புதன், 15 ஜனவரி, 2020

30% இந்தியர்களைப் பாதிக்கும் இன்சோம்னியா... அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் முறைகள்!


30% இந்தியர்களைப் பாதிக்கும் இன்சோம்னியா... அறிகுறிகள், சிகிச்சைகள், தடுக்கும் முறைகள்!

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்தைச் சமீபத்தில் பார்க்க நேரிட்டது. அந்தத் திரைப்படத்தில் இன்சோம்னியா (Insomnia) குறித்து சில தகவல்கள் சொல்லப்பட்டிருந்தன. படத்தின் கதைப்படி, கதாநாயகனுக்கு நாள்பட்ட இன்சோம்னியா நோய் (Chronic Insomnia) பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதன் காரணமாக ஏற்படும் திருப்பங்கள், நாயகனுக்கு எதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது போன்றவற்றை விவரிக்கிறது படம்.

நாயகன் மாதக்கணக்கில்கூட தூங்காமல் இருப்பார். ஒரு கட்டத்தில் மருத்துவர்கள் அவரிடம், "இன்றைக்கு நீங்கள் தூங்கவில்லை என்றால், உங்கள் உடல் உறுப்புகள் யாவும் ஒன்றின் பின் ஒன்றாகப் பாதிக்கப்பட்டு இறுதியில் இறப்பு கூட ஏற்படலாம்" என்பார்கள்.

மனிதர்களுக்கு நிம்மதியைத் தருவது தூக்கம் என்றால் மிகையில்லை. சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். ஆனால், யாராலும் தூங்காமல் இருக்க முடியாது. அப்படியே கண் விழித்தாலும் அதன் தாக்கம் நம் உடலில் அசதியை ஏற்படுத்துவதை நாம் அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.

 'சரி, உண்மையிலேயே தூக்கமின்மை இவ்வளவு ஆபத்தான பாதிப்பா?',  'தூங்காமல் இருப்பதால் உயிரிழப்புகூட ஏற்படுமா?'

'ஆம், தூக்கமின்மை என்பது உண்மையில் மிகப்பெரிய பிரச்னைதான்'  என்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய சூழலில், இந்தியாவில் 30 சதவிகித முதியோர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது தனியார் நிறுவனம் நடத்திய ஓர் ஆய்வு. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இன்சோம்னியா பாதிப்பால் ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் வரை இறக்கின்றனர்.

"தூக்கமின்மையில், முதல்நிலை இன்சோம்னியா (Primary Insomnia), இரண்டாம் நிலை இன்சோம்னியா என இரண்டு நிலைகள் உண்டு.

'குறிப்பிட்ட இந்த நிகழ்வுதான் என்னைப் பாதித்துள்ளது' என்று நோயாளியால் கூற முடியாது. மனம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கு  முதல்நிலை இன்சோம்னியா வரக்கூடும். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு பல நாள் தூக்கமின்மைக்குப் பிறகு என்றோ ஒருநாள்தான் நிம்மதியான தூக்கம் வரும். பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தோடு இருப்பது, கண்கள் சிவந்திருப்பது போன்ற பிரச்னைகளும் இவர்களுக்கு இருக்கும்.

இரண்டாவது நிலை இன்சோம்னியா (Secondary Insomnia), குறிப்பிட்ட ஏதாவதொரு காரணத்தால் ஏற்படுவது. மூட்டு வலி, கை, கால் வலி,

புகை அல்லது மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் என்று  உடல்சார்ந்த மற்றும் மனரீதியான ஏதோ ஒரு மாற்றத்தின் காரணமாக ஏற்படுவதாகும்.

மேற்கூறிய இரண்டு வகை தூக்கமின்மைக்கும் அடிப்படை காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்வதன் மூலம் நிரந்தரமாகக் குணப்படுத்தமுடியும். இரண்டாவது வகை இன்சோம்னியாவைக்  குணப்படுத்துவது எளிது. ஏனெனில், அதற்கு 'காரணி' தெரியும். முதல் நிலை இன்சோம்னியா பாதித்தவர்களுக்கு அதற்கான காரணத்தைக் கண்டறிவது கடினம். தூக்க மாத்திரை தருவது, தூக்க ஒழுக்கத்தை (Sleep Discipline) பின்தொடரப் பரிந்துரைப்பது போன்ற சிகிச்சை முறைகள் தரப்படும். அதன் மூலம் அவர்களைத்  தூங்க வைக்கலாம். காரணம், தூங்காமலேயே இருந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே, ஓய்வு கட்டாயம் தேவை. பொதுவாக, தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்களுக்கும்கூட ஒரு கட்டத்துக்குமேல் உடல் தானாக சிறு ஓய்வை (குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள்) எடுத்துக்கொள்ளும்..." என்கிறார் தூக்கவியல் நிபுணர் ஜெயராமன்.

மேலும், ''தூக்கமின்மையின்போது ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து, இரண்டு விதமாக அதைப் பிரிக்கலாம். குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் தூக்கமின்மை ஏற்படுவது கூர்மையான பாதிப்பு (Acute Insomnia) என்றும், தொடர்ந்து பல நாள்களுக்கு இருப்பது நாள்பட்ட பாதிப்பு (Chronic Insomnia) என்றும் குறிப்பிடப்படுகிறது.

கூர்மையான பாதிப்பு என்பது ஒருமாதத்துக்கும் குறைவான நாள்களே இருக்கும். அதற்குள் உடல் அசதி ஏற்பட்டுச் சம்பந்தப்பட்ட நபர் தன்னையறியாமல் தூங்கிவிடுவார். வாழ்வில் ஏற்பட்ட ஏதாவதொரு நிகழ்வால் வரும் மனஅழுத்தம், பணிச்சுமை, அதீத கவலை, அதீத சந்தோஷம் போன்றவை ஏற்படுத்தும் தற்காலிக தூக்கமின்மை பிரச்னைகள்தான் இந்த வகையில் வரும்.

நாள்பட்ட பாதிப்புகள், ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும். மன அழுத்தம் அதிகமாகி, ஹார்மோன் யாவும் வேகமாக மாற்றம் பெறத்தொடங்கும். நாள்பட்ட தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளை அளவுக்கு மீறி எதிர்கொண்டால், ரத்தஅழுத்தம் அதற்கேற்ப குறையும் (Low B.P) அல்லது அதிகரிக்கும் (High B.P). அடிக்கடி உணர்ச்சிவசப்படும்போது உடலில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அதனால் இப்படிப்பட்டவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. இப்படியான ஹார்மோன் மாற்றங்கள், தூக்கம் வருவதை மேலும் கெடுக்கும். உடல் சோர்வு, மனச் சோர்வு, ஞாபகசக்தி குறைபாடு எனப் பக்கவிளைவுகளும் ஏற்படலாம். இரண்டாவது வகை இன்சோம்னியா (Secondary Insomnia) ஏற்படுபவர்களுக்குத்தான் நாள்பட்ட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக