அண்ணல் அம்பேத்காரின் வரிகளிலிருந்து...
******************************************************
என் அறிவுக்கு எட்டிய வரை மதமாற்றத்தால் நேரக்கூடிய எல்லா சிக்கல்களையும் அலசிவிட்டேன்,
விளக்கியும் விட்டேன்.
இந்த ஆராய்ச்சி மிகவும் நீண்டதாக இருக்கலாம்.
இத்தகைய விளக்கமான ஆராய்ச்சி தேவையென்று நான் முதலிலேயே முடிவு செய்து விட்டேன்.
மதமாற்றத்தின் எதிரிகள் என்னென்ன வாதங்கள் முன் வைப்பார்களோ அவற்றிற்க்கு பதில் அளிக்க வேண்டியது என் கடமை.
என் கருத்துபடி மத மாற்றப் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை உணராமல் யாரும் மதம் மாறக் கூடாது.
அதனால்தான் எல்லாவித ஐயங்களுக்கும் தீர்வாக அமையும் இந்தப் பிரச்சினையை இத்தனை விரிவாக அலசினேன்.
என் கருத்து நீங்கள் எவ்வளவு தூரம் ஏற்பீர்கள் என்று எனக்கு தெரியாது,
ஆனாலும் அவற்றை ஆழ்ந்து சிந்திப்பீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
பொது மக்களை திருப்தி செய்வதன் மூலம் அவர்களது செல்வாக்கைப் பெறுவது ஒரு சாதாரண மனிதனுக்கு நன்மை தரலாம்.
ஒரு தலைவன் அந்த வழியை பின்பற்ற முடியாது.
மக்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்து அச்சப்படாமல் ஆதரவைப் பற்றி கவலைபடாமல் அதைத் சொல்பவனே தலைவன் என்பது என் கருத்து.
நீங்கள் விரும்பாவிட்டாலும் சரி,உங்களுக்கு நல்லது எதுவோ அதைச் சொல்வதே என் கடமை.
நான் என் கடமையைச் செய்தாக வேண்டும்.
இதோ இப்போது அதைச் செய்து விடுகிறேன்.
என் முடிவு உங்கள் கையில்!
உங்கள் பொறுப்பை நீங்கள்தான் சுமக்க வேண்டும்.
இந்த மதமாற்றத்தை நான் இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொண்டேன்.
இந்து மதத்தை விட்டு வெளியேறுவதா?
இல்லை நீடிப்பதா? என்பது அதன் முதல் பகுதி.
இந்து மதத்தை கைவிட வேண்டுமானால் எந்த மதத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்? அல்லது ஒரு புதிய மதத்தை உருவாக்குவீர்களா?
என்பது இரண்டாம் பகுதி.
இன்று முதல் பகுதி பற்றி முடிவு செய்தாக வேண்டும்.
அதை முடிவு செய்யாமல் இரண்டாம் பகுதிக்குப் போக முடியாது.
அப்படிப் போவது வீண் முயற்சி.
எனவே நீங்கள் முதல் பகுதியை முடிவு செய்ய வேண்டும்..
இன்னொரு வாய்ப்பை இந்த விஷயத்தில் என்னால் உங்களுக்கு வழங்க முடியாது.
உங்கள் முடிவைப் பொருத்து எனது எதிர்காலத்திட்டத்தை நான் தீட்டுவதாக இருக்கிறேன்.
மதமாற்றத்திற்கு எதிராக நீங்கள் முடிவு செய்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான விடை கொடுத்து விடுவேன்...
அதற்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து கொள்வேன்.
மதமாற்றத்திற்கு ஆதரவாக முடிவுசெய்தால், அந்த மதமாற்றம் அமைப்பு ரீதியாக பெருந்திரளாக இருக்கும் எனறு நீங்கள் உறுதியளிக்க வேண்டும்.
மத மாற்றத்திற்கு ஆதரவாக முடிவு செய்திருந்தால் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி சேரப்போகிற மதத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் முயற்சிகளுக்கு குறுக்கீடு செய்ய மாட்டேன்.
இந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னுடன் ஈடுபட வேண்டும்.
எந்த மதத்தை ஏற்பதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் விசுவாசமாக ஈடுபடுவேன்.
அந்த மதத்தில் மக்களின் நன்மைக்காக உழைக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
நான் சொல்கிறேன் என்பதற்காக உணர்ச்சி வயப்பட்டு என்னை நீங்கள் பின்பற்றி விடக்கூடாது.
உங்கள் அறிவுக்கு அது ஏற்றது என்றால் மட்டுமே நீங்கள் சம்மதம் சொல்லலாம்.
என்னோடு நீங்கள் ஒன்றுபடா விட்டாலும் நான் அதற்காக வருந்தப் போவதில்லை.
இத்துடன் பொறுப்பு தீர்ந்தது என்றுதான் நினைப்பேன்.
நீங்கள் இங்கு எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல பாதையைத் திறந்துவிடும்..
விடுதலை பெறுவது என்று நீங்கள் முடிவு எடுத்தால் உங்கள் வருங்கால சந்ததிகளும் விடுதலை பெறும்...
அடிமையாக இருக்க முடிவு எடுத்தால் உங்கள் எதிர்கால பரம்பரையும் அடிமைத் தனத்திலேயே மூழ்கி்க்கிடக்கும்.
எனவே உங்கள் பொறுப்பு தான்
மிக மிகச் சிக்கலானது,
மிகமிகக் கடினமானது.....
- *அண்ணல்* *அம்பேத்கர்* .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக