நகம் என்னும் கிரீடம் அதிசயமே...
ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். முதல் பாதியில், முகத்திற்கு அழகு சேர்ப்பது, விசாலமான கண்களும், வசீகரமான புன்னகையும் தான்.ஆண்களுக்கு பரந்த மார்பு, பெண்களுக்கு சிறுத்த இடை, ஆண்களுக்கு நீண்ட, சதைப்பற்றான விரல்கள், பெண்களுக்கு நீண்ட, நளினமான விரல்கள், இப்படி கூறிக்கொண்டே போகலாம்.அங்கங்கள் அமைப்பாக இருந்தாலும், அந்தந்த உறுப்புக்கள் செயல்பட வேண்டு என்றால், மனிதன், சிறு சிறு பயிற்சிகளையாவது செய்து வர வேண்டும்.
உச்சி முதல் பாதம் வரை கைகளின் உதவி கொண்டு செய்யப்படும் எந்த ஒரு வேலைக்கும் விரல்களின் பங்களிப்பு அவசியம் இருக்கும்.அந்த விரல்களுக்கு, தற்காப்புக் கேடயமாக விளங்குவது, நகங்கள் தான்.மனிதனுக்கு செயலாற்றும் திறமையைக் கொடுப்பது எதுவென்றால், அழகான விரல்களில் இருக்கும் நகங்கள்தான். நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். விரல்களின் நுனிப்பாகத்தில் எலும்புகள் இருக்காது. நகங்கள்தான் விரல்களுக்குத் தேவைப்படும் உறுதிக்கு உறுதுணையாக விளங்குகின்றன.
நகம் என்பது ஒரு கூர்மையான ஆயுதத்தைப் போன்றது. மனிதனுக்கு மட்டுமல்ல. விலங்குகள், பறவைகள் போன்றவைகள் தங்களின் இரையைப் பிடிப்பதற்கும், சில மிருகங்கள், இரையைக் கிழித்து உண்பதற்கும் மிகவும் உதவி புரிகிறது.
நகம் என்பது என்ன?
தோலானது, 'கெராட்டின்' என்கிற புரதச்சத்தினால் கடினமாகி நகங்களாகிறது. நாம் நகங்களை வெட்டவில்லை என்றால், நம் வாழ்நாள் வரை அவைகளும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
நகங்கள் வளர்வது நம் கண்களுக்குத் தெரியுமா?
நாம் நகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது.ஒருவர் மருதாணி அல்லது நெயில் பாலிஷ் உபயோகித்திருந்தார் என வைத்துக் கொள்வோம். இரண்டு நாட்களில், நகத்தின் கீழ்ப்பாகம் அந்த அறிகுறியே இல்லாமல் இயற்கையான நிறத்தில் இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம், கீழ்ப்பாகத்திலிருந்து வளரும் புது நகத்தில், பழைய நகம் வெளியே தள்ளப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு, கை விரலில், ஒரு நாளில், 0.1 முதல் 0.2 மில்லிமீட்டர் வரையிலும் . கால் விரலில், 0.05 மில்லிமீட்டர் நீளம் வரையிலும் வளர்ச்சி உண்டாகிறது. இந்த வளர்ச்சியானது, ஆரோக்கியம், சூழ்நிலை, தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.பெண்களை விட, ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் வளர்ச்சி கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.நகங்களின் அமைப்பினைப் பார்ப்போம்.
நகங்கள், ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளால் ஆனவை. இவைகளுக்கெல்லாம் அடித்தளத்தில் தான்
நகம் உருவாகும் இடம் , 'நெயில் மாட்ரிக்ஸ்’ என்பது அமைந்துள்ளது ( nail matrix). இந்த நெயில் மாட்ரிக்ஸ், இரத்த நாளங்களின்
மூலம், தேவையான ஊட்டச்சத்தினைப் பெறுகிறது. அவைகளைக் கொண்டு, 'கெராட்டின்’- ஐ உற்பத்தி செய்கின்றது. நகமும் வளரத் தொடங்குகிறது. சிலரின், கட்டை விரலின் கீழ்ப்பாக்கத்தில் பிறைச்சந்திரன் வடிவம் போன்று காணப்படும். அதுதான் நெயில் மாட்ரிக்ஸ் உற்பத்தி செய்த கடினப்படாத தோல் பாகம். மற்ற விரல்களில் பொதுவாகத் தெரியாது.
புதியதாய் வளர்ந்த நகம், பழைய நகத்தை வெளியே தள்ளுகிறது. நாம், வெளியே வந்த அந்த உயிரற்ற நகத்தினை தான் வெட்டித் தள்ளுகிறோம். அதனால் தான் நமக்கு வலிப்பதில்லை. ஒருவரின் நகத்தின் நிறத்தைப் பார்த்தே அவருடைய ஆரோக்கியத்தைப் பற்றி கூற முடியும்.
ஆரோக்கியமான ஒருவருக்கு, நகங்கள் 'பிங்க்’ என்று கூறப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் தான் காணப்படும்.அப்படியல்லாமல், வேறு நிறத்திலோ, வளைந்தோ நகங்கள் காணப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு ஆரோக்கியக் கேடு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.ஏனென்றால், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதால் தான் நெயில் மாட்ரிக்ஸ் கெராட்டினைத் தயாரிக்கவில்லை என்பதை
மறைமுகமாக அறிந்து கொள்ளலாம்.
நெயில் மாட்ரிக்ஸ் என்பது நகங்களுக்கு இதயம் போன்றவை. போதிய அளவு பிராணவாயுவும், ஈரப்பதமும் இல்லையென்றால் உற்பத்தி சரியாக இருக்காது. ஆகையால் நகங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அனாவசியமாக நகத்தால்
சுரண்டுவது, ரசாயனம் மிகுந்த பசையை விரலால் உபயோகப்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை நகப்பூச்சினைத் தவிர்க்கலாம்.நெயில் பெட் என்று கூறப்படும் நகக் கழிவினை அடிக்கடி வெட்டி, சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.நகம்தானே என்று அசட்டையாக இருக்காமல், நகங்களைப் பராமரித்து ஆரோக்கிய வாழ்வுக்கு அடிகோலுங்கள்.
அப்பப்பா..... சாதாரண ஒரு நகத்தில் எவ்வளவு பெரிய தொழிற்சாலையே அடங்கி இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக