தவணை முறையில் வீட்டு மனை வாங்கும்போது, என்ன கவனிக்க வேண்டும் ?
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து மொத்தத் தொகையாக கொடுத்து நிலமோ, வீடோ வாங்கலாம் என நினைப்பவர்கள் குறைவு. ஏனெனில் ஏதாவதொரு வழியில் சிறுக சிறுக சேர்க்கிற பணம் செலவாகிக் கொண்டேயிருக்கும். அதனால் தவணை முறையில் நிலத்தையோ, வீட்டையோ வாங்க நினைப்பவர்களே அதிகம். தவணை முறையில் வீடு வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இப்படி வீட்டுமனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
• தவணைமுறையில் மனை வாங்கும்போது முதலில் இடத்தை நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
• இடத்திற்கான பத்திரத்தை வைத்து மட்டும் முடிவு செய்துவிடாமல், தாய்ப்பத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
• தாய்ப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாரிசுகள் அனைவரும் கையொப்பமிட்டுள்ளார்களா என்பதைக் கவனிக்கவேண்டும்.
• பட்டா, வில்லங்க சான்றிதழ், வரி ரசீதுகள் இவற்றையும் சரிபார்க்கவேண்டும்.
• குறிப்பிட்ட மனை அல்லது நிலத்தின் பத்திரம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா? பத்திரங்களில் உள்ள நிலஅளவுகள் சரியாக இருக்கின்றனவா? அந்த பகுதியின் (ஊராட்சி/நகராட்சி/பேரூராட்சி/ மாநகராட்சி)அனுமதிப் பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
• விளம்பரங்களை அப்படியே நம்பிவிடாமல் மேற்கூறப்பட்டுள்ள அனைத்தையும் அரசு ஆவணங்கள் மூலம் சரிபார்த்துக் கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம்.
• பத்திரப்பதிவு இலவசம், சலுகை விலை, சிறப்புப் பரிசு, இலவசச் சுற்றுலா போன்ற விளம்பர வார்த்தைகளை நம்பி நிலம்/வீடு இவற்றை வாங்கக் கூடாது. அந்த பகுதியின் விலை நிலவரம், உள்கட்டமைப்பு வசதிகள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
• முதலில் ஒரு தெளிவான ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி அதை பதிவு செய்துகொள்வது அவசியம்.
• வாங்குகிற இடம் முன்னர் விவசாய நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
• புறம்போக்கு, கண்மாய், குளம், பிறருக்குச் சொந்தமான நிலங்கள் இவற்றையும் கூட விற்பனை செய்து ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். ஏமாறாமல் இருக்க ஒப்பந்தம் போட்டுக் கொள்வதும், ஆவணங்களை சரிபார்ப்பதும் அவசியம்.
• முதலீடு நோக்கத்திலோ அல்லது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டோ வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் அந்த இடத்தின் அருகில் தற்போதைய வளர்ச்சி எப்படி இருக்கிறது? குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளியில் வளர்ச்சி எப்படி இருக்கும்? விரைவில் வளர்ச்சி அடையுமா? போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் செய்யும்போது
• ஒப்பந்தத்தில் விலை எவ்வளவு? மாதத் தவணை செலுத்த வேண்டியது எவ்வளவு? எத்தனை மாதங்கள் செலுத்த வேண்டும்? இவற்றைக் குறிப்பிட வேண்டும்.
• மனை எண், மனையின் பரப்பளவு எவ்வளவு? என்பதைக் குறிப்பிட வேண்டும்.
• ஒருவேளை கிரையம் செய்யத் தாமதமானால் அத்தனை நாட்களுக்குண்டான வட்டியைத் தரவேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
• ஒருவேளை இரண்டு வருடம் தவணை செலுத்தி அது முடியும் தருவாயில் அந்த இடத்தின் விலை கூடியிருந்தால் அதிகப் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்தலாம். இதனையும் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
பணம் செலுத்தும் போது:
தவணை முறையில் பணம் செலுத்தும்போது வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்துகொள்ளுமாறு இ.எம்.ஐ வசதியைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தப்படுவதோடு, பணம் யாருக்கு செலுத்தப்படுகிறது என்ற விவரங்களையும் வங்கிக் கணக்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மொத்தமாகப் பணம் செலுத்தும் பட்சத்திலும்கூட காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ செலுத்தவும். அதன் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைக்கவும்.
வீடு வாங்கும்போது தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்:
• வீடு வாங்கும்போதும் நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக சில விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
• புரமோட்டர் அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.
ஆவணங்களை சரிபார்ப்பது எப்படி?
• பவர் ஆஃப் அட்டானி கொடுக்கப்பட்டிருக்கிறதா? இடையில் இரத்து செய்யப்பட்டிருக்கிறதா? என்பதை பவர் ஆஃப் அட்டானி கொடுத்தவரைச் சந்தித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
• பதிவு அலுவலகத்திற்கு சென்று பட்டா, சிட்டா, புல வரைபடம், ’அ’ பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். இந்த ஆவணங்களின் ஒளிநகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
• விற்பவர் அந்த நிலத்தின் உரிமையாளரா? சொந்தமாக விற்கிறாரா? அல்லது விற்பனை உரிமை பெற்றவரா? விற்பனை உரிமை பெற்றதின் ஒப்பந்தம் ஆகியவற்றை அறிந்து கொள்வது கட்டாயம்.
தவணை முறையில் வீட்டுமனை வாங்குவோருக்கான எச்சரிக்கை
பெரும்பாலும், ஐந்து ஏக்கரில் பிளாட் போடுவதாக அறிவித்தால், இரண்டு ஏக்கர் மட்டுமே, கிரையம் செலுத்தி வாங்கிவிட்டு, மீத தொகையை, அட்வான்ஸ் போட்டு வைத்து கொள்வார்கள், நம்மிடம் தவணை முறையில் விற்பவர்கள். நம்மிடம், மாதா மாதம் தொகை வாங்கியே, நிலத்தின் உரிமையாளருக்கு செலுத்துகிறார்கள். இது தவிர, agent மூலம் பணம் கட்டும்போது எச்சரிக்கையாக இருக்காவிட்டால், அவர், தவணை scheme போடுபவரிடம், நம் பணத்தை ஒப்படைக்கிறாரா என்று சரி பார்த்து கொள்வது நல்லது.
தவணை முறையில் வீட்டு மனை எனும் பெயரில் ஒரே நிலத்தையே இரண்டு பேருக்கு அல்லது பலருக்கு விற்கிற மோசடிகளும் நடக்கின்றன. தாய்ப்பத்திரம், பத்திரம், பட்டா எல்லாம் சரியாக இருக்கும். தவணை முடிந்த பிறகுதானே பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்படும். அப்போது இன்னொருவரும் அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாடுவார். இதுபோன்ற நேரங்களில் ஆரம்பத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் உங்களுக்குக் கைகொடுக்கும். இதன்மூலம் ஒருவருக்கு மனையைக் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு கட்டியபணத்தைத் தருவதாக சொல்லிவிடுவார்கள். இதனால் இரண்டு மூன்று வருடம் பணம் கட்டி காத்திருந்த கனவு கலைந்துபோவதும் உண்டு. தவணை முறையில் வாங்குவதைவிட மொத்தத் தொகை செலுத்தி வாங்குவதே நல்லது. அதையும் வங்கிக் கணக்கின் மூலம் செலுத்துவது சிறந்தது. அல்லது தவணை முறையில் ஆரம்பித்து, இடையில் காஷ் பிளாட் என்று போட்டால் அதை வாங்கி, மீத தவணையை மட்டும் உடனே கட்டி வாங்கி விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக