சர்வதேச பூனை தினம் ஆகஸ்ட் 8
மியாவ்... மியாவ்..!
பூனை என்றதும் நமக்கு நினைவிற்குள் துள்ளிக் குதித்து வருவது டாம் அண்டு ஜெர்ரி! அதற்குப் பிறகே, கூரிய கண்களும் நகத்துடன் கூடிய மெல்லிய கால்களும் அழகான மீசையும் மனதில் வரும்.
பூனைகளுக்கும் மனிதர்களுக்குமான இந்த உறவு மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது.
பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்காக பூனைகள் இருந்தன! இவை இறக்கும்போது பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் சேர்த்து எகிப்தியர்கள் புதைத்துள்ளார்கள்.
இன்னும் கொஞ்சம் அதிகமாக, மியாவ்... மியாவ்... பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
பூனைகளில், காட்டுப்பூனை, வீட்டுப்பூனை என்று இரு வகைகள் உண்டு. காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் பூனை சைவ உணவையும் உண்ணும்! ஆண் பூனைகள் அனைத்தும் ஆங்கிலத்தில், 'டாம்' என்றும், பூனைக் குட்டிகள் கிட்டன், கிட்டி, புஸி கேட் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை விளையாட்டில் விருப்பம் உள்ளவை. இந்தக் குணம்தான் பூனைகளை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது. ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டை விட வேகமாக, மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பூனைகளால் ஓட முடியும்!
இவற்றிற்கு இரவில் பார்வை கூர்மையாக இருக்கும். மனிதனின் பார்வைத் திறன் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளி பூனைகளுக்குப் போதும்! நாயைவிட சிறு சிறு ஒலிகளையும் துல்லியமாகக் கேட்கும் திறன் உண்டு.
நாயைக் காட்டிலும் சுத்தமாக இருக்கும் பூனை, நாக்கால் தன் ரோமங்களை முழுமையாகச் சுத்தம் செய்துகொள்கிறது. பூனைகள் நீண்ட நேரம் தூங்காமல் குட்டித் தூக்கம் மட்டுமே தூங்குவதால் இரவில் விழிப்புடன் இருக்கின்றன!
உலகம் முழுவதும் 50 கோடி பூனைகள் செல்லப் பிராணியாக வளர்க்கப்படுகிறதாம். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் பூனை இருந்தது; காரணம், எல்லா வீடுகளிலும் எலியும் இருந்திருக்கிறது!
விண்வெளி சுற்றிய பூனை!: விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை ஃபெலிசிட் (Felicette). பிரான்ஸ் நாட்டில் இருந்து, 1963, அக்டோபர் 13ல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பெண் பூனை விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமிக்குத் திரும்பியது என்பதே இதன் சிறப்பு.
சீனியர் பூனை!: உலகின் அதிக வயதான பூனை 'ஸ்கூட்டர்'. ஆண் பூனையான இது சயாமிஸ் (Siamese) இனத்தைச் சேர்ந்தது. மார்ச் 26, 2016 அன்று தனது 30ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஸ்கூட்டர் ஏப்ரல் 8ல் உயிரிழந்தது. (சாதாரணமாக பூனைகள் 12-18 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன!) இந்தப் பூனைக்கு, பயணங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம்! தனது ஆயுட்காலத்தில், 45 அமெரிக்க மாநிலங்களைப் பார்த்துள்ளது.
பூனையின் குதித்தல் விதி: நமக்கு நேர் எதிர் பூனைகள்! குறைந்த உயரத்தில் இருந்து குதித்தால்தான் அவற்றுக்கு அடிபடும். அதிக உயரத்தில் இருந்து குதிக்கும்போது எந்தவித அடியும் படாமல் தப்பிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். மேலிருந்து குதிக்கும்போது உடலை பாரசூட் போல வளைத்து, கால்களைப் பரப்பி விரித்துக்கொண்டு குதிப்பதே காரணம்.
கிளின்டன் பூனை: முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளின்டன், 'சாக்ஸ்' என்ற பூனையை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் ஓய்வு அறை, பத்திரிகையாளர் அறை என எங்கு வேண்டுமானாலும் சுற்றிவரும் அனுமதியை அது பெற்றிருந்தது!
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக