வியாழன், 23 மார்ச், 2017

மாவீரம் விளைந்த தோழர் பகத்சிங், ராஜகுரு,சுகதேவ்…ஆளுமைகள்...




மாவீரம் விளைந்த தோழர் பகத்சிங், ராஜகுரு,சுகதேவ்…ஆளுமைகள்...
“நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். மீண்டும் பிறப்போம், எண்ணற்ற வீரர்களின் உருவில்” இவை பகத்சிங் தூக்கிலேறுமும் தன் தம்பி குல்தாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலேற்றப்பட்டு 82 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நெஞ்சுரமிக்க இவர்கள் உயிர்தியாகம் செய்த இந்நாளில் எண்ணற்ற இளைஞர்கள் இரத்த தானம், மரக்கன்று நடும் விழாக்கள், கருத்தரங்குகள், சமூக பொறுப்புமிக்க உறுதிமொழிகள் எடுத்து பகத்சிங்கையும் அவர்களின் தோழர்களையும் நேசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
சுதந்திர இந்தியாவிற்கு பூரண சுதந்திரம், சுரண்டலற்ற சோசலிச சமூகம் என்ற லட்சியங்களை முன்வைத்து, தேச விடுதலையின் இன்பமே தங்களின் இன்பம் என சுதந்திரப் போரில் ஈடுபட்ட வீரமிக்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சிவவர்மா, பி.கே.தத், சந்திர சேகர அசாத், ஜதீன் தாஸ், துர்கா தேவி, யஷ்பால் மற்றும் தோழர்கள் தீவிரமாக பங்கேற்றனர். அகிம்சை என காந்திஜி புன்னகைத்தபோது மாற்று திட்டத்தின் மூலம் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றையே மாற்றியமைத்தனர், கேளாகாதர்களாக இருந்த பிரிட்டிஷ் பக்கிங்காம் அரண்மனையை அசைத்து பார்த்து இளைஞர்களையும், மாணவர்களையும் சுதந்திர போரில் ஈடுபட வைத்தனர். அதனால் தான் சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்களின் அடையாளமாக இவர்களையே வரலாற்று பக்கங்கள் நிருபிக்கின்றன. ஆனால், இவர்கள் கண்ட கனவுகள் தான் பொய்த்து போனது.
வரலாற்று பிண்ணனி
பகத்சிங் 1907 ஆம் ஆண்டு செப். 27ல் பஞ்சாபில் பிறந்தவர், சுகதேவ் மே மாதம் 17ல் பிறந்தவர், ராஜகுரு 1909 ஆம் ஆண்டு ஆக.2ல் மகாராஷ்டிராவில் பிறந்தார். பகத்சிங் நாட்டுப் பற்றும், விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார், ஆரம்பப் பள்ளி படிப்பை பகத்சிங் சொந்த கிராமமான பங்காவில் நிறைவு செய்தார், ஆரம்பப் பள்ளியில் பயிலும்போது ஒரு நாள் ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களது எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டறிந்தார். ஒவ்வொரு மாணவர்களும் எழுந்து நான் வக்கீலாக போகிறேன், மருத்துவராக போகிறேன், கலெக்டராக போகிறேன் என்றார்கள். ஆனால் இவரோ “நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராட போகிறேன்” என்று சிலிர்க்க வைத்தார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்ணுற்ற பகத்சிங் விடுதலை வேள்வியில் தன்னையும் இணைத்துக்கொண்டு பல்வேறு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். பகத்சிங்கும், சுகதேவும் தேசியக் கல்லூரியில் பயின்ற போது சந்தித்துக்கொண்டனர். சக மாணவர்களோடு இணைந்து சுதந்திரப் போராட்டதில் பங்கேற்றனர். தேசியக் கல்லூரியின் நூலகத்தில் சோசலிச இலக்கியங்களையும், தத்துவங்களையும் கற்றிந்து தன்னை செழுமைப் படுத்திக்கொண்டனர். இன்னொருவர் ராஜகுரு பல்வேறு கொடுமைகளை இளமையில் சந்தித்தவர், நாவல் படித்த காரணத்திற்காக தன் அண்ணனின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெறியேறி உணவுக்கு ஏங்கி நின்றவர், சிரமமப்பட்டு சமஸ்கிருதம் பயின்றவர். கோரக்பூரைச் சேர்ந்த சுதேஷ் என்ற வாரப் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான முனீஸ்வர அவஸ்தியின் தொடர்பால் இந்துஸ்தான் சோசலிச குடியரசுப் படையில் இணைந்தவர், இந்த பிண்ணனியில் தான் பகத்சிங் அவரது தோழர்கள் சோசலிச இலட்சித்திற்காகவும், விடுதலைக்காகவும் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டார்கள்.


இளைஞர் இயக்கம் துவக்கம்:
சுதந்திரப் போராட்டம் எழுச்சியடைந்த காலம்தில் காங்கிரஸ் மற்றும் காந்திஜியின் நடவடிக்கைகளில் நம்பிக்கையின்மையால் இளைஞர்களையும், மாணவர்களையும் இணைத்து1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பு துவக்கப்பட்டது. பகவதி சரண் தலைவராகவும், பகத்சிங் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேசியக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பகவதி சரணும், பகத்சிங்கும் உணர்ச்சிமிக்க உரையாற்றினர். அவ்வியக்கத்தின் அறிக்கையில் சாதி ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், சுரண்டல், சமத்துவமின்மை, வறுமை ஆராய்ந்து வெளியிடப்பட்டு அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது. நவ ஜவான் பாரத் சபா வெகு விரைவில் நாடு முழுவதும் பிரபலமானது. பஞ்சாப், டெல்லி ஐக்கிய மாகாணங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்றது திகழ்ந்தது. பின்னர் பகத்சிங் நாடு முழுவதும் சிதறிக் கிடந்த பல்வேறு புரட்சி இயக்கங்களை எல்லாம் ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பல மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப்படையை துவக்கி சந்திர சேகர அசாத் என்னும் அசாத்திய இளைஞரை தலைவராக கொண்ட படையும் உருவாக்கப்பட்டது. துவங்கியவுடன் குடியரப்படை பல்வேறு அரசியல் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்து. அதில் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும், அவற்றிற்கு ஆதரவாக உலக தொழிலாளர்களின் ஆதரவு இவையெல்லாம் வீரியமாய் நடைபெற்று வருவதை இவ்வியக்கம் கூர்மையோடு கவனித்து வந்தது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை பிரிட்டிஷ் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவும், அடக்குமுறைச் சட்டங்களை பாராளுமன்றத்தில் சட்டமாக்கும் முயற்சியை முறியடிக்கவும் பாராளுமன்றத்தின் உள்ளே குண்டு வீச படை திட்டமிடுகிறது. குண்டு வீசுவதன் நோக்கம் தனிநபர்களை கொல்வதற்காக அல்ல, மாறாக மக்களின் குரலை ஓங்கி ஒலிப்பதற்காகவே என அவர்கள் வெளியிட்ட அறிக்கை தெளிவுபடுத்தியது. பாராளுமன்றத்தில் குண்டு வீசுவதற்கு பகத்சிங்கும், பி.கே. தத்தும் தேர்வு செய்யப்படுகிறார்கள். திட்டமிட்டபடி குண்டு வீசப்படுகிறது, துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவற்றில் அரசின் அடக்குமுறை சட்டங்களான, தொழில் பாதுகாப்புச் சட்டம், கருத்து சுதந்திர பறிப்பு சட்டம் இயற்றுவதை கைவிட வேண்டும் என்ற தொழிலாளர்கள் மற்றும் வெகுமக்களின் கோரிக்கை முன்னெடுத்த செல்லப்பட்டது. பின்னர் பகத்சிங்கும், பி.கே. தத்தும் கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
*சைமன் வருகையும் – லாலா லஜபதிராய்படுகொலையும்:*
1928 ஆம் ஆண்டு ஜனநாயக சட்டமன்ற ஆட்சியை விரிவாக்க சர் ஜான் தலைமையில் ஒரு குழுவை ஆங்கில அரசு அமைத்தது. அக்குழு பிப் 7ல் பம்பாய் துறைமுகம் வந்தது. அதை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விட்டது. அதில் சைமனே திரும்பிப் போ, ஏகாதிபத்தியம் ஒழிக, சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கங்கள் ஒலிக்கிறது. தொடர்ச்சியாக அக்குழு அக்டோபர் 1930ல் லாகூர் வந்நது. இந்த குழுவின் வருகையை எதிர்த்து லாலா லஜபதிராய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் போலீஸ் லாலாஜி மீதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் லாலாஜி நிலைகுலைந்து போய் நவ. 17ஆம் நாள் உயிர் இழந்தார். சுதந்திர உணர்வோடு ஆங்கிலேயே அரசுக்கு எதிராய் சமர்புரிந்த லாலாஜியின் மறைவு பொதுமக்கள் மற்றும் தோழர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. லாலாஜியையும், பொதுமக்களையும் தாக்கிய சாண்டர்சை கொலை செய்ய வேண்டும் என இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுப் படையின் மத்திய நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது, இந்த நிகழ்வை செயல்படுத்த சந்திர சேகர அசாத், பகத்சிங், ராஜகுரு, தீர்மானிக்கப்படுகிறார்கள். காவல் நிலையம் அருகில் சாண்டர்ஸ் வந்தபோது திட்டமிட்டபடி கொலை செய்யப்படுகிறார், இதனால் வெறுப்புற்ற பிரிட்டிஷ் அரசு நாட்டையும், உலகத்யும் உறைய வைத்த லாகூர் சதிவழக்கை பின்னி தோழர்களை சிறையிலடைத்தது.
சிறை தண்டனையும் அறிவுஜீவிகளும்
1930 அக். 7ஆம் தேதி அன்னிய ஆட்சியின் நீதிமன்றம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவுக்கு மரண தண்டனையும், கிஷோரிலால், மகாவீர் சிங், விஜயகுமார் சிங், சிவவர்மா, கயாபிரசாத், ஜெயதேவ், கே. தத் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், குந்தன்லாலுக்கு ஏழாண்டும், பிரேமதத்துக்கு மூன்றாண்டும் சிறை தண்டனையும் வழங்கியது. இவற்றை எதிர்த்து தோழர்கள் மேல்முறையீடு செய்யவில்லை புன்னகையுடனும், புரட்சிகர குணாம்சத்துடனும் ஏற்றுக்கொண்டனர். லாலாஜியை கொலை செய்தவர்களை கொன்றபோது ஆனந்த கண்ணீர் வடித்த பொதுமக்கள், இத்தீர்ப்பைக்கண்டு இரத்தக்கண்ணீர் வடித்தனர். நிரம்பியிருந்தவர்களின் வாழ்த்து கோஷங்களுடன் நீதிமன்றத்திலிருந்து பார்ஸ்டல் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர், தீர்ப்புக்கு எதிராக நாட்டுமக்கள் கடுமையான போராட்டங்களை நடத்துகிறார்கள். தோழர்கள் சிறையில் புத்தகங்கள், நாளிதழ்கள் எழுதுகோல்கள் கேட்டும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள். ஏற்கனவே ஜதீன் தாஸ், மகாவீர்சிங்கின் உண்ணாவிரத உயிரிழப்பால் பல்வேறு சிரமங்களுக்கு பகத்சிங் ஆட்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி காலங்களில் அவர்களை காண்பதற்கு உறவினர்களுக்கு அனுமதியில்லை என சிறை அதிகாரிகள் மறுத்தனர். முழுமையான சுதந்திரம் குறித்து சிந்தித்த இவர்கள் அரசியல், கடவுள், மதம், மொழி, கலை இலக்கியம், நடப்பு நிகழ்வுகள் என பல்வேறு நூல்களை கற்றறிந்தவர்கள், பகத்சிங் 151 புத்தகங்களை சிறையில் படித்து, 6 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு, மரணத்திற்கான நுழைவு வாயில் என 4 புத்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சிறைக்கு வெளியே இருந்த போது பகத்சிங் கிர்த்தி என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது மார்க்ஸ், ஏங்கல்ஸ், சோசலிச நூல்களை கற்றிருந்தார். சிறிய வயதில் பகுத்தறிவால் மலர்ந்திருந்தார். அதனால் தான் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற புத்தகத்தை அவரால் தெளிவாக எழுத முடிந்தது. இதனை தமிழகத்தில் ப.ஜீவானந்தம் மொழிபெயர்க்க பெரியார் குடியரசு இதழில் வெளியிட்டார்.


*தூக்குமேடை :*
1931 மார்ச் 24 தூக்கு தண்டனை தீர்மானிக்கப்படுகிறது. கடுமையான நெருக்கடிகள், போராட்டங்கள் காரணமாக யாருக்கும் தெரியாமல் மார்ச் 23 மாலையே தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர். சிறை அதிகாரிகள் பகத்சிங் அறையை தட்டுகிறார்கள், அப்போது பகத்சிங் லெனினின் அரசும், புரட்சியும் புத்தகத்தோடு உறைந்து கிடக்கிறார், ஒரு புரட்சியாளனோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் என பதில் கொடுக்கிறார். பிறகு மூவரும் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூக்குமேடையில் நின்று கொண்டு பகத்சிங் “நாங்கள் எத்தனை முறை பிறந்தாலும் நாட்டின் விடுதலைக்காக போராடிக் கொண்டே இருப்போம்” என வீராவேசமான வார்த்தைகளோடு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் அதிருகிறது. தூக்கிலிடபட்ட பகத்சிங், சுகதேவ்க்கு வயது 23, ராஜகுருவுக்கு 24, தோழர்கள் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான், ஆனால் பல துறைகளில் கவனம் செலுத்தியதோடு அறிவுஜீவியாகவும் வாழ்ந்தார்கள். வாழ்வின் வசந்தத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்ட இவர்களின் கனவு பொய்த்துபோனது தான் மிச்சம், சுதந்திர காற்றை சுவாசிக்க நினைத்த இவர்களால் அவற்றை காண முடியவில்லை, இவர்களின் இலட்சியங்களும், கனவுகளும் ஆட்சியாளர்களால் கரையவிடப்பட்டுள்ளன, ஏராளமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், கல்வி பெற முடியாமலும், சுகாதாரம், குடிநீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர். சாதி மோதல்களும், வகுப்பு வாதங்களும் தலைவிரித்தாடுகின்றன தவிர தீர்ந்தபாடில்லை எவ்வாறிருந்தாலும் என்றைக்காவது அவர்களின் தூக்கு கயிற்றுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக