வியாழன், 15 ஜூன், 2017

மகளிடம் குழந்தையான தந்தை



மகளிடம் குழந்தையான தந்தை

நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம்.
வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர்.
- இதுதான் அந்த ஓவியக் காட்சி.
இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி!
இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே?
அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது.
அது எப்படி?
இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர்.
சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை.
அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள்.
சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.
கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை.
அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள்.
"எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.
அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள்.
"எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?"
"ஆமாம்!"
"உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?"
"ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள்.
உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள்.
"அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள்.
கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள்.
இந்த சம்பவத்தில் #தந்தைக்கு_மகள்_தாயாகி_விடுகிறாள். #தந்தை_மகளிடம்_குழந்தை_ஆகிவிடுகிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக