திங்கள், 5 ஆகஸ்ட், 2019

சுதந்திர சுவாசம் தந்த பெண்கள் இன்று குடியரசு தினம்

இன்று சுதந்திரமாக நாம் இருப்பதற்கு, எண்ணற்ற தியாகங்கள் அரங்கேற்றப்பட்டுஉள்ளன. சுதந்திரம் பெற்றாலும் முழு அரசியல் அமைப்பு சட்டம் அமலாக்கம் செய்யப்பட்ட நாள் 1950 ஜனவரி 26. அந்த நாளை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். குடியரசு தினத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல தலைவர்களை நாம் நினைவு கூர்கிறோம். ஆயினும் பலரது போராட்டம் வெளியே தெரியாமல் மறைந்து போய் விட்டது.
அதிலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பெண்களின் பங்களிப்பு பலருக்கு தெரியாமலேயே போனது. தமிழக வரலாற்றில் பெண்கள் அரசியலிலும், கல்வியிலும், ஆரம்ப காலம் தொட்டே ஈடுபட்டு வந்தனர். சங்க கால பெண் புலவர்களான அவ்வையார், பொன்முடியாள் அரசவை புலவர்களாகவும், துாதுவர்களாகவும் செயல்பட்டு வந்தனர். பல்லவர், சோழர், பாண்டியர் கால அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், கல்வி கேள்விகளிலும், சமூக செயல்பாடுகளிலும் சிறப்புடன் திகழ்ந்தனர். விடுதலை வேட்கை 19ம் நுாற்றாண்டுக்கு பின்னரே, தமிழ்நாட்டில் வீறு கொண்டு எழுந்தது. விடுதலை வேட்கை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த பெண்கள் பலர் உண்டு.ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து, கிளர்ச்சி செய்த பாளையக்கார பெண்களில் முக்கியமானவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயரை எதிர்த்து அஞ்சா நெஞ்சம் கொண்டு எதிர்த்து போராடிய வீரமங்கை இவர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து சுதந்திர போராட்ட இயக்கங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்சொர்ணத்தம்மாள், பர்வதவர்த்தினி, அகிலாண்டத்தம்மாள், கே.பி.ஜானகி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, முத்தம்மாள், பத்மாஸனியம்மாள், தமயந்தி அம்மாள், மீனா கிருஷ்ணசாமி, திருக்கொண்டா லட்சுமி, வத்கலாமணி.

சொர்ணத்தம்மாள்:

மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் துணிச்சலில் சிகரமாக திகழ்ந்தனர். அவர்களுள் சொர்ணத்தம்மாள் அன்னிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ல் காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம், அவரது வேண்டுகோளான,“செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத்தீயை மூட்டினார். ஒவ்வொரு நாளும் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் வைக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்தது.

என்.எம்.ஆர்.எஸ்.பர்வதவர்த்தினி:

மதுரையில் அதிகம் வாழும் சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த சுப்ராமன் மனைவி பர்வதவர்த்தினி அம்மாள். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சுப்ராமன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருந்த நேரத்தில், கணவர் வழியில் பர்வதவர்த்தினி மதுக்கடை மறியலில் ஈடுபட்டு வந்தார். மறியல் செய்த பெண்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கண்டன ஊர்வலம் நடத்தினார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்.

கே.பி.ஜானகியம்மாள்:

மதுரையை சேர்ந்த குருசாமியின் மனைவி ஜானகியம்மாள். நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகம் வந்தபோது, முத்துராமலிங்க தேவருடன் இணைந்து சுற்றுப்பயணம் செய்து விடுதலை உணர்வை ஊட்டினார். 1937-ல் ஆறு மாதம், 1941-ல் ஒன்பது மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். விடுதலை போராட்ட வீரருக்குரிய ஓய்வூதியத்தை நிராகரித்து இறுதி வரை தியாக வாழ்வு வாழ்ந்தார்.மதுரையில் மட்டும் சுதந்திர வேட்கையை துாண்டிய பெண்மணிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சித்து பாக்கியலெட்சுமி, சீதாலெட்சுமி அம்மாள், தாயம்மாள், சீலக்காரம்மாள், விசாலாட்சி, திருக்கொண்டாலட்சுமி அம்மாள், முத்தம்மாள், பத்மாஸணியம்மாள், மதுரை மேலுாரை சேர்ந்த தமயந்தி அம்மாள்.

ராமநாதபுரம்:

திருவாடானை திருவேகம்புத்துார் செல்லத்துரையின் மனைவி மாணிக்கம்மாள். 1942-ல் ஆகஸ்ட் புரட்சியில் பங்கு கொண்டதற்காக 5 மாத சிறை தண்டனை பெற்றார். திருவாடானை கிழக்கு தெருவை சேர்ந்த வேலம்மள் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதற்காக 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.ராமநாதபுரம் கீழ்அய்யக்குடியை சேர்ந்த நீலா மெருன்னி, 1941-ல் நடந்த தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று 4 மாத சிறை தண்டனை அனுபவித்தார். ராமநாதபுரம் தெற்கு வானக்கார தெருவை சேர்ந்த ராஜலெட்சுமி, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.பரமக்குடி சூடியூரை சேர்ந்த ஜெயலட்சுமி தனது 20வது வயதில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார்.

விருதுநகர்"

அருப்புக்கோட்டை செல்லம்மாள் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் அமிர்தம்மாள் அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார். விருதுநகர் ராஜாமணி அம்மாள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். ராஜபாளையம்மஞ்சம்மாள் 1930-ம் ஆண்டு அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். இதற்காக 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் வேலுநாச்சியார், குயிலி, காளியம்மாள் மற்றும் பல்வேறு பெண்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசை கொண்டாடி வரும் நாம், நமக்காக விடுதலை போரில் போராடிய பெண்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏட்டிற்கு வராத எத்தனையோ பெண்கள் உள்ளனர். அவர்கள் தியாகம் இன்னும் வெளிஉலகிற்கு தெரியவில்லை. இந்த விடுதலை போராளிகளின் தியாகம் வெளி வர வேண்டுமாயின், பெண்களின் பங்களிப்பு குறித்தான ஆய்வுகளும், நுால்களும் வெளிவர வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக