கறுப்புப்பண விவகாரம் பற்றிப் படித்துப் பார்த்தால், பல பூதங்கள் கிளம்புகின்றன. அவற்றை எளிமையாக தெரியப்படுத்தவே இந்த பதிவு.
1. இப்போது மோதி அரசாங்கம் செய்திருக்கும் வேலை இதற்கு முன்னரே இந்தியாவில் ஒருசில முறைகள் செய்யப்பட்டிருக்கிறது. 1946ல் இதேபோல் 1000 மற்றும் 10,000 (பத்தாயிரம். யெஸ்) ரூபாய் நோட்டுகள் அரசால் தடைசெய்யப்பட்டன. அது இந்தியா சுதந்திரம் அடையாத காலம். அதன்பின், சுதந்திரம் பெற்று, 1954ல் மறுபடியும் 1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் அரசால் கொண்டுவரப்பட்டன. இம்முறை 5000 ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
2. 1978ல், ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மறுபடியும் 1000, 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகளை நாம் பார்க்கவே இல்லை.
எனவே, பல வருடகாலம் நாமெல்லாம் 5000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்களை உபயோகித்து வந்தவர்கள்தான். வேண்டுமென்றால் உங்கள் பெற்றோர்களை/தாத்தா பாட்டிகளைக் கேட்கவும்.
3. அடுத்ததாக, கறுப்புப் பணம், அரசின் இந்த நடவடிக்கையால் ஒழியுமா?
எளிமையாக யோசித்துப் பார்த்தால், மோதி அரசு, பதவிக்கு வருமுன்னர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன? வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வேன் என்பதுதான். இதைப் பலமுறை மோதி பல கூட்டங்களில் பேசியுள்ளார். ஒவ்வொரு இந்தியனுக்கும் 10-15 லட்சம் அவர்களின் வங்கியில் போடப்படும் என்பதே மோதி அரசு கொடுத்த பிரதான வாக்குறுதி. இந்தப் பணம் எப்படிப் போடப்படும்? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்படும். அப்பணம் சமமாகப் பிரிக்கப்பட்டு இந்தியர்களின் வங்கியில் போடப்படும். ஓகே. மோதி பிரதமரானார். பணம் போடப்பட்டதா? இதுவரை இல்லை. ஏன்? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல்களாவது பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டதா?
இதுவரை இல்லை.
இது ஏன்? மோதி அரசால், வாக்குறுதி கொடுத்தபடி ஏன் கறுப்புப் பணத்தை நமக்குக் கொடுக்க முடியவில்லை? அட - பணம் கொடுக்க வேணாம்யா. அட்லீஸ்ட் யாரிடம் எவ்வளவு கறுப்புப் பணம் முதலீடுகளாகவும் பிற நாட்டுப் பணமாகவும் வங்கிகளிலும் வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளது என்பதையாவது பகிரங்கப்படுத்தலாமே? அதை எது தடுக்கிறது?
விடை: அப்படிப்பட்ட பகிரங்கப்படுத்தப்பட்ட கறுப்புப் பணப்பட்டியல் வெளிவந்தால், பீஜேபி அரசே ஆட்டம்கண்டுவிடும் என்பதுதான் உண்மை. எந்த அரசாலும் இதைச் செய்ய இயலாது. காரணம் எந்த அரசுக்கும் பணம் கொடுத்து அவர்களின் கட்சிகளைத் தாங்கிக்கொண்டிருப்பவர்கள் இப்படிப்பட்ட பெருமுதலாளிகளே. இது நம் எல்லாருக்கும் தெரியும். இருந்தும், மோதி, மனதறிந்து பொதுக்கூட்டங்களில் நம் கணக்கில் பணம் போடுவதாகப் பொய் சொன்னபோது அதைக் கைதட்டி ஆரவாரம் செய்து நாம் வரவேற்றோம். ஏன்? நமக்குத் தேவை ஒரு சூப்பர்ஹீரோ. முதல்வன் அர்ஜுன் போல. அது மோதிதான் என்பது நம் கனவாக இருந்தது (மோதியின் பின்னால் இருக்கும் இருண்ட, மதவாத சரித்திரம் தெரிந்திருந்தாலும் கூட).
ஆனால் அது பலிக்கவில்லை. மோதியும் பிற பிரதமர்கள் போலத்தான் கறுப்புப் பண விவகாரத்தில் மௌனம் சாதித்தார்.
4. சரி. மோதி பொய்யாக வாக்குறுதி அளித்ததுபோல, இந்தியர்களின் கறுப்புப் பணம் வெளிநாடுகளில்தான் உள்ளதா? இதைப்பற்றி எப்படி அறிவது?
இணையமெங்கும் இதைப்பற்றிய தகவல்கள் இறைந்து கிடக்கின்றன. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட கறுப்புப் பண கமிஷன்கள் பற்றி நீங்களே தேடிப் படித்துக்கொள்ளலாம். நான் அப்படித்தான் படித்தேன். அந்தக் கமிஷன்கள் கொடுத்த அறிக்கைகள் எல்லாமே இணையத்தில் உள்ளன.
சாம்பிளுக்கு ஒரு தகவல் மட்டும் இங்கே தருகிறேன்.
2008ல், தில்லியில், பீஜேபியின் அசோகா சாலை அலுவலகத்தில் இரண்டு கோடி ரூபாய் காணாமல் போகிறது. இரண்டு கோடி என்பது அரசியல் கட்சிகளுக்குப் பிசாத்துப் பணம்தான். இருப்பினும், கட்சிப்பணம். ஆனால் பீஜேபி போலீஸிடம் புகார் அளிக்கவில்லை. ஏன்? அந்தப் பணத்தைக் கொடுத்தவர் ஒரு காங்கிரஸ் புள்ளி. அவருக்குச் சட்டீஸ்கரில் வேண்டிய வேலை நிறைவேறியதும் பணமாக இதை அளித்தார். கணக்கில் வராத பணம். எனவே போலீஸ் புகார் தவிர்க்கப்பட்டது. இதை நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளமுடியும்.
இது ஒரு உதாரணம் மட்டுமே. காங்கிரஸ், பீஜேபி முதலிய கட்சிகளுக்கு இப்படிக் கோடிக்கணக்கில் பணம் உண்டு. அவை நன்கொடைகளாகவே பெறப்படுபவை. ஆனால் யார் அதை அளிக்கிறார்கள் என்பதை அவர்கள் பொதுமக்களுக்கு இதுவரை வெளிப்படையாகச் சொன்னதில்லை. அதாவது, கணக்குக் காட்டியதில்லை. அரசியல் கட்சிகளுக்கு 100% வரிவிலக்கு உண்டு. ஆனால் ஒரே நிபந்தனைதான். ஒவ்வொரு வருடமும் அவர்களின் டாக்ஸ் ரிடர்ன்களை அவர்கள் ஃபைல் செய்யவேண்டும். இது தவறினால், அந்த 100% வரிவிலக்கு விலக்கிக்கொள்ளப்படும் (செக்ஷன் 139 4பியின் படி). இருப்பினும் டாக்ஸ் ரிடர்ன்களை எந்தக் கட்சியும் பல வருடங்கள் தாக்கல் செய்ததே இல்லை. இது ஏன்?
சுப்ரீம் கோர்ட், இதை எதிர்த்து 1996ல் ஒரு ஆணை பிறப்பிக்கிறது. அதன்பின் கட்சிகளுக்கு வேறு வழி இல்லை. டாக்ஸ் ரிடர்ன்கள் ஃபைல் செய்தே ஆகவேண்டும். ஆனால் மிக மிக ரகசியமாகவே இதனைச் செய்ய ஆரம்பித்தன. யாருக்கும் அவை எவ்வளவு ரிடர்ன்ஸ் தாக்கல் செய்கின்றன என்பதே தெரியாமல் இருந்தது. இதன்பின் ஒரு RTI பதிவு செய்யப்படுகிறது. அதன்கீழ், ஒவ்வொரு கட்சியின் டாக்ஸ் ரிடர்ன்களும் பொதுவில் வைக்கப்படவேண்டும் என்று கோரப்படுகிறது. இதெல்லாம் காங்கிரஸ் காலத்தில் நடந்தன. அதன்பின் மோதி அரசாங்கம் பதவி ஏற்கிறது. இந்த RTI மனுவுக்கு, காங்கிரஸ் அளித்த அதே பதிலையே மோதி அரசும் அளிக்கிறது. அது - ‘அப்படியெல்லாம் பொதுவாகக் கட்சிகளின் டாக்ஸ் ரிடர்ன்களை வைக்க இயலாது. இந்த விஷயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடே பீஜேபியின் நிலைப்பாடும் ஆகும்’ என்பதே அந்தப் பதில். இது ஏன்?
இதுதான் நிதர்சனம். ஊழல்வாதிகள்தான் கட்சிகளை வாழவைக்கிறார்கள்.
5. அப்படியென்றால் இப்போது மோதி அரசு அறிவித்துள்ள நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம்? இதனால் என்ன நன்மை?
கறுப்புப் பணம் என்பது மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்கப்படும் பணம் அல்ல. மாறாக, தங்கம், நிலம், தீவுகள், நிறுவனங்களின் மேலான முதலீடுகள், திரைப்படங்கள் என்று பலப்பல வடிவங்கள் எடுத்து நாடெங்கும் பயணிப்பதே கறுப்புப்பணம். நோட்டுகளைத் திரும்பப்பெறுவதால் கறுப்புப்பணம் ஒருபோதும் ஒழியாது. அப்படி ஒழிந்திருக்கும் என்றால், ஏற்கெனவே இரண்டு முறைகள் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டனவே? அப்போதெல்லாம், நாம் பார்த்தே இராத 5000,10000 நோட்டுகள்வேறு திரும்பப்பெறப்பட்டிருக்கின்றன!! அப்போதெல்லாம் கறுப்புப்பணம் ஒழிந்ததா?
எனவே, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கையில் சேமிப்பாக 500, 1000 ரூ நோட்டுகளை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் ஆகிய வர்க்கங்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படப்போகின்றன. கூடவே, ‘பார்.. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் எனது திட்டத்தைப் பார்’ என்று உத்தரப் பிரதேசத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் போலியாகப் பறைசாற்றிக்கொள்வதற்கே இது உதவப்போகிறது. பண முதலைகள் எல்லாம் ஏற்கனவே கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பாக, வெளிநாட்டுக் கரன்ஸிகளாகவும் முதலீடுகளாகவும் மாற்றியாகிவிட்டது. இதை நாம், உணர்ச்சிவசப்பட்டுக் கூக்குரல் இடும் இந்த நேரத்தில் நினைவில் வைக்கவேண்டும்.
ஆங்காங்கே சிலர் கண்டிப்பாக மாட்டுவார்கள்தான். அவர்கள் எல்லாம் மிகச்சிறு முதலைகள். இவர்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கறுப்புப் பண விகிதமும் இவர்களால் பாதிக்கப்படமாட்டாது.
கறுப்புப் பணத்தை ஒழித்து, அனைவரின் வங்கி அக்கௌண்ட்டிலும் 10-15 லட்சம் போடுவேன் என்றீர்களே? அது எங்கே? என்ற தொடர்ச்சியான குரல்களை மழுங்கடித்து, தேர்தல் வரும் வேளையில் ஒரு அரசியல் ஸ்டண்ட் அடிக்கவேண்டும் என்று நினைக்கும் மோதி அரசின் வேலைதான் இந்தத் திட்டம்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்றால், பல்லாண்டுகளாகக் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் அரசியல் கட்சிகள் அவர்களின் நன்கொடைகளைப் பொதுவில் வைக்கவேண்டும் என்ற பிரச்னையைத்தான் முதலில் பீஜேபி கையில் எடுத்துக்கொண்டு, தன்னிடம் மடியில் கனமில்லை என்று நிரூபித்திருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, காங்கிரஸ் போலவே, கோடிக்கணக்கான நன்கொடை வருமானம் யார் கொடுத்தது? அதன் மூலம் என்ன? அது எல்லாமே வெள்ளைப்பணம்தானா? அதையெல்லாம் வெளியே சொல்லமாட்டேன் என்று பம்மிக்கொண்டே இப்படி நடுத்தரவர்க்கத்தின் வயிற்றில் அடிக்கக்கூடாது.
இதைப்பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக