வெள்ளி, 16 ஜூன், 2017

ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!



ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு'

துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும். காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும்  என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.

நம்முடைய முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். அதைப் போன்ற சிறப்புவாய்ந்த கீரை வகைகளை நாம் அதிகம் கண்டுகொள்வதே இல்லை. எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளர்ந்து, எண்ணற்ற நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ அதன் சிறப்புகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...

'துத்திக் கீரை' பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி. இதற்கு 'அதிபலா' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் 'Indian mallow ' என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது. இதன்  காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது  `பணியாரத் துத்தி.’

துத்திக்கீரை  கூட்டு:

துத்திக்கீரை -  200 கி

சின்ன வெங்காயம் -  100 கி

வேகவைத்த துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும். நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான  கூட்டு தயார். இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்.

துத்தியால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்:

மூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக துத்தி இருக்கிறது. துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.

கையளவு துத்திக் கீரையை எடுத்து நீரில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு பாலில் கலந்து குடித்தால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை நீங்கும்.

துத்தி இலைகளை நெய்யில் வதக்கி, சாதத்துடன் கலந்து 40 முதல் 120 நாள்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நிற்கும்.

துத்தி இலையை நீரில் நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் வாய் கொப்பளித்து வந்தால், பற்களின் ஈறுகளில் கசியும் ரத்தம் நிற்கும்.

இந்தக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது 'அதிபலா' என்று அழைக்கப்படுகிறது.

உடலில் எதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால், இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, மஞ்சளுடன் கலந்து பூசிவர புண்கள் விரைவில் குணமாகும்.

இதன் சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கட்டிகள் உள்ள இடத்தில்வைத்துக் கட்டினால் கட்டிகள் உடையும்.

துத்திப்பூச் சாற்றுடன் கற்கண்டு கலந்து குடித்தால், ரத்த வாந்தி நிற்கும்.

துத்தி விதைச்சூரணத்துடன் கற்கண்டு மற்றும் தேன் கலந்து உட்கொண்டால் 'மேகநோய்' குணமாகும்.

இதன் இலைகளை கொதிக்கும் நீரில் வேகவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரைத் துணியில் பிழிந்து, உடல்வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் உடல்வலி குறையும்.
Thanks WhatsApp group.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக