
நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.
பண்டைய காலங்களில் தென்னிந்தியாவில் செட்டிநாடு சமுதாயம் மட்டுமே இந்தக் கவுனி அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தியது. இன்றும்கூட, செட்டிநாடு திருமணங்களில் கவுனி அரிசியில் செய்யப்பட்ட ஓர் இனிப்பு வகை இடம்பெறுகிறது. இதன் சிறப்பைப் புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


கவுனி அரிசியின் தனிச் சிறப்பே அதன் கறுப்பு நிறம்தான். கறுப்பு நிறத்துக்குக் காரணமாக இருப்பது ‘ஆன்தோசயானின்’ என்னும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், ஊதா முட்டைகோஸ், மாதுளை, கறுப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ‘ஆன்தோசயானின்’ நிறமியைக் கொண்டுள்ளது. இந்த நிறமிகள், இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்பாடுகளையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசியோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவுச்சத்தையும் அதிகமான புரதம், இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.
இந்த அரிசியில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் இருக்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதய நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நம்மைக் காப்பாற்றுகிறது. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி (இன்னும் பல)போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.


கவுனி அரிசியும் பழுப்பு அரிசியைப்போன்ற சுவையைக் கொண்டதுதான். சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சமைத்தால் எளிதாக இருக்கும். உணவும் மென்மையாக இருக்கும். இன்று மளிகைக் கடைகளில்கூட கவுனி அரிசி விற்பனைக்குக் கிடைக்கிறது. கவுனி அரிசியின் முழுப்பயன்களும் அதன் மேல்பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில்தான் இருக்கிறது. அதனால் வாங்கும்போதே முழுக் கவுனி அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக