்னர் திருமணத்தை பெண் புரோகிதர் முன்னின்று நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. ஆனால் எங்கள் தயக்கத்தை மாற்றி, இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக மகேஸ்வரி மாற்றி விட்டார்,” என்கிறார் மணப்பெண் சுஷ்மாவின் தந்தையான வழக்கறிஞார் சுரேஷ் ரெட்டி. பெண் புரோகிதர் மந்திரங்கள் ஓதி திருமணம் செய்து வைப்பது தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 2017ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற திருமணத்தை பெண் புரோகிதர் ஒருவர் நடத்தி வைத்தார். அப்போது வெளியுறவுத்துறை பொறுப்பாளராக இருந்த விஜய் சவுதவாலே நாக்பூரில் தனது சகோதரருடைய மகனின் திருமணத்தில் இத்தகைய புதுமையைப் புகுத்தி பாராட்டுகளைப் பெற்றார். அப்போது அது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் நடந்தது. எனவே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரம் ஓதி அந்தத் திருமணத்தை அவர் நடத்தி வைத்தார். ஆனால் இப்போதே இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் மகேஸ்வரி. “நமது பாரம்பரியத்தில் மந்திரம் ஓதி திருமணத்தை நடத்திவைக்கும் தொழில் என்பது ஆண்களின் கோட்டையாகவே இருந்து வருகிறது. எனவே, அத்தகைய போக்கை மாற்றிக் காட்ட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பெண் புரோகிதர்களும் இருக்கிறார்கள், அவர்களாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்படமுடியும் என்பதற்கு எங்களது திருமணமே நல்லதொரு உதாரணம். இப்படிப்பட்டவர்களை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும்,” என்கிறார் மணப்பெண் சுஷ்மா. ஊரே மெச்சும்படி நடந்த இந்த திருமணத்தில் சுஷ்மாவுக்கு ஒரே ஒரு குறை தான். தன் திருமணத்தில் பெண் புரோகிதரைப் போலவே, மேளம், மிருதங்கம், நாதஸ்வரக் கலைஞர்களாகவும் பெண்களை அமர்த்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால் அது மட்டும் கைகூடவில்லை என்ற வருத்தமாம் அவருக்கு. Also Read ஆசிரமத்தில் ரிசப்ஷன், ரிட்டர்ன் கிஃப்டாக இந்திய அரசியல் அமைப்புச் சட்ட புத்தகம்! மத்தபடி நினைத்தபடியே ஊரே பேசும் அளவிற்கு வித்தியாசமாக, புதுமையாக தங்களது திருமணத்தை நடத்தி முடித்து விட்டார் சுஷ்மா. இவர்களது கல்யாணத்திற்கு வந்தவர்கள் மணமக்களைவிட புரோகிதர் மகேஸ்வரியைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கேன். பெண்கள் தங்களுடைய அபரிமிதமான தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் இப்போது எல்லாத் துறையிலும் தங்களது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். இத்தனை நாட்களாக, ‘அட இதை மட்டும் இன்னமும் பெண்கள் செய்யவில்லையே’ என்று இருந்த குறையையும் தற்போது போக்கி விட்டனர். இனி நிறைய திருமணங்களில் பெண் புரோகிதர்களை பார்க்கலாம் என நம்பலாம்.
Thanks yourstory.
#WOMEN_PRIEST #பெண்_புரோகிதர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக