வியாழன், 23 மார்ச், 2017

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் மார்ச் 23,



தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் மார்ச்   23,

தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் அசோகமித்திரன் சென்னையில் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அசோகமித்திரனின் உயிர் பிரிந்தது.

ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் பிறந்தவர் (1931) அசோகமித்திரன். இவரது இயற்பெயர் ஜ.தியாகராஜன். தந்தை, ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் திடீர் மரணத்துக்குப் பின் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார். 1956களில் எழுதத் தொடங்கினார்.

1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். 'அசோகமித்திரன்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக் கணக்கான கட்டுரைகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனப் படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார். அசோகமித்திரனின் படைப்புகள் பலவும் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கணையாழியில் ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 'ஃபோர்டீன் இயர்ஸ் வித் பாஸ்', 'தி கோஸ்ட் ஆஃப் மீனம்பாக்கம்', 'ஸ்டில் ப்ளீடிங் ஃபிரம் தி வூண்ட்' உள்ளிட்ட இவரது ஆங்கில நூல்கள் மிகவும் பிரபலம்.

செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட இவரது ‘18வது அட்சக்கோடு’ என்னும் நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லிம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது. 'நாடகத்தின் முடிவு', 'வாழ்விலே ஒரு முறை', 'காலமும் ஐந்து குழந்தைகளும்', 'பிரயாணம்', 'தண்ணீர்', 'இன்று', 'மானசரோவர்', 'ஒற்றன்', 'ஆகாசத் தாமரை', 'விடுதலை' முதலான இவரது பல படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

சாகித்ய அகாடமி விருது, டால்மியா மத நல்லிணக்க விருது, தேவன் விருது, திரு.வி.க. விருது, சாரல், இலக்கியச் சிந்தனை, அக்ஷரா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நோபல் பரிசு பெறத்தக்க எழுத்தாளர் என விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தில் முக்கியமான பங்களிப்பை வழங்கி வந்த அசோகமித்திரன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக