செவ்வாய், 13 ஜூன், 2017

பனை ஓலைப்பெட்டியின் மகத்துவம்



பனை ஓலைப்பெட்டியின் மகத்துவம்

🌴 உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமல் காத்த நம் பனை ஓலை பெட்டிகள் நாகரீகத்தின் வளர்ச்சியால் அழிந்து போய்விட்டன.

🌴 நம் அம்மா காலத்தில் எல்லாம் பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறம் ஆகியவற்றிற்கு பயங்கரமான வரவேற்பு இருந்தது. அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது.

🌴 ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும்.

🌴 இதனால் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.

🌴 அதேபோல் அந்த காலத்தில், கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே பார்க்க முடியாது.

🌴 இதன் பயன்பாடு அதிக அளவில் இருந்ததால் பனை ஓலைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருந்தது. இதனால் பனை ஓலை பொருட்கள் தொழில் மிகவும் நன்றாக இருந்தது. இதற்காகவே பனை மரங்கள் கூட வளர்க்கப்பட்டன.

🌴 பனை ஓலைகள் மூலம் முறம், கல்யாண சீர்வரிசைப் பெட்டி, வீட்டின் சுவற்றை சுற்றி அமைக்கப்படும் வேலி, மேலும் இனிப்பு வகைகளை வைக்க பயன்படும் ஓலைப்பெட்டி போன்றவைகள் தயாரித்து பயன்படுத்தப்பட்டன.

🌴 திருவிழாக் காலங்களில் உறவினர்கள், நண்பர்களின் இல்லங்களுக்கு செல்பவர்கள் ஓலைப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்களை விரும்பி வாங்கிச் செல்வார்கள் என்பதால் அனைத்து இனிப்பு வகைகளையும் பனை ஓலைப் பெட்டிகளில் தான் வைத்திருப்பார்கள்.

🌴 பு வோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல் ஓலைப் பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருளும் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தைப் பெற்றது.

🌴 ஆனால் காலத்தின் மாற்றமாக பிளாஸ்டிக் பைகள், அட்டை பெட்டிகள் வரத்தொடங்கின. இவை மிக எளிதாக கையாளக்கூடியதாக இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினார்கள். இவற்றின் வருகை பனை ஓலைப் பெட்டிகளை ஓரம் கட்டி விட்டது.

🌴 பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால் அதில் சு டான பண்டங்களை எடுத்துச் செல்லும்பொழுது அதில் வேதிப்பொருட்கள் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்பட்டு உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்படும் உணவு பண்டங்கள் விரைவில் கெட்டுப் போய்விடும்.

🌴 ஆனால் பனை ஓலைப்பெட்டிகளில் வைக்கப்படும் தின்பண்டங்கள் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. உணவுப்பொருளுக்கு புதிய மணமும், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது.

🌴 பனைமரங்களின் வீழ்ச்சியும், பிளாஸ்டிக் பொருட்களின் எழுச்சியும் தான் இன்று பனை ஓலை பெட்டிகள் அழிவதற்கு காரணமாக அமைந்தன.

🌴 பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மீண்டும் பனை ஓலைப் பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம் பனை மரங்களையும் பாதுகாக்கலாம், உடல் நலத்தையும் காக்கலாம்.

1 கருத்து: