ரூ.1-க்கு கிடைத்த வரப்பிரசாதம்... இன்று எட்டிப்பிடித்தாலும் கிடைக்காது..!!
90களில் பிறந்த குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள்..!!
90களில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான்... ஏன் தெரியுமா? ஏன் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான். அதாவது, அன்றைய வீடியோ கேம்-ல் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தியது இவர்கள்தான்.
அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அந்த காலம் மறக்க முடியாத சொர்க்கம் என்றே கூறலாம்.
மிட்டாய்கள் :
மிட்டாய்களில் பல வகைகள் இருந்தன... அவைகளில் பல இன்று இல்லாமலேயே போய்விட்டன அல்லது வேறு பெயர்களில் விற்கப்படுகின்றன.
ஆசை மிட்டாய் :
ஒரு ரூபாய்க்கு நான்கு மிட்டாய்கள் என விற்கப்பட்டது. ஆனால் இப்போது இது இருந்த தடமே காணாமல் போய்விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஜவ்வு மிட்டாய் :
ரோஸ் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மிட்டாய் ஒரு ரூபாய்க்கு இரண்டு என விற்கப்பட்டது. சாப்பிட்டவுடன் வாய் முழுவதும் ரோஸ் நிறத்தில் காட்சியளிக்கும்.
இந்த மிட்டாயை வகுப்பறையில் சாப்பிட்டுவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கிய நினைவுகளும் 90-களில் பிறந்த குழந்தைகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம்தான்.

சுத்து மிட்டாய் :
சுத்து மிட்டாய் காசு வடிவத்தில் காணப்படும். நடுவில் ஒரு துளையிட்டு அதில் நூல் இணைக்கப்பட்டு இருக்கும்.

மிட்டாயை காசு கொடுத்து வாங்கி, சாப்பிடாமல் அதை வைத்து சுற்றி நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு சாப்பிட்ட ஒன்றுதான் சுத்து மிட்டாய்.
மம்மி டாடி மிட்டாய் :
சிறு சிறு மிட்டாய்களுடன், கற்கண்டுகள் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். இந்த மிட்டாயும் ரூ1-க்கு விற்கப்பட்ட ஒன்று. நாம் சிறு வயதில் சாப்பிட்ட பின்பு ரசித்து விளையாடிய மம்மி டாடி மிட்டாய்.

மிட்டாய் இருக்கும் கவரில் ஆண், பெண் முகம் இரண்டும் ஒரே படத்தில் இருப்பது போல் காணப்படும். அதை வைத்து மம்மி, டாடி என விளையாடி மகிழ்ந்தனர் அந்த குழந்தைகள்.
எடைக்கல் மிட்டாய் :
இந்த மிட்டாய் எடை கல்லைப் போல் காணப்படும். அதனாலேயே இதற்கு எடைக்கல் மிட்டாய் என பெயர் வந்தது. இது மிகவும் ருசியாகவும் இருக்கும். ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட மிட்டாய்களில் இதுவும் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக