ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.
ஒரு பேரங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்.
"ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன். ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.
இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன். என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...
விழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.
சரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன். பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.
ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?
வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா? இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா? பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான். பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை, அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.
இதெல்லாம் சொல்லணும். அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக