செவ்வாய், 14 மார்ச், 2017

காரடையான் நோன்பு, மாங்கல்ய பலம் தரும் அற்புதமான நோன்பு




காரடையான் நோன்பு, மாங்கல்ய பலம் தரும் அற்புதமான நோன்பு

வி ரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் அமைய வேண்டியும் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு ஆகும். மாசி மாத முடிவில் பங்குனி மாத தொடக்கத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலி கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் கட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர்.
காரடையான் நோன்பு– மாங்கல்ய பலன் தரும் விரதம் எனவும், தீர்க்க சுமங்கலி வரம் அருளும் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்பை சாவித்திரி விரதம் என்றும், காமாட்சி விரதம் எனவும் அழைப்பர்.
பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்துச் சென்றார். சாவித்திரி அவனை தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும். இது காரடையான் நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோன்புக்கு காரணமான சாவித்திரியின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியம்.
அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி. இவள் ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது எதிரிகளால் நாடு இழந்து அங்கு வசித்து வந்த த்யுமற் சேனன் என்ற பார்வையற்ற மன்னரின் மகனான சத்தியவானை சந்தித்தார். பெற்றோருக்கு அவர் செய்த பணிவிடை சாவித்திரியை கவர்ந்தது. அவள் சத்தியவானை மணமுடிக்க விரும்பினாள்.
தனது விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். அவரும் மகிழ்ச்சி அடைந்து சத்தியவானின் ஜாதகத்தை பார்த்த போது அவருக்கு இன்னும் 1 வருடமே ஆயுள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்திரியின் தந்தை வேறு மாப்பிள்ளை பார்க்கலாம் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி தனது முடிவில் பிடிவாதமாக இருந்து சத்தியவானையே திருமணம் செய்தாள்.
கணவரின் ஆயுள் முடிவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக சாவித்திரி ஒரு விரதத்தை தொடங்கினாள். இரவும், பகலும் கண் விழித்து அன்ன ஆகாரமின்றி கடும் விரதம் இருந்தாள். அன்று சத்தியவான் பெற்றோருக்கு பழம் பறித்து வருவதற்காக காட்டிற்கு செல்ல கிளம்பினான்.
அவனுடன் தானும் வருவதாக கூறி சாவித்திரியும் சென்றாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. திடீரென அவன் தலைவலிக்கிறது என்று கூறி கீழே விழுந்தான். அவனை சாவித்திரி தாங்கி பிடித்து தனது மடியில் சாய்த்துக் கொண்டாள்.
அப்போது அங்கே பாசக்கயிற்றுடன் எமன் தோன்றினான். நீங்கள் யார்? என்று சாவித்திரி கேட்டாள். அதற்கு எமதர்மன், பெண்ணே! உன் கணவரின் ஆயுள் முடிந்து விட்டது. பதிவிரதையானதால் உனது கண்களுக்கு தெரிந்தேன் என கூறிவிட்டு சத்தியவானின் உயிரை பறித்துக் கொண்டு கிளம்பினான். சாவித்திரியும் எமனை பின் தொடர்ந்து சென்று நண்பரே! சற்று நில்லுங்கள் என கூறினாள். இதைக்கேட்டு திடுக்கிட்ட எமன் நான் உனது நண்பனா? என வியப்புடன் கேட்க, அதற்கு ஒருவன் மற்றொருவருடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக் குரியவர்கள் ஆகிறார்கள் என பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் நான் உங்களை பின் தொடர்ந்து வந்தேன். நீங்கள் என் நண்பர் ஆவீர்கள் என சாவித்திரி பதில் அளித்தாள். இதைக்கேட்டு எமன் புன்முறுவலுடன் அழகாக பேசும் உனக்கு பாராட்டுகள். உனக்கு வேண்டும் வரங்களை தருகிறேன். உன் கணவனின் உயிர் தவிர வேறு எதையாவது கேட்டு பெற்று கொள் என்றார். அதற்கு சாவித்திரி தர்ம மகாராஜா மிகவும் நன்றி. என் மாமனாருக்கு பார்வை தெரிய வேண்டும். என் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை. அவருக்கு நூறு குழந்தைகள் வேண்டும். மேலும் எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும் என்றாள்.
நீ கேட்ட வரத்தை தந்தேன். இனியும் என்னை பின் தொடர£மல் போய்விடு என்றார் எமன். சாவித்திரி மீண்டும் எமனை பின் தொடர்ந்தாள். இதனால் கோபமடைந்த எமன் ‘வேறு என்ன வேண்டும்’ என கேட்க, அதற்கு சாவித்திரி ‘தர்மராஜாவின் வாக்கு தப்பாது. எனக்கு 100 குழந்தைகள் பிறப்பதாக வரம் தந்தீர்கள். என் கணவன் இல்லாமல் எப்படி குழந்தை பிறக்கும்?’ என்றாள். இதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பிக் கொடுத்து வாழ்த்தினார்.
காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பவர்களுக்கு தீர்க்காயுசு கிடைப்பதாக ஐதீகம்.
விரதம் இருப்பது எப்படி?
காரடையான் நோன்பன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும்.
ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணையுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணையுடன் விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாத்தி, பின்னர் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும். பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம்.
நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை, தீபம் சுடர்விட்டு எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.





காரடையான் நோன்பு, மாங்கல்ய பலம் தரும் அற்புதமான நோன்பு. தீர்க்க சுமங்கலியாகத் திகழவேண்டும் என்பது திருமணமான எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. அந்த பாக்கியத்தை அடைவதற்காக சுமங்கலிப் பெண்கள், ஏன், கல்யாணம் ஆக வேண்டிய பெண்களும் மேற்கொள்ள வேண்டிய விரதம்தான் இது.
எப்படி இந்த விரதத்தை மேற்கொள்வது?
அதற்கு முன் இந்த விரதம், கடைபிடிக்கப்பட்டு வருவதற்கு ஒரு கதை இருக்கிறது. அதை முதலில் பார்ப்போம். அஸ்வபதி என்ற பெயரில் ஒரு மன்னர் இருந்தார். அவருடைய பெண், சாவித்ரி. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க மன்னர் விரும்பினார். அதற்காக ஒரு சுயம்வரம் நடத்தினார். ஆனால், அந்த சாவித்ரிக்கு சுயம்வரத்தில் கலந்துகொண்ட எந்த மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை. சுயம்வரத்துக்கு வந்த இளவரசர்களும் தாம் அவளுக்குச் சமமாக மாட்டோம் என்று கருதி தாமே ஒதுங்கிவிட்டார்கள்.
அதனால் அஸ்வபதி பெரிதும் வருத்தமுற்றார். தன் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை யாரோ என்ற கவலை அவர் மனதை அரித்தது. ஆனால், யாருமே சரிப்பட்டு வராத நிலையில், சாவித்ரி தனக்கேற்ற மணாளனைத் தானே தேடிக்கொள்ளப் புறப்பட்டாள். அவளுடைய உள்ளுணர்வு அவளை வழி நடத்தியது. அதன்படி அவள் அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குச் சென்றாள். அங்கே சத்யவான் என்ற ஒரு மரம் வெட்டியைப் பார்த்தாள்.
அவனைப் பார்த்த கணத்திலேயே அவன்தான் தன் கணவன் என்று சாவித்ரி தீர்மானித்துவிட்டாள். அந்த சத்தியவான் சால்வ நாட்டு மன்னனுடைய மகன். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால் மன்னன், தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டுக்குத் தப்பி ஓடிவந்து இங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தான். அரண்மனைக்குத் திரும்பிய மகள், தான் சத்யவானைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியபோது அஸ்வபதி மிகவும் வேதனைப்பட்டார்.
ஆனால், அவன் விதிவசத்தால் இப்போது மரம் வெட்டியாக இருப்பதையும், அவன் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன்தான் என்ற உண்மையையும் தெரிந்துகொண்டு மன நிம்மதி அடைந்தான். சத்தியவானுக்கே சாவித்ரியை திருமணம் முடிக்க முன்வந்தான். ஆனால், இந்தக் கல்யாணத்திற்கு ஓர் இடையூறு வந்தது. அதாவது, சத்யவான் இன்னும் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பான் என்று திருமணம் பற்றிப் பேசும்போது அரச குடும்பத்தின் ஆஸ்தான குருவான ஒரு முனிவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதுவரை தீர்க்கதரிசனமாக அவர் சொன்னவை எல்லாமே சரியாக நடந்துவந்துகொண்டிருந்ததால் அனைவருக்கும், முக்கியமாக மன்னனுக்குக் கலக்கமாக இருந்தது. ஆனாலும் சாவித்ரி தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அஸ்வபதியும் வேறு வழியில்லாமல் அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். திருமணம் நடந்தேறியது. சம்பிரதாயப்படி மனைவி கணவனுடன்தானே தங்கவேண்டும்? ஆகவே, சாவித்ரி, கணவனுடன் காட்டுப்பகுதிக்கே போய் வசித்தாள்.
அந்தக் காட்டுப் பகுதியில் அரசகுமாரிக்கு எந்த சௌகரியமும் கிடைக்காதே, அதோடு அவள் கணவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருடம்தான் என்ற சங்கடமும் பிற அனைவருக்கும் நாளுக்கு நாள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால், சாவித்ரியோ தனக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தாள். எதிர்பார்த்தபடியே ஒரு வருடம் முடிந்ததும் சத்யவான் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.
பொதுவாக யார் கண்ணிலும் படாமல் வருவதுதான் அவன் வழக்கம். ஆனால், அவன் வருவது சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது. யமன் தன் கணவரை தன்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத்தான் வந்திருக்கிறான் என்பது புரிந்ததும் அவள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். யமன் சத்யவானுடைய உயிரை எடுத்துக்கொண்டு வானுலகம் போக ஆரம்பித்தபோது, சாவித்ரியும் கூடவே ஓடிவந்தாள்.
யமன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் சாவித்ரி விடவில்லை. சரி, இவளுக்கு ஏதாவது வரம் கொடுத்து இப்போதைக்கு இவளிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று யமன் கருதினான். உடனே, ‘நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். ஆனால், உன் கணவனுடைய உயிரை மட்டும் திரும்பக் கேட்காதே’ என்றான். உடனே சாவித்ரியும், ‘சரி, எனக்கு ஒரே ஒரு ஆசைதான்.
என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கவேண்டும்,’ என்று கேட்டாள். நல்லவேளை, தன் கடமையில் இவள் குறுக்கே வரவில்லை என்று ‘நிம்மதி’ கொண்ட யமன் அந்த வரத்தைத் தந்தான். ‘அப்படியென்றால் என் கணவனை எனக்குத் திருப்பித் தா’ என்று சாவித்ரி கேட்டாள். திடுக்கிட்டான் யமன். கடமை உணர்விலேயே தான் ஒன்றி இருந்துவிட்டதில் அவள் கோரிய வரத்தின் பின்விளைவை அவன் எதிர்பார்க்கவில்லை.
அவன் கொடுத்த வரம் பலிக்கவேண்டுமென்றால், அவளுக்குக் குழந்தை பிறக்கவேண்டும்; அப்படி குழந்தை பிறக்க, அவளுடைய கணவன் வேண்டுமே! வேறு வழியில்லாமல் சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன். சாவித்ரிக்கு இப்படி ஒரு தைரியமும், யமனையே பின்பற்றிப் போகக்கூடிய அருளும் கிடைத்ததற்கு அவள் மேற்கொண்டிருந்த காரடையான் நோன்புதான் காரணம்.
ஆமாம், சத்யவானின் ஆயுள் பற்றிச் சொன்ன அரச குருவிடமே போய், இந்த விதியை மாற்ற இயலாதா என்று மனம் உருகி வேண்டிக் கேட்டாள். உடனே முனிவர் அவளுக்கு காரடையான் நோன்பு பற்றி விவரம் சொல்லி, அதை ஒரு வருடம் அவள் தீவிரமாகக் கடைபிடித்து வந்தாளானால் ஒருவேளை அந்த விதி மாறலாம் என்று சொல்லி ஆசிர்வதித்தார். அந்த விரதத்தை சாவித்ரி முறையாகக் கடைபிடித்துத் தன் மாங்கல்ய பலத்தைக் காப்பாற்றிக்கொண்டாள்.
இந்தப் புராண சம்பவத்திலிருந்துதான் தன் கணவனின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டு சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற கணவனும் அவளுடன் நீண்டநாள் வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பத்தை நடத்திச் செல்வான் என்பது ஐதீகம். இந்த விரதத்தை காமாட்சி விரதம் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அம்பிகை காமாட்சியும் இப்படி ஒரு விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள்.
காஞ்சித் தலத்தில், கம்பா நதிக்கரையில் மணலால் ஆன சிவலிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து தியானத்தில் ஆழ்ந்தாள். கூடவே, நதி பெருக்கெடுத்துத் தான் பிடித்துவைத்திருக்கும் லிங்கத்தை அழித்துவிடுமோ என்ற அச்சமும் தோன்றியது. உடனே, காரடையான் நோன்பை மேற்கொண்டாள். அதாவது தெய்வமே மனித ரூபத்தில் இப்படி விரதம் மேற்கொண்டு மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது!
அவ்வாறு காமாட்சி அம்மன் மேற்கொண்ட விரத மகிமையால் சிவலிங்கம் காப்பாற்றப்பட்டது. ஆமாம், நதி வெள்ளமாய்ப் பெருகி வந்தபோதும், சிவலிங்கத்தை நெருங்காமல் சென்றுவிட்டது. விரதத்தை முடித்த அவள் முன்னால் சிவபெருமான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதுதான் காமாட்சி விரதம்.
சரி, இந்த விரதத்தை எப்படி மேற்கொள்வது?
காரடையான் நோன்பு அன்று சுமங்கலிப் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளுங்கள். பிறகு பூஜையறையில், தாம் மேற்கொள்ளும் விரதம் நல்லபடியாக நடந்தேறவேண்டுமென விநாயகரை பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். ஒரு சொம்பை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, அதனுள் நல்ல நீரை விட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.
ஒரு தேங்காயை எடுத்து, அதற்கு மஞ்சள் பூசி, ஒரு குங்குமப் பொட்டையும் வையுங்கள். சொம்பின் வாய்க்குள் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவே இந்த தேங்காயை குடுமி மேலே பார்த்தபடி வையுங்கள். இதுதான் பூஜைக் கலசம். பூஜையறையிலே ஒரு கோலம் போட்டு அதுக்கு மேலே இந்தக் கலசத்தை வைக்கலாம். இப்போது கலசத்துக்குப் பூ போட்டு வணங்குங்கள். கழுத்தில் கட்டிக்கொள்ளத் தோதாக சற்றே தடிமனான கயிறை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
மஞ்சள் குங்குமம், பூஜா திரவியங்கள் விற்கக்கூடிய கடைகளில் இது மஞ்சள் கயிறாகவே கிடைக்கும். சில புரோகிதர்களும் கைவசம் வைத்திருப்பார்கள். பிறகு, வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் எண்ணிக்கைப்படி ஆளுக்கு ஒன்றாக இப்படி மஞ்சள் சரடைத் தயார் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொரு சரடு நடுவிலேயும் ஒரு பூவை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள்.
இந்த விரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயாரித்து, கூடவே வெண்ணெயையும் வைத்துக் கொள்ளுங்கள். (இந்தக் காரடை மற்றும் வெல்லடையைத் தயாரிக்கும் விதத்தை இந்த இதழில், ‘பிரசாதம்’ பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்) இப்படித் தயாரித்த வெல்ல அடை, உப்பு அடை இரண்டையும் ஒரு வாழை இலையில் வைத்து, அடைகளுக்கு மேல் கொஞ்சம் கெட்டி வெண்ெணயையும் வைத்து அப்படியே அந்த கும்பத்துக்கு முன்னால் படையுங்கள்.
கூடவே, வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாவற்றையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கும் அம்மனை நோக்கி, ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவி’ என்று மனமுருகச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். கூடவே உங்களுக்குத் தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் சொல்லலாம்.
இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி, பூஜையை முடித்ததும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் செய்யுங்கள். மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள். பிறகு காரடை, வெல்லஅடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுங்கள். அடுத்து, உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடை என்று கொடுத்து உபசாரம் செய்யுங்கள். அவர்களுடைய மன சந்தோஷம் உங்களுடைய மாங்கல்யத்தை மேலும் பலமுள்ளதாக்கும்.
இந்த விரதத்தை ஒட்டி, ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று சொல்வார்கள். அதாவது, மாசி மாதத்தில் வரும் இந்த காரடையான் நோன்பு நாளன்று உங்களுடைய பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச்சரடை மாற்றிக்கொள்ளலாம். (இந்த இதழில் தெளிவு பெறு ஓம் பகுதியில் விளக்கம் காணலாம்) மாங்கல்ய பலத்தை அதிகரிக்கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளும் இந்த நாளைவிட, தாலியை புதுப்பித்து மாற்றிக்கொள்வதற்கு வேறு நல்லநாள் இருக்க முடியுமா என்ன?
ஆனால், விரதம் இதோடு பூர்த்தியாகிவிடவில்லை. நைவேத்யம் செய்த அடைகளைக் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் ஒரு பசுமாட்டுக்கு அவற்றைக் கொடுத்து அந்தப் பசுவையே அம்மனாக நினைத்து வழிபடுங்கள். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் சமயத்தில் (இந்த வருடம் மார்ச் 14ம் தேதி) இந்த விரத பூஜையை மேற்கொள்வது வழக்கம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை காரடையான் நோன்பு அன்று துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.
சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா
பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத
ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம்
தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீ
முபாஸே
பொதுப்பொருள்: சந்திரனைத் தன் தலைமேல் ஆபரணமாகத் தரித்தவளே, அழகிய திருமுகத்தையுடையவளே, சஞ்சலமடைந்தோர் மனவேதனையைக் கடைக்கண் பார்வையால் விலக்குபவளே, குந்தபுஷ்பம் போல் பேரழகுடையவளே, ஸ்தனபாரத்தினால் வணங்கிய சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, கவிஞர் கூட்டத்தின் வாக்கிற்கு கல்பவல்லியாய் திகழ்பவளே, காமாக்ஷி தாயே நமஸ்காரம். முடிந்தவர்கள் காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மனை இந்நாளில் வணங்கலாம்; இயலாதவர்கள் வீட்டருகே இருக்கக்கூடிய சிவன் கோயிலில் அம்பிகையை தரிசிக்கலாம்.



காரடையான் நோன்பு உப்பு அடை செய்வது எப்படி?
காரடையான் நோன்பு உப்பு அடை, இனிப்பு அடை என இரு வகையான பதார்த்தங்களை காரடையான் நோன்பின் போது படைப்பது வழக்கம்.
இனி காரடையான் நோன்பு உப்பு அடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு (பதப்படுத்தியது) – 1 கப்
காராமணி (தட்டை பயிறு) – ¼ கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – ½ கப்
தண்ணீர் – 2 கப்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பச்சரிசி மாவினை பதப்படுத்தும் முறை
முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனை வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பச்சரிசி
தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின் அதனை வாயகன்ற பாத்திரத்தில் மாவினைப் போட்டு வறுக்கவும்.
வறுத்த பச்சரிசி மாவு
நன்கு வறுத்தபின் அதனை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும்.
சல்லடையின் மேற்புறத்தில் உள்ள கப்பியை மிக்ஸியில் போட்டு சலித்துக் கொள்ளவும். இதுவே மாவினை பதப்படுத்தும் முறையாகும்.
காராமணியை (தட்டைப்பயறு) வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும்.
வறுத்த தட்டைப் பயறு (காராமணி)
பின் அதனை தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும்.
பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக்கவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
தாளிக்கும் போது
பின் அதனுடன் அரைத்த இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கும் போது
வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் தேவையான உப்பினைச் சேர்த்து தள தள என கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது
பின் அதனுடன் குழைய வேக வைத்த காராமணி, வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின் அதனுடன் பதப்படுத்திய பச்சரிசி மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
கொதித்த நீரில் அனைத்துப் பொருட்களையும் சேர்த்ததும்
மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும்.
சரியான பதத்தில் மாவு
அதனை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது மாவுக்கலவையில் சிறுஉருண்டை எடுத்து வடை போல் தட்டவும். இவ்வாறே எல்லா மாவினையும் தட்டவும்.
வடைகளாகத் தட்டி வைத்த போது
இந்த வடைகளை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காராடையான் நோன்பு உப்பு அடை தயார்.
சுவையான காரடையான் நோன்பு உப்பு அடை
இதனை சாவித்திரி விரத வழிபாட்டில் பயன்படுத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வேக வைத்த காராமணியை மிக்ஸியில் லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காயினை பற்களாகக் கீறிப் போட்டு உப்பு அடை தயார் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக