பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளில்
வண்ண வண்ண ஆடைகள் இருப்பதில்லை .
வானொலியின் பாடலோடு
சேர்ந்து பாடும்
தேவதைகளின் குரலங்கு ஒலிப்பதில்லை.
பூக்கள் விற்பவன் மணியோசையால்
அவ்வீடு அடிக்கடி ஆசீர்வதிக்கப் படுவதில்லை.
பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகளில்
பொம்மைகளின் கைகால்களும்
உடைந்துபோகின்றன.
வரவேற்பறை சாய்விருக்கை விரிப்புகள்
சண்டையில் கிழிந்த சட்டையாக
மாறிப் போகின்றன.
தொட்டி குரோட்டன் செடிகளும்
தோட்டத்து வாதாம் மரமும்
சபிக்கப்பட்ட வாழ்க்கைக்குப் பழகிக் கொள்கின்றன .
பெண் பிள்ளைகள் இல்லாத வீடுகள்
உண்ணுகின்றன,
உடுத்துகின்றன,
உறங்குகின்றன,
பேசுவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக