திங்கள், 26 ஆகஸ்ட், 2019

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்!


குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்!

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட க்ரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.

இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக