சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்!
🏯 கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது, தாணுமாலயன் கோவில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவில் தாணுமாலயன் கோவில் என அழைக்கப்படுகிறது.
தாணுமாலயன் கோவில் வரலாறு :
🏯 அத்திரி முனிவரும், அவருடைய இல்லத்தரசியும், கற்புக்கரசியுமான அனுசுயாவும் ஞானாரண்யம் எனும் பழம்பெயர்பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர்.
🏯 இந்நிலையில், அத்திரி முனிவர் இமயமலை சென்றார். அப்போது சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் அனுசுயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து, அவருடைய ஆசிரமத்திற்கு வந்து உணவு தருமாறு வேண்டினர்.
🏯 அனுசுயாவும் உணவு படைக்க தொடங்கினார், அப்போது மூவரும், ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று கூறினர்.
🏯 இதைக் கேட்டு திடுக்கிட்ட அனுசுயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தௌpத்தார். அவர்கள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு அந்தப் பச்சிளங்குழந்தைகளுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டி தூங்க செய்தாள்.
🏯 தங்கள் கணவர்கள் பச்சிளங் குழந்தையாக மாற்றப்பட்டதை அறிந்த மூவரின் தேவியரும் அங்கு வந்து அனுசுயாவிடம், தங்கள் கணவர்களை பழைய உருவிற்கு மாற்றி தர வேண்டினர்.
🏯 தேவியர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய அனுசுயா முப்பெரும் கடவுளுக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்திரி முனிவரும் அனுசுயாவோடு சேர்ந்து, மும்மூர்த்திகளின் காட்சியைப் பெற்றார். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டுள்ளது என்கிறது இதன் தல வரலாறு.
🏯 அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.
🏯 இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர்.
🏯 சிவன்(தாணு), விஷ்ணு(மால்), பிரம்மா(அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோவில் சிறப்பு அம்சங்கள் :
🏯 பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த திருத்தலத்திற்கு உள்ள+ர் பக்தர்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் வந்து குவிகின்றனர்.
🏯 இந்த தலத்தில் தேவேந்திரன் உடல் சுத்தி (தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் பெற்று திகழ்கிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
🏯 திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி, உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
🏯 இங்குள்ள 18 அடி உயர மிகவும் பழமையான பிரமாண்டமான அனுமன் சிலை மிகவும் அழகானது. அதேபோல, விநாயகர் பெண் உருவில் காட்சியளிக்கும், எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெயர் கொண்ட பிள்ளையாரும் மிகவும் பிரசித்தம்.
🏯 இத்தலத்தினை தம்பதியர்களாக வந்து வணங்கி செல்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
தாணுமாலயத் தீர்த்தம் :
🏯 சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது தாணுமாலயத் தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது. சித்திரை மாதம் தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி மாதத்தில் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக